Latest News

November 13, 2013

முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்கும் ஜெ.வைப் பார்த்து தமிழர்கள் காரித் துப்புவார்கள்- வைகோ
by admin - 0

முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்க உத்தரவிட்டுள்ள ஜெயலலிதாவின் செயலுக்கு பாவ மன்னிப்பே கிடையாது. அவரைப் பார்த்து உலகத் தமிழர்கள் காரித் துப்புவார்கள். முள்ளிவாய்க்கால் முற்றம் என்ன அவரது போயஸ் தோட்ட வீடு என்று நினைத்துக் கொண்டாரா என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாகப் பேசியுள்ளார்.

இலங்கையில் நடந்த போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டப்பட்டது. உலக தமிழ் பேரமைப்பு சார்பில் கடந்த 8-ம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெற்ற விழா கடந்த 10-ம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று காலை 500க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன் நினைவு முற்றம் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது.

இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச்சுவர் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருப்பதாக கூறி வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல்துறையினரால் பொக்லைன் இய்ந்திரம் மூலம் இடிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு பணியில் 500 போலீசார் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைக்கண்டித்து தர்ணா போராட்டம் செய்த பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அங்கு வந்த வை.கோவை போலீசார் தடுத்தனர். ஆனால் ஆவேசமாக தடையை மீறி முள்ளிவாய்க்கால் முற்றத்தின் உள்ளே சென்று அங்குள்ள மாவீரர் மண்டபத்தில் அமர்ந்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் ஆவேசமாக பேசினார் வைகோ. முதல்வர் ஜெயலலிதாவை அவர் கடுமையாக சாடினார்.

அவர் கூறுகையில்,

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பது தொடர்பாக பழ.நெடுமாறன், முதல்வர் ஜெயலலிதாவை தொடர்ந்து தொடர்பு கொண்டார். ஆனால் பதிலேதுமில்லை. அடுத்த அவர் தா. பாண்டியன் மூலமாக பேசி வந்தார். அப்போதும் சரியான பதிலில்லை. இதையடுத்து கடந்த 8ம் தேதி நினைவு முற்றம் திறக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த முற்றத்தை இடித்து தள்ள ஆணையிட்டுள்ளார் ஜெயலலிதா. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடித்த ஜெயலலிதாவின் இந்த செயல் பச்சை அயோக்கியத்தனமானது. கண் துடைப்பு தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டு பிரபாகரன் படத்தை வைக்கக்கூடாது என்று வழக்குகள் போடுகிறார். ஆனால், லட்சோப லட்சம் மக்களின் நெஞ்சத்தில் இருக்கும் பிரபாகரனை நீக்க முடியாது.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்! இது போயஸ் கார்டன் சொத்தோ, ஜெயலலிதாவின் சொத்தோ கிடையாது. கேள்வி கேட்க ஆள் இல்லை என்று இப்படியெல்லாம் செய்துகொண்டிருக்கிறார். இதைப் பார்த்து உலகத்தமிழர்கள் காரித்துப்புவார்கள். ஈழ ஆதரவாளர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்கிறது. எத்தனை தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தாலும் அவை எல்லாம் எங்கள் கால் தூசுக்குச் சமம். முள்ளிவாய்க்கால் முற்றம் எங்கள் சொத்து. நாங்கள் உள்ளே போவோம். அதை தடுக்க முடியாது. ஜெயலலிதாவின் இந்தச் செயல்களூக்கு பாவமன்னிப்பே கிடையாது என்றார் ஆவேசத்துடன்.

சமீபகாலத்தில் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்து வைகோ பேசுவது இதுவே முதல் முறை. வர்த்தகர்கள் பந்த் வெற்றி - வைகோ நன்றி முன்னதாக காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது.

கடைகளை அடைத்து உணர்வுகளை வெளிப்படுத்திய வணிகர்களுக்கு வைகோ நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கூறியுள்ளதாவது:

''லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த மகிந்த ராஜபக்சேவின் சிங்களப் பேரினவாத அரசின் கொடுமைகளை எதிர்த்து, தமிழக மக்கள் நடத்திய முழு அடைப்புப் போராட்டமும், குறிப்பாக கடை அடைப்பு போராட்டமும், ரயில் மறியல் போராட்டமும் மகத்தான வெற்றியைப் பெற்றது. மதிமுக சார்பில் எனது உருக்கமான வேண்டுகோள் கடிதம் துண்டுப் பிரசுரங்களாக லட்சக்கணக்கில் அச்சடிக்கப்பட்டு, கடை கடையாகச் சென்று பிரசுரங்களைத் தோழர்கள் தந்தபோது, வியாபாரிகள் முகம் சுளிக்காமல் அன்போடு அதைப் பெற்றுக்கொண்டு, கடைகளை அடைப்பதாக கூறிய செய்தி அறிந்து மனதில் ஆறுதல் கொண்டேன்.

பொருள் நட்டத்தைப் பொருட்படுத்தாமல், தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் ஏராளமான கிராமங் களிலும் வியாபாரிகள் முழுமையாகக் கடைகளை அடைத்துள்ளனர். மற்ற நகரங்களிலும் 70 விழுக்காடு கடைகளை அடைத்துள்ளனர். அந்த வணிகப் பெருமக்களுக்கெல்லாம் என் சிரம் தாழ்ந்த வணக்கத்தையும், நன்றியையும் தெரிவிக்கிறேன். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கூட்டிய பல்வேறு அமைப்புகளின் கூட்டத்தில், நவம்பர் 12ந் தேதி ரயில் நிறுத்தப் போராட்டம் நடத்துவதென எடுக்கப்பட்ட முடிவினை செயல்படுத்த, தலைநகர் சென்னையிலிருந்து அனைத்து ரயில் நிலையங்களிலும் ம.தி.மு.க. போராட்டத்தை முன்னெடுத்து நடத்தியது.

தமிழ் உணர்வாளர்களும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்று, பல்லாயிரக்கணக்கில் இதில் கைதாகினர்.தமிழ்ச் சாதி நாதியற்றுப் போகவில்லை என்பதை தாய்த் தமிழகம் உலகத்துக்கு உணர்த்தி உள்ளது. ராஜபக்சே கூட்டத்தை பன்னாட்டு நீதிமன்றக் குற்றக் கூண்டில் நிறுத்தித் தண்டிப்பதற்கும், சுதந்திரத் தமிழ் ஈழம் மலர்வதற்கும் தமிழ் இனத்தின் இளம் தலைமுறையினர் அடுத்தடுத்து அறப்போர்களை முன்னெடுக் கவும், தாய்த் தமிழகம் கடமையாற்றவும் சபதம் ஏற்போம் என வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
« PREV
NEXT »

No comments