முல்லைத்தீவில் பெருமளவில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடமாகாணசபை உறுப்பினர் துரைராச ரவிகரனின் வீடு அமைந்துள்ள முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் வழக்கத்திற்கு மாறான படைக்குவிப்பால் அங்கு பதற்ற நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பகலில் சிவில் உடை தரித்த இராணுவ புலனாய்வாளர்களின் நடமாட்டமும், இரவில் ஆயுதம் தரித்த படையினர் மற்றும் புலனாய்வாளர்களின் பிரசன்னமும் சடுதியாக அதிகரித்துள்ளன.
இதே வேளை, நேற்றிரவு முல்லைத்தீவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் சிலருக்கும் ரவிகரனுக்குமிடையில் ஒரு சந்திப்பொன்று ரவிகரனின் வீட்டில் இடம்பெறுள்ளது. சம்பவம் நடைபெற்ற சமயம் குறித்த சந்திப்பு பற்றியும், சந்திப்பில் பேசப்படும் விடயங்கள் தொடர்பிலும் அக்கிராமத்தைச் சேர்ந்த பலரிடம் புலனாய்வாளர்கள் விசாரித்துள்ளனர்.
இன்று அச்சந்திப்பில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி ஒருவரிடம் நேரில் விசாரணை நடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சற்றுமுன் அங்கிருந்து வரும் தகவல்களின் படி, முல்லைத்தீவு கள்ளப்பாட்டை சிலாவத்தையுடன் இணைக்கிற பாதையிலும், முல்லை நகருடன் இணைக்கிற பாதையிலும் தீர்த்தக்கரை கிராமத்துடன் இணைக்கிற பாதை மற்றும் கடற்கரை நோக்கி செல்கிற பாதைகள் ஆகியவற்றிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொன்றிலும் தலா பதினைந்திற்கும் மேற்பட்ட படையினர் நடமாடித் திரிவதாக பிரதேச மக்களின் தகவல்களிலிருந்து அறியமுடிகிறது. இதே வேளை கிராமத்திற்குள் புதிதாக இரவு வேளையில் உள் நுழைபவர்கள் விசாரிக்கப்படுகிறார்கள். இதனால் அப்பிரதேச மக்கள் இரவு வேளையில் வெளியில் வருவதை தவிர்த்துக் கொண்டுள்ளனர்.
திடீர் படைக்குவிப்பால் அப்பகுதியில் ஒரு பதற்ற நிலை நிலவுவதாக தெரியவருகின்றது. இராணுவத்தினர், புலனாய்வாளர்கள் என மொத்தமாக நூற்றிற்கும் மேற்பட்டவர்களின் நடமாட்டத்தால், இரவில் அப்பகுதியில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், முள்ளிவாய்க்கால் பகுதியில் பொதுக்கட்டிடங்கள் பலவற்றில் இன்று மாலை முதல் படையினரின் பிரசன்னம் அதிகரித்துள்ளது.சிலவற்றை தற்காலிகமாக மூடுவதாக பிரதேச மக்களிடம் அறிவித்துள்ளனர்.
No comments
Post a Comment