வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் முன்னிலையில் தான் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளப்போவதில்லை என்று ஊடகங்களில் வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென மாகாண சபைக்குத் தெரிவாகியுள்ள அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில் விக்னேஸ்வரன் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதை மக்கள் எதிர்ப்பது போல் தானும் அதே நிலைப்பாட்டைக் கொண்டிருந்த போதிலும், அவரது முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்யப்போவதில்லை என்ற முடிவை தான் எடுக்கவில்லை என்றும் அனந்தி குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் எதிர்வரும் 11ம் திகதிக்கு பின்னர் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளனர்.
இந்த உத்தியோகபூர்வ பதவிப் பிரமாண நிகழ்வுகளில் பங்கேற்காது சமாதான நீதவான் ஒருவரின் முன்னிலையில் தான் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள அனந்தி சசிதரன் தீர்மானித்திருந்ததாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
வட மகாணசபைத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு அனந்தி சசிதரன் இரண்டாவது அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment