போரின் இறுதி நாட்களில் மத்திய அரசாங்கம் இராணுவ பலத்தை 3 இலட்சம் வரை அதிகரித்துள்ளது. போர் முடிந்த பின்னரும் வடக்கில் இராணுவத்தை நிறுத்தியுள்ளதால் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதுடன் எமது மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு தொழில்வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டுள்ளன என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். காணியின்றி தொழிலின்றி வேறு வழியின்றியே எமது மக்கள் அவுஸ்ரேலியாவுக்கு செல்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
விஸ்வமடு விவசாய பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் நவீன அரிசி ஆலையை நேற்று மாலை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
சட்டவிரோதமாக எமது மக்கள் அவுஸ்ரேலியாவுக்கு செல்கின்றமை இன்று இரு நாடுகளுக்கும் இடையிலான பெரும் பிணக்காக உள்ளது. இவ்வாறு மக்கள் செல்வதற்கு பல காரணங்கள் காணப்படுகின்றன. முதலாவதாக வடமாகாணம் இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கின்றமையினை நான் அவுஸ்ரேலிய நாட்டின் பிரதிநிதிகளுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அதாவது மக்களுடைய காணிகளை இராணுவத்தினர் அபகரித்துள்ள நிலையில் மண்ணின் சொந்தக்காரர்கள் வாழ இடமின்றி நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இரண்டாவதாக தென்பகுதி மக்களை வடபகுதிக்குக் கொண்டுவந்து குடியேற்றி இங்கிருந்த எமது மக்கள் சொந்த இடங்களிலிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தங்களை ஏற்படுத்துகின்றார்கள். இதற்கு இராணுவமும் ஒத்துழைத்து வருகின்றது. மூன்றாவதாக இப்பகுதியில் எமது மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்கள் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். இத்தகைய சம்பவங்கள் யாரால் மேற்கொள்ளப்படுகின்றன எனத் தெரிந்துகொண்டும் பொலிஸார் எதுவுமே செய்யமுடியாத நிலையில் இருக்கின்றார்கள். நான்காவதாக வடக்கில் தொழில்வாய்ப்பற்ற நிலை காணப்படுகின்றது. வறுமையின் பிடிக்குள் சிக்கித் தவிக்கின்ற எம்மக்களுக்கு உரிய தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்க முடியாத நிலையில் நாம் இதுவரை காலமும் இருந்துவந்துள்ளோம்.
எமது மக்களுடைய காணிகளில் இராணுவமும் கடற் படையினரும் தொழில் செய்து வருகின்றனர். இப்பிரதேசத்தில் வர்த்தக நடவடிகைகளையும் தேநீர்க் கடைகளையும் இராணுவத்தினர் நடத்தி வருகின்ற நிலையில் எமது மக்களுக்கு தொழில்வாய்ப்புக்கள் எங்கிருந்து கிடைக்கப்போகின்றன?
ஆகவே எமது மக்கள் தொழில் இல்லாமல், குடியிருக்க காணிகள் இல்லாமல், வாழ்வதற்கு வேறு வழி தெரியாமல் அவுஸ்ரேலியாவுக்கு கடல் கடந்து செல்ல முற்படுகின்றார்கள்.
அவுஸ்ரேலியாவுக்குச் சென்றால் சொர்க்கத்துக்குச் செல்லலாம் என்ற எண்ணத்தை எமது மக்களுக்கு காட்ட முற்படுகின்றனர். அப்பாவி மக்களும் அதனை நம்பிவிடுகின்றார்கள். ஆனால் எமது பிரதேசத்தில் தொழில்வாய்ப்புக்கள் இருக்குமாயின் காணிகள் எல்லாவற்றையும் விற்றுவிட்டு ஏன் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டும். எனவேதான் வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் எனக் கேட்டு வருகின்றோம்.
இதனை நான் இராணுவத்துக்கு எதிராக கூறவில்லை. மாறாக நாட்டின் அரசாங்கத்தின் அரசியல் பார்வைக்கு எதிரான குரலாகவே தெரிவிக்கின்றேன்.
போரின் இறுதி நாட்களில் இராணுவ பலத்தை மத்திய அரசாங்கம் பலமடங்காக கூட்டியிருந்தது. இராணுவத்தினரின் எண்ணிக்கையை சுமார் 3 இலட்சம் வரை கூட்டியதாக கூறுகின்றார்கள். இது எமது சிறிய நாட்டுக்கு தேவையில்லாத ஒரு விடயமாகும். போர் முடிந்த பின்னர் இந்த இராணுவத்தினரை என்ன செய்வது என்ற பாரிய சிக்கல் அரசாங்கத்துக்கு எழுந்துள்ளது. அதனால் வடக்கில் இராணுவத்தினரை நிறுத்தியுள்ளனர். அவர்களை வட மாகாணத்தில் தரிக்கவிட்டு அவர்களுடைய குடும்பங்களையும் இங்கு கொண்டுவந்து குடியேற்றும் நோக்கத்திலேயே செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. போரின் பின்னர் கூட எமது மக்களுக்கு ஜனநாயக உரிமைகள் கூட கிடைக்கவில்லை. இதனை மாற்றியமைக்கும் வகையில் எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வின்போது கவனத்தை ஈர்க்க முனைகின்றோம். இலங்கையில் மிதமிஞ்சியுள்ள இராணுவத்தினரை ஐ.நா. பாதுகாப்பு படையில் இணைப்பதற்கோ அல்லது சமூக மாயபடுத்தவோ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு நான் கூறுவதால் எனக்கு எதிரான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படலாம். என்னை அழிப்பதால் நான் தியாகிப் பட்டம் பெற்றுவிடுவேன். மகாத்மா ஆகிவிடுவேன். ஆனால் உண்மைகள் என்றும் அழியாது. அது நிலைத்திருக்கும் என்றார்.
No comments
Post a Comment