அரசாங்கம் தகவல் அறியும் மக்களின் உரிமைகளைப் பறித்துள்ளதோடு அச்சமின்றி செய்திகளை எழுதும் ஊடகவியலாளர் மீது தேசத்துரோகம் மற்றும் புலி முத்திரைகளைக் குத்தி அவர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்குகின்றது என ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. கரு ஜயசூரிய சபையில் தெரிவித்தார்.
அரசாங்கத்தில் உள்ளோர் சபையில் வரவு – செலவுத் திட்டத்தை ஆதரித்தாலும், வெளியில் அதற்கு எதிரான கருத்துக்களையும் விமர்சனங்களையுமே வெளியிடுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திலேயே கரு ஜயசூரிய
எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
வரவு – செலவுத் திட்டம் என்றால் அந்தக் காலத்தில் மக்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் இருந்தது. ஆனால் இன்றைய அரசாங்கம் அந்த மதிப்பையும் மரியாதையையும் இல்லாது செய்துவிட்டது.
2014 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டமானது ராஜபக்ஷ குடும்பத்திற்காகவே அதிக நிதியை ஒதுக்கியுள்ளது. இதனால் மக்களுக்கு எந்த நன்மைகளும் இல்லை. எனவே மக்கள் இதனைக் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். எதிர்க்கின்றனர்.
வரவு – செலவுத் திட்டத்தில் 47 சதவீத நிதி ராஜபக்ஷவின் குடும்பத்தினருக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சுக்களுக்குத் தேவையான அளவு நிதி ஒதுக்கப்படவில்லை. இவ்வாறாறானதோர் சூழ்நிலையில் அரசாங்கத்தின் கொள்கைகள், செயற்பாடுகளை மூடிமறைப்பதற்காக ஊடகங்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றன. இச்செயற்பாடானது மக்களின் தகவல் அறியும் உரிமையைப் பறிக்கும் செயலாகும்.
இதனையும் மீறி உண்மைகளை எழுதும் ஊடகவியலாளர்கள் மீது தேசத்துரோகி, புலி முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்படுகின்றனர். அத்தோடு உண்மைகளை மக்களாலும் பேச முடியாத நிலை உருவாகியுள்ளது.
யுத்தம் முடிந்து 4 வருடங்கள் கடந்துவிட்ட போதும் போர் விமானங்கள் கொள்வனவு செய்யப்படுகின்றன. இது எதற்காக? இது மக்களை ஏமாற்றும் வரவு – செலவுத் திட்டம் என்பதை மக்களும் புரிந்து கொண்டுள்ளர். அரச தரப்பினர் நாடாளுமன்றத்திற் வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்தாலும் மனதுக்குள் குமுறிக் கொண்டுள்ளனர். அது மட்டுமல்லாது இதற்கு எதிரான கருத்துக்களையும் விமர்சனங்களையும் வெளியில் தெரிவிக்கின்றனர் என்றும் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
No comments
Post a Comment