முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுவரை இடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவிட்டால் முதல்வர் ஜெயலலிதா தமிழர்களின் பெருங்கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும் என உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ. நெடுமாறன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்த பொலிஸார், அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.
இவர்களுக்கு கடந்த புதன்கிழமை மாலை மதுரை மேல்நீதி மன்ற கிளை நிபந்தனையற்ற பிணை வழங்கியது. இதனைத்தொடர்ந்து நேற்று காலை அனைவரும் சிறையிலிருந்து விடுதலையானார்கள்.
அப்போது செய்தியாளர்களி டம் பேசிய நெடுமாறன், ``அதிகாரிகள் கூறுவதைப் போன்று முள்ளிவாய்க்காய் நினைவு முற்றத்திற்காக நாங்கள் நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்துள்ளோம் என்றால் எங்களுக்கு நோட்டீஸ் கொடுத்து எங்களிடம் முறைப்படி பதில் கேட்டிருக்க வேண் டும். ஆனால் அவ்வாறு எதுவும் செய்யாமல், இருட்டு வேளையில் திருட்டுத்தனமாக பொலிஸாரும், அதிகாரிகளும் முற்றத்தை இடித்து தள்ளியிருக்கிறார்கள்.
இந்நிலையில், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், இந்த இடிப்புக்கு பின்னணியில் தமிழக அரசு இருக்கிறது என்றுதான் அர்த்தம். அதனால், தமிழ் மக்களின் பெருங்கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும்.
இதனிடையே, பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொண்ட பிரித்தானிய பிரதமர், இலங்கையில் தமிழர்களுக்கு ஆதரவாக பேசியதோடு, தமிழ் மக்களின் அவலங்களை வெளிக்கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறார். அவருக்கு எனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
No comments
Post a Comment