அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு படையினருக்கும் பொதுமக்களுக்குமிடையே ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து நேற்று முன்தினமும் நேற்றும் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது. நேற்று முன்தினம் திங்கட்கிழமை நிந்தவூர்ப்பகுதியில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. நேற்றும் இங்கு போராட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
ஹர்த்தால் காரணமாக பாடசாலைகள், அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்கள், வங்கிகள், வர்த்தகநிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டதுடன் போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது. நேற்றும் வீதிகளை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது அவர்களை பொலிஸார் கண்ணீர்புகை குண்டுப்பிரயோகம் செய்து கலைத்துள்ளனர். இதனால் இந்தப்பகுதிகளில் தொடர்ந்தும் பதற்றம் நீடித்து வருகின்றது.
கடந்த இருவாரகாலமாக நிந்தவூர் பிரதேசத்தில் இரவு வேளைகளில் திருட்டு, மற்றும் கொள்ளைச்சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன. இந்தச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மர்மநபர்கள் சிலரை ஞாயிற்றுக்கிழமை இரவு கடற்கரையில் வைத்து பொதுமக்கள் மடக்கிப்பிடித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த விசேட அதிரடிப்படையினர் இந்த மர்ம நபர்களை மீட்டு சென்றுள்ளதுடன் வானத்தை நோக்கியும் நிலத்தை நோக்கியும் துப்பாக்கிப்பிரயோகம் செய்திருந்தனர்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மர்ம நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரியுமே பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த இரு வாரங்களாக நிந்தவூர் பிரதேசத்தில் இரவு . வேளைகளில் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அத்துடன் வீடுகளில் உறங்கும் மக்களை அச்சுறுத்தும் வகையில் குறித்த மர்ம நபர்கள் வீடுகள் மீது கற்களை வீசுவதுடன் கூரைகளின் ஓடுகளை கழட்டி திருடுவதற்கும் முயற்சித்து வந்துள்ளனர்.
இத்தகைய சம்பவங்களை அடுத்து நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காசீம் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் குறித்த மர்ம நபர்களை இனங்காணும் வகையில் விழிப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டதுடன் இரவு வேளைகளில் மக்களின் நடமாட்டத்தை குறைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது. இரவு 9 மணிக்குப் பிற்பாடு எவரேனும் வெளியில் செல்வதானால் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டுமென்றும் இதில் தீர்மானிக்கப்பட்டது. இது குறித்து பொதுமக்களுக்கு பள்ளிவாசல் ஒலிபெருக்கிகள் மூலமும் அறிவிக்கப்பட்டது.
அன்றைய தினம் இரவு 10 மணியளவில் நிந்தவூர் கடற்கரையில் ஐந்து பேர் கொண்ட குழு தாம் அணிந்திருந்த சீருடைகளை கழற்றி வேறு ஆடைகளை அணிந்துகொள்வதற்கு தயாரான வேளையில் பொதுமக்கள் அவர்களை சுற்றிவளைத்துள்ளனர். அவர்களது அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு கோரியபோது அவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர். இதனையடுத்து கடற்கரையில் பெருமளவானோர் கூடினர். பதற்றமான சூழலும் ஏற்பட்டது. அங்கு வந்த விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதுடன் மர்ம நபர்களையும் பாதுகாப்பாக அழைத்து சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவத்தையடுத்து ஆத்திரம் கொண்ட பொதுமக்கள் ஹர்த்தால், கடையடைப்புப் போராட்டத்தில் குதித்திருந்தனர். குறித்த மர்ம நபர்களை விசேட அதிரடிப்படையினர் காப்பாற்றவேண்டியதன் அவசியம் என்ன? என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.
இந்தச் சம்பவமானது திட்டமிட்ட வகையில் படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டதா? என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. கடந்த இரு வாரங்களாக நிந்தவூர் பகுதியில் இடம் பெற்ற கொள்ளைச் சம்பவங்களுக்கும் படைத்தரப்பிற்குமிடையில் தொடர்பு இருக்கலாம் என்று பொதுமக்கள் சந்தேகிக்கின்றனர்.
நிந்தவூர் பிரதேத்தில் இடம் பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை இடம் பெற்று வருவதாகவும், சிவில் உடையில் விசேட அதிரடிப்படையினர் ஏன் அப்பகுதிக்கு சென்றனர் என்பது தொடர்பில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு வடக்கு, கிழக்குப்பகுதிகளில் கிறீஸ் மனிதர்களின் அட்டகாசங்கள் அதிகரித்து காணப்பட்டன. கிழக்கில் குறிப்பாக தமிழ் பகுதிகளில் வீடுகளுக்குள் இரவு வேளைகளில் புகுந்த மர்ம நபர்கள் பெண்களை துன்புறுத்தும் செயற்பாட்டிலும், அச்சுறுத்தும் செயற்பாடுகளிலும், ஈடுபட்டிருந்தனர்.
