வலிகாமம் வடக்கில் அதிபாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள வீடுகள் படையினரால் இடித்து அழிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை காங்கேசன்துறை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள அம்மன் கோயில், பிள்ளையார் கோயில், நாகதம்பிரான் ஆலயம் மற்றும் நடேஸ்வராக்கல்லூரி என்பன படையினரால் இடித்து அழிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
வீடுகளை இடித்த படையினர் தற்போது ஆலயங்களையும் பாடசாலையையும் இடித்து அழித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தமிழ் மக்களின் மனங்களை வேதனைக்கு உள்ளாகியுள்ளது. இந்த ஆலயங்களும் பாடசாலையும் படையினரால் இடித்து அழிக்கப்பட்டுள்ளன என்று வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றக்குழுவின் தலைவர் எஸ். சஜீவன் ஊடகங்களுக்கு தகவல் வழங்கியிருந்தார்.
இந்த விடயம் குறித்து வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் வியாழக்கிழமை உண்மை நிலையினைக் கண்டறிவதற்காக வடமாகாண முதலமைச்சர் காங்கேசன்துறை பகுதிக்கு சென்றிருந்தார். ஆனால் அவரை காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு அப்பால் செல்வதற்கு படையினர் அனுமதிக்கவில்லை.
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு முன்னால் உள்ள காவலரணில் கடமையிலிருந்த இராணுவத்தினர் முதலமைச்சரையும் அவரது குழுவினரையும் மறித்து திருப்பி அனுப்பியுள்ளனர். அதிபாதுகாப்பு வலயத்திற்குள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றால் மட்டுமே எவரையும் அனுமதிக்க முடியும் என்று படையினர் முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளனர். வடமாகாணத்தின் முதலமைச்சர் நான் என்றும் கோயில்கள், இடிக்கப்படுவதாகவும், பாடசாலை தகர்க்கப்பட்டுள்ளதாகவும் கிடைத்த செய்தியை அடுத்தே அதன் உண்மைத்தன்மையைப் பார்வையிட தான் வந்ததாகவும் முதலமைச்சர் எடுத்துக்கூறியபோதும் அதற்கு படையினர் செவிசாய்க்கவில்லை. மாறாக அவருக்கு அனுமதி மறுத்து திருப்பி அனுப்பியுள்ளனர்.
வடமாகாண முதலமைச்சரே கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளதாக செய்தி அறிந்து உண்மை நிலையை அறிவதற்கு சென்றபோதிலும், அதற்குக் கூட படையினர் அனுமதி வழங்கவில்லை. இதிலிருந்து குடாநாட்டின் நிலவரமானது எவ்வகையில் அமைந்துள்ளது என்பதை அறிந்துகொள்ள முடிகின்றது.
வலிகாமம் வடக்குப் பகுதியில் 6300 ஏக்கர் காணிகள் படையினரால் சுவீகரிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் காணிகள் இவ்வாறு சுவீகரிக்கப்பட்டமைக்கு எதிராக நூற்றுக்கணக்கான மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றத்தில் இந்த மனுக்கள் தொடர்பான விசாரணை இடம் பெற்று வருகின்றது. இந்த நிலையில் அந்தப் பகுதிக்குள் உள்ள வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன. கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இந்த விடயம் குறித்து தெரியவந்ததையடுத்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடன் இந்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
அத்துடன் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் கவனத்திற்கும் இந்த விடயம் கொண்டுவரப்பட்டிருந்தது. இதனையடுத்து வீடுகளை உடைக்கும் நடவடிக்கையை நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும், இது தொடர்பில் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவிற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் சம்பந்தன் எம்.பி.க்கு ஜ-னாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்திருந்தார்.
இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் சம்பந்தன் எம்.பி.க்கு அறிவித்த மறுநாளே அங்கு வீடுகள் தொடர்ந்தும் இடித்தழிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இது குறித்து கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் கவலை வெளியிட்டிருந்தார்.
வலிகாமம் வடக்குப் பகுதியில் வீடுகள் இடிக்கப்படுகின்ற விடயமானது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட பின்னரும் தொடர்ந்து வந்தது. தற்போது ஆலயங்களும் பாடசாலையும் இடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படையினரால் சுவீகரிக்கப்பட்ட 6300 ஏக்கர் காணிகளில் தமக்கேற்ற கட்டடங்களையோ, வீடுகளையோ படையினர் அமைக்க முயற்சிக்கலாம். அதற்காகவே இந்த வீடுகளும் பாடசாலைகளும், கோவில்களும் உடைக்கப்படுவதாக தெரிகின்றது.
