மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மேய்ச்சல் தரைப்பிரச்சினைக்கு தீர்வு காண பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் விரைவில் கூட்டமொன்றைக் கூட்டுவதற்கு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தீர்மானம் எடுத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள இப்பிரச்சினை குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, அமைச்சர் தென்னக்கோன் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனைக் குழுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காணி மற்றும் காணி அபிவிருத்தி பிரதியமைச்சர் சிறிபால கம்லத், அமைச்சின் செயலாளர் அசோக பீரிஸ் மற்றும் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது வெளி மாவட்டத்தவர் அத்துமீறிப் பிரவேசித்து மேய்ச்சல் தரைகளில் விவசாயம் செய்துள்ளமையால் அவர்களை அப்புறப்படுத்தி பிரச்சினைக்கு தீர்வு காண அமைச்சர் முன்வர வேண்டும் என வேண்டுகொள் விடுத்ததாகவும் தெரிவித்தார்.
இவற்றை செவிமடுத்த அமைச்சர் மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அரசாங்க அதிபர்கள் ஆகியோரை கொழும்புக்கு வரவழைத்து அவர்களுடன் ஆராய்ந்து தீர்வு காண்பதாக பதிலளித்தாகவும் அவர் கூறினார்.
No comments
Post a Comment