பொதுநலவாய மாநாட்டில் விக்கினேஸ்வரன் கலந்துகொள்ளாமையும் பிரிட்டிஷ் பிரதமர் கமரூன் வடக்கு சென்று விக்கினேஸ்வரனை சந்தித்தமையும் ‘‘தனித்தமிழ் தேசம்’’் என்பதை சர்வதேசத்திற்கு பறைசாற்றுவதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சி நிரலாகும் என்று குற்றம் சாட்டும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வர்த்தக, மாநாட்டில் வடக்கில் முதலீடு செய்யுங்கள் என்ற கோரிக்கையை அரசாங்கம் விடுக்காமையும் ‘‘தமிழர்களுக்கு எதிரான அரசு’’ என்ற பிரசாரத்திற்கு உதவியாக அமையும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர். வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்,
டேவிட் கமரூன் பொதுநலவாய மாநாட்டை இலங்கைக்கு எதிரான மேடையாக நன்கு பயன்படுத்திக் கொண்டார். 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு மாநாட்டில் இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளி விடுவதற்கான அனைத்து நிகழ்ச்சி நிரல்களையும் கொழும்பு மாநாட்டில் முன்னெடுத்துள்ளார்.
விக்கினேஸ்வரன்
வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனுக்கு பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்தும் அவர் கலந்து கொள்ளவில்லை. ஆனால் கமரூன் வடக்கு சென்று விக்கினேஸ்வரனை சந்தித்தார்.
இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னர் வெளிநாட்டுத் தலைவரொருவர் வடக்கு சென்ற வரலாற்று பதிவாகவும் இது நிகழ்ந்துள்ளது. அத்தோடு பிரிட்டிஷ் பிரதமரின் வடபகுதி விஜயத்தின் போது காணாமல் போனோரின் பெற்றோர், காணிகளை இழந்தோரும் என ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். இது சர்வதேச ஊடகங்கள் ஊடாக இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அடக்கு முறைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்ற பிரசாரத்திற்கு ஏதுவாக அமையப்போகின்றது.
தமிழ் தேசம்
விக்கினேஸ்வரன் மாநாட்டில் கலந்து கொள்ளாமையும் கமரூன் வடபகுதி சென்று விக்கினேஸ்வரனை சந்தித்தமையுமானது தனித்தமிழ் தேசம் என சர்வதேசத்திற்கு பறை சாற்றுவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. இவையனைத்தும் கமரூனின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலாகும்.
மக்ரே
சனல் 4 ஊடகவியலாளரான மக்ரேவுக்கு அரசாங்கம் வீசா வழங்கி அதன் மூலமும் நாட்டுக்கு எதிரான சர்வதேச பிரசாரத்திற்கு வழி வகுத்தது. அத்தோடு மக்ரேவை வரவேற்று விருந்துபசாரம் வழங்கி, இலங்கைக்கு எதிராக செயற்படும் மங்கள சமரவீரவும் ஐ.தே.க கட்சியினரும் அதனை பயன்படுத்திக் கொண்டனர். கமரூன், மக்ரே, விக்கினேஸ்வரன், ஐ.தே.கட்சி அனைவரும் இலங்கைக்கு எதிராக பொதுநலவாய மாநாட்டு மேடையை நன்கு பயன்படுத்திக் கொண்டனர்.
அரசாங்கம்
ஆனால் அரசாங்கம் எமது நாட்டுக்கு சாதகமாக இம்மாநாட்டை பயன்படுத்த தவறிவிட்டது. இம்மாநாட்டின் இடையே கலந்து கொண்ட தலைவர்களோடு கலந்தாலோசனை கூட்டங்களை நடத்தி இறுதிக்கட்ட யுத்தம் பொது மக்களை இராணுவம் பாதுகாத்தமை, மீள குடியேற்றங்கள், வடக்கின் தற்போதைய அபிவிருத்திகள் தொடர்பில் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். இதன் மூலம் உண்மையை உலகறிய செய்திருக்க வேண்டும்.
வர்த்தகம்
ஆனால் அரசாங்கம் வர்த்தக மாநாடு, வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாகவே அதிக கவனம் செலுத்தியது.
இம் மாநாட்டிலாவது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வடக்கில் தொழிற்சாலைகளை ஆரம்பிக்கலாம் தமது முதலீடுகளை அச்சமின்றி மேற்கொள்ளலாம் என்ற செய்தியை வழங்கியிருக்கலாம்.
ஆனால், அரசாங்கம் இதனையும் தவற விட்டு விட்டது. இதன் மூலமும் தமிழர்கள் ஒதுக்கப்படுகிறார்கள் என்ற செய்திக்கு சர்வதேசத்திற்கு வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, பொதுநலவாய மாநாட்டின் நடவடிக்கைகளை கூட்டிக் கழித்தால் இலங்கைக்கு பாரிய நஷ்டமே கிடைத்துள்ளது என்றார்.
No comments
Post a Comment