இதேபோல், யாழ். குடாநாட்டிலும், வன்னிப்பகுதியிலும் இந்த கிறீஸ்மனிதர்களின் செயற்பாடானது தீவிரமடைந்து காணப்பட்டது. உடம்பு முழுவதும் கிறீஸைப் பூசிக்கொண்டு வீடுகளுக்குள் புகுந்த இந்த மர்ம நபர்கள் மக்களை குறிப்பாக பெண்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டனர். இதனால் வடக்கு, கிழக்குப்பகுதிகளில் பெரும் அச்சமானதொரு நிலைமை உருவாகியிருந்தது.
இந்த கிறீஸ் மனிதர்களின் செயற்பாட்டினால் பல்வேறு விதமான போராட்டங்களில் தமிழ் மக்கள் ஈடுபட்டிருந்தனர். சில பகுதிகளில் கிறீஸ் மனிதர்கள் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டிருந்த போதிலும், அவர்களை படைத்தரப்பினர் காப்பாற்றிச் சென்றிருந்தனர். இதனால் படைத்தரப்பினருக்கும் கிறீஸ் மனிதர்களுமிடையில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் அப்போது எழுந்திருந்தது. சில இடங்களில் கிறீஸ் மனிதர்களை பொதுமக்கள் துரத்திச் சென்றபோது அவர்கள் முகாம்களுக்குள் ஓடிமறைந்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் அப்போது எழுந்திருந்தன.
அன்று கிறீஸ் மனிதர்களின் அட்டகாசம் போலவே தற்போது நிந்தவூர் பகுதியில் மர்ம நபர்கள் கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் மக்களை அச்சுறுத்துவதே இவர்களது நோக்கமாக காணப்படுகின்றது. கிறீஸ் மனிதர்கள் உலாவ விடப்பட்ட நோக்கத்திற்காகவே தற்போது இந்த மர்ம மனிதர்களும் உலாவ விடப்பட்டுள்ளதாகவே சந்தேகிக்கவேண்டியுள்ளது.
நிந்தவூர் கடற்கரைப்பகுதியில் சீருடை அணிந்தவர்கள் வந்து தமது உடைகளை மாற்றிக் கொண்டு எங்கோ செல்ல புறப்பட்டவேளையிலேயே பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களது தொப்பி, மேலாடைகள் என்பனவும் பொதுமக்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவமானது ஏதோ ஒரு வகையில் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்பாடுகள் இடம் பெறுவதையே எடுத்துக்காட்டியுள்ளது. அன்று தமிழ் மக்களை அச்சுறுத்துவதற்காக கிறீஸ் மனிதர்கள் ஏவி விடப்பட்டனர். தற்போது முஸ்லிம் மக்களை அச்சுறுத்தும் வகையில் மர்ம நபர்கள் ஏவி விடப்பட்டனர்.
வடக்கு, கிழக்குப்பகுதிகளில் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கத்திலும் இத்தகைய மர்ம மனிதர்கள் ஏவிவிடப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. ஏனெனில் நிந்தவூருக்கு அருகில் தமிழ் கிராமங்கள் உள்ளன. அந்த வகையில் முரண்பாடுகளை ஏற்படுத்தவும் திட்டமிட்டவகையில் செயற்பாடுகள் இடம் பெற்றிருக்கலாம் என்ற நிலைப்பாடும் மக்கள் மத்தியில் தற்போது காணப்படுகின்றது.
யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்கள் மத்தியில் ஆயுத கலாசார எண்ணங்கள் தலைதூக்கியுள்ளனவா? ஆயுதங்களை, மறைத்து வைத்துள்ளனரா என்பதை கண்டறியும் வகையிலேயே கிறீஸ் மனிதர்கள் திட்டமிடப்பட்டவகையில் நடமாடவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதேபோல் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஆயுதக்கலாசார எண்ணம் உள்ளதா என்பதை தட்டிப்பார்ப்பதற்காகவும், இவ்வாறான மர்ம மனிதர்கள் நடமாட விடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் தற்போது எழுகின்றது.
எது எவ்வாறு இருப்பினும் மக்களை அச்சுறுத்தும் வகையிலான இத்தகைய செயற்பாடுகள் முற்றுமுழுதாக நிறுத்தப்படவேண்டும். இதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கமும் படைத்தரப்பினரும் மேற்கொள்ளவேண்டியது அவசியமானதாகும்.
No comments
Post a Comment