Latest News

November 13, 2013

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிப்பு! எதிர்த்து போராடிய பழ. நெடுமாறன் உட்பட 50 பேர் கைது
by admin - 0

தஞ்சை விளார் பைபாஸ்
சாலை அருகே இலங்கையில் கொன்று குவிக்கப்பட்ட தமிழர்களின் படுகொலையை சித்தரிக்கும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டுள்ளது இந்த நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவர் மற்றும் பூங்காவின் ஒரு பகுதியை நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் போலீசார் உதவியுடன் இன்று அதிகாலை 5 மணிக்கு இடித்து தள்ளினர். இது குறித்து அறிந்த தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன், நாம் தமிழர் கட்சியின் மற்றும் தோழமை கட்சியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முற்றத்தின் உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்களுக்கும் போலீசாருக்கும்
இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் லேசான
தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த தடியடியில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கரிகாலன், செந்தில்நாதன் ஆகியோர் காயம் அடைந்தனர். இதை பார்த்த தோழமை கட்சியினர் தடியடி சம்பவத்தை கண்டித்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார் ஏ.ஐ.டி.யூ.சியை சேர்ந்த மதிவாணன், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பாலு, செந்தில்நாதன், தனபாலன் உள்ளிட்ட 14 பேரை கைது செய்தனர். இதற்கிடையே நினைவு முற்றம் இடிக்கப்பட்ட செய்தி அறிந்து பொதுமக்கள் அங்கு கூடினர். ஆயிரக் கணக்கான பொதுமக்களுடன் சேர்ந்து பழ. நெடுமாறன் மற்றும் தோழமை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் குறித்து தகவல் அறிந்த டி.ஐ.ஜி.
அமல்ராஜ், தஞ்சை மாவட்ட எஸ்.பி. தர்மராஜன் ஆகியோர் அதி விரைவுப்படை போலீசாருடன்
அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களை லேசான தடியடி நடத்தி கலைந்து போகச் செய்தனர். அதன்
பிறகு போலீசார் பழ. நெடுமாறன் மற்றும் தோழமை கட்சியினரை முற்றத்திற்குள்
அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பழ. நெடுமாறன் கைது செய்யப்பட்டார். அவரை போலீஸ் வேனில் ஏற்றும்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிறைக்கு செல்வது எனக்கு ஒன்றும் புதிதன்று. தோழமை கட்சியினர்
இன்று மாலை சந்தித்து பேசி முடிவு எடுப்பார்கள். நினைவு முற்றத்திற்காக லட்சக்கணக்கான தமிழர்கள் தங்களின் உயிரை கொடுக்க தயாராக இருக்கிறார்கள். தொண்டர்கள் ஆவேசப்படாமல் அமைதி காக்க வேண்டும் என்றார். பழ. நெடுமாறன் மற்றும் அவருடன்
கைது செய்யப்பட்ட மதிமுகவைச் சேர்ந்த
விடுதலை வேந்தன், தமிழ் தேச
பொதுவுடமை கட்சி குழ. பால்ராஜ், மள்ளர்
மீட்பு கழக நிறுவன தலைவர் செந்தில் உள்பட 40 பேர் தஞ்சை மேலவீதியில் உள்ள உதயா திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்ட
இடத்தில் நெடுஞ்சாலைத் துறை அமைத்த
இரும்பு கம்பி வேலியை பொதுமக்கள்
பிரித்து எறிந்தனர்.
இதையடுத்து அங்கு போலீசார்
குவிக்கப்பட்டுள்ளனர்.
« PREV
NEXT »

No comments