வலிகாமம் வடக்கு பகுதியில் இருந்த ஆலயங்கள், இடித்தழிக்கப்படுகின்றமை இந்து மக்களின் உணர்வைப் புண்படுத்தும் செயலாகும் என்று அகில இலங்கை இந்து மாமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டதையிட்டு இந்து மக்கள் எல்லோரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைகின்றோம். பாதுகாப்பு வலயத்தில் என்ன நடக்கின்றது என்பது இருட்டடிப்பு செய்யப்படுவதுடன் அவ்விடத்திற்கு சென்று உண்மையை அறிய முற்பட்ட போது முதலமைச்சர் விக்கினேஸ்வரன் திருப்பி அனுப்பப்பட்டமைக்கு நாம் கண்டனங்களை தெரிவிக்கின்றோம் என்று அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
காங்கேசன்துறை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள அம்மன் கோவில், பிள்ளையார் கோவில் மற்றும் நாகதம்பிரான்கோவில் ஆகியன யுத்தத்தின்போது பாதிப்புக்களை சந்தித்தபோதிலும், கட்டிடங்கள் அப்படியே இருந்துள்ளன. இரண்டு வருடங்களுக்கு முன்னர் இப்பகுதிக்கு சென்ற அம்மன் கோவில் பூசகரான கணேசமூர்த்தி சர்மா இதனை உறுதிப்படுத்துகின்றார்.
இந்த ஆலயங்கள் இடிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி தமக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உண்மையிலேயே பாடசாலை மற்றும் ஆலயங்கள் இடிக்கப்பட்டிருந்தால் அது தவறான செயற்பாடேயாகும். பொதுமக்களின் வீடுகள் இடிக்கப்பட்டுவரும் நிலையில் அதுவே தமிழ் மக்களின் மனங்களில் பெரும் வேதனையை ஏற்படுத்தியிருந்தது. தற்போது ஆலயங்கள் பாடசாலை என்பன இடிக்கப்படுகின்றமை தமிழ் மக்கள் மத்தியில் ஆறாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
6300 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம் பெற்று வருகின்றது. இந்த நிலையில் அந்த காணிகளுக்குள் உள்ள வீடுகளையோ, ஆலயங்களையோ அல்லது பாடசாலைகளையோ இடித்து அழிப்பது என்பது நீதிமன்றத்தையே அவமதிக்கும் செயற்பாடாகும். வழக்கொன்று நிலுவையில் உள்ள நிலையில் அதற்கான தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் அந்தக்காணிகளில் உள்ள சொத்துக்கள் அழிக்கப்படுகின்றமை சட்டத்திற்கு முரணானதேயாகும்.
தற்போது யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. அதிபாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த பொதுமக்களின் காணிகள் படிப்படியாக மீள வழங்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்து வருகின்றது. ஆனாலும் நடைமுறையில் எதிர்மாறான விடயங்களே இடம் பெற்று வருகின்றன.
யாழ்.குடாநாட்டில் பலாலி இராணுவ முகாமுக்கு அண்டிய பகுதிகளை மட்டும் பாதுகாப்பு வலயமாக வைத்துக் கொண்டு ஏனைய பகுதிகளை விடுவித்து பொதுமக்களை அவர்களது சொந்த காணிகளில் குடியிருக்க அரசாங்கம் அனுமதிக்கவேண்டியது இன்றியமையாததாகும். இதனை விடுத்து 6300 ஏக்கர் காணிகளை சுவீகரித்து அவற்றை இராணுவத் தேவைக்காக பயன்படுத்த முயல்வதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றனர்.
எனவே கோவில்கள், பாடசாலைகள், வீடுகள் என்பவற்றை இடித்தழிக்கும் செயற்பாட்டினை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். ஜனாதிபதி மஹிந்த ாஜபக் ஷவே இந்த விடயத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் உறுதிமொழி வழங்கியிருந்தார். வீடுகளை உடைப்பதை நிறுத்துமாறு அவர் உத்தரவும் பிறப்பித்திருந்தார். எனவே ஜனாதிபதியின் இந்த உத்தரவு உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும். பொதுமக்களின் காணிகள் அவர்களிடமே வழங்கப்படவேண்டும்.
No comments
Post a Comment