இறந்து விட்டதாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட குழந்தையொன்று இரு நாட்களின் பின் மலர்ச்சாலையில் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்ட விசித்திர சம்பவம் கிழக்கு சீனாவில் இடம்பெற்றுள்ளது.
கடும் உடல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட மேற்படி ஒரு மாதத்திலும் குறைவான வயதுடைய ஆண் குழந்தைக்கு அன்ஹுயி மாகாண சிறுவர்கள் மருத்துவமனையில் கடந்த திங்கட்கிழமை வரை சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அந்த குழந்தைக்கு வழங்கப்பட்டு வந்த மருத்துவ சிகிச்சைகளால் பலன் எதுவும் கிட்டாததால், அவற்றை நிறுத்த அதன் பெற்றோர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
மருத்துவ சிகிச்சை நிறுத்தப்பட்டதையடுத்து அந்தக் குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இதனையடுத்து மலர்ச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இரு நாட்களாக வைக்கப்பட்டிருந்த குழந்தை திடீரென விழித்தெழுந்து அழவும் மலர்ச்சாலை உத்தியோகத்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேற்படி குழந்தை தொடர்பில் அலட்சியமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் அக்குழந்தைக்கு சிகிச்சையளித்த சா என சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் மருத்துவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தகனம் செய்யப்படுவதற்கு சில கணங்கள் முன்பே குழந்தை உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment