இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துவதனை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இது ஆரம்பத்தில் இருந்தே இலங்கையிடம் காணப்பட்ட நிலைப்பாடாகும். ஒருபோதும் சர்வதேச விசாரணைக்கு இணங்கமாட்டோம் என்று பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமைகள் குறித்த ஜனாதிபதியின் விசேட தூதுவருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் இலங்கை தொடர்பில் தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,
பிரிட்டன் பிரதமர் இலங்கை வருவதற்கு முன்னர் லண்டனில் 7 க்கும் மேற்பட்ட தமிழ்க் குழுக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டே இலங்கை வந்து இந்தக் கூற்றை வெளியிட்டார். அந்தவகையில் அது பண்பான விடயம் அல்ல. பிரிட்டன் பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளவே இலங்கை வந்தார்.
மாறாக இலங்கையின் விவகாரங்களை கையாள வரவில்லை. இதனை அனவைரும் புரிந்துகொள்ளவேண்டும். பொதுநலவாயத்தை பயன்படுத்தி பிரிட்டன் பிரதமர் இலங்கைக்கு எதிராக அரசியல் செயற்பாட்டையே முன்னெடுத்துள்ளார்.
இலங்கை தற்போது காலனித்துவ நாடு அல்ல என்பதனை டேவிட் கமரூன் மறந்துவிட்டார். இது காலனித்துவ நாடு அல்ல. இலங்கை சுயாதீன நாடாகும். இங்கு வந்து அவர் எந்தவொரு விடயத்துக்கும் திகதி நிர்ணயம் செய்ய முடியாது. சுயாதீனமான எந்த நாட்டுக்கும் எவரும் வந்து திகதி நிர்ணயம் செய்ய முடியாது. இது அச்சுறுத்தலாகும்.
அப்படியானால் பிரிட்டன் குறித்து நாங்களும் கேள்விகளை எழுப்பலாம். பிரிட்டனில் எத்தனையோ விசாரணைகள் தாமதமாகிக்கொண்டிருக்கின்றன. அப்படியானால் மற்றுமொரு நாடு பிரிட்டனுக்கு எதிராக திகதி நிர்ணயம் செய்யலாம்.
இதேவேளை யுத்த முடிவின் பின்னர் இலங்கையில் பரந்துபட்ட நல்லிணக்கத்தை அடைய நாங்கள் வேலை செய்துவருகின்றோம். அதனை குறுகிய காலத்தில் செய்ய முடியாது. அதற்கு காலம் தேவையாகும். போருக்குப் பின்னரான சூழலில் அரசாங்கம் ஒரு இடத்தில் முடங்கி இருக்கவில்லை.
பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. இன்னும் செய்வதற்கு பல வேலைத்திட்டங்கள் உள்ளன. இதற்கு காலம் தேவையாகும். ஆனால் இவ்வாறு நாட்டுக்குள் வந்து அச்சுறுத்தலை மேற்கொண்டு செல்வது மிகப்பெரிய அநீதியாகும்.
யுத்தத்துக்குப் பின்னரான நிலைமையில் நாங்கள் ஒரு இடத்தில் நின்றுவிடவில்லை. அந்த வகையில் சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துவதனை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இது ஆரம்பத்தில் இருந்தே இலங்கையிடம் காணப்பட்ட நிலைப்பாடாகும்.
ஒருபோதும் சர்வதேச விசாரணைக்கு இணங்கமாட்டோம். எமது உள்நாட்டு விசாரணை ஒன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. அதனை நிறைவுபடுத்த எமக்கு காலம் தேவையாகும். அந்த பயணத்தை செல்வோம். ஆனால் சர்வதேச விசாரணையை ஏற்கமாட்டோம்.
எமது உள்நாட்டு விசாரணையை ஆரம்பித்துள்ளோம். அதனை கொண்டு நடத்துகின்றோம். அதற்கு காலம் தேவையாகும். அந்த விசாரணையில் கூட சாட்சிகள் இருந்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும். இறந்தவர்களை மீண்டும் எழுப்பி சாட்சியம் பெற முடியாது. எனினும் விசாரணைக்கு முயற்சிக்கின்றோம். எமது பக்கத்தில் யாராவது தவறுகளை செய்திருந்தால் அதனை அனுமதிக்க மாட்டோம். அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம். ஆனால் எதற்கும் சாட்சிகள் இருக்கவேண்டும்.
No comments
Post a Comment