இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்திற்கும் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம் கடந்த செப்டெம்பர் மாதம் முடிவடைந்த நிலையில் புதிய கூட்டு ஒப்பந்தம் சம்பந்தமாக இரு சுற்றுப் பேச்சு வார்த்தை முதலாளிமார் சம்மேளனத்துடன் நடைபெற்றது.
அப்பேச்சுவார்த்தையில் நியாயமான சம்பள உயர்வு கிடைக்காத காரணத்தால் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கிங்ஸ்லி இராஜேந்திரன் 14நாட்கள் அவகாசம் கேட்டு முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற் திணைக்களத்திற்கும் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
இதனையடுத்து கடந்த புதன்கிழமை கொழும்பிலுள்ள தொழில் திணைக்களத்தில் இரு சாராரையும் அழைத்து உதவி தொழில் அதிகாரி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதியில் அந்த அதிகாரி பெருந்தோட்டத்துறைக்கு தீங்கு ஏற்படாத வண்ணம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்று அறிவுரை வழங்கியதாக சங்கத்தின் பொதுச் செயலாளர்
கேசரிக்கு தெரிவித்தார்.
இந்த பேச்சு வார்த்தையில் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் தம்பிக்க ஜயவர்தன, பொதுச் செயலாளர் மற்றும் உப தலைவர்களும் முதலாளிமார் சம்மேளனத்தின் சார்பில் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இது தொடர்பில் சங்கத்தின் பொதுச் செயலாளர் கூறுகையில்,
ஐந்து வருடத்திற்கு கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம் கடந்த செப்டெம்பர் மாதத்துடன் முடிவடைந்து விட்டபின் புதிய கூட்டு ஒப்பந்தம் சம்பந்தமாக இரு சுற்றுப் பேச்சு வார்த்தை முதலாளிமார் சம்மேளனத்துடன் நடைபெற்றது. இருந்த போதிலும் அவற்றில் ஒரு சில கோரிக்கைகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டன. முக்கியமான கோரிக்கையான இன்றைய வாழ்க்கைச் செலவிற்கேற்ப சம்பள உயர்விற்கு அவர்கள் முக்கிய கவனம் செலுத்தவில்லை.
எமது தொழிற்சங்கம் இப் பேச்சுவார்த்தை மீது நம்பிக்கை வைத்துள்ளது. கடந்த 93ஆண்டுகள் பேச்சுவார்த்தை மூலம் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளோம்.
ஆகவே, தொழிற்திணைக்களத்தின் அதிகாரியின் அறிவுரையின்படி தோட்ட உத்தியோகஸ்தர்களுக்கு திருப்திகரமான சம்பள உயர்வை வழங்குவதுடன் ஏனைய கோரிக்கைகளுக்கும் நல்ல தீர்வினை பெற்றுக் கொடுக்க முதலாளிமார் சம்மேளனம் முன்வரவேண்டும்.
No comments
Post a Comment