Latest News

October 07, 2013

ஐதேக மோதலின் பின்னணியில் அரசாங்கத்தின் சூழ்ச்சி!!
by Unknown - 0

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உட்கட்சி மோதல் பூதாகரமாகியுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவை கட்சித் தலைமையிலிருந்து நீக்கவேண்டும் என்று, நாட்டின் தெற்கே மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று சனிக்கிழமை காலை பேரணியொன்று புறப்பட்டது.
அதேநேரம் மாத்தறையிலிருந்து தெவிநுவர விஷ்ணு கோவிலை நோக்கி ரணில் ஆதரவு ஊர்வலமொன்றும் புறப்பட்டது.
இரண்டு அணிகளும் சந்தித்துக்கொண்டபோது ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச் சூடு நடந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில்-ஆதரவு தென்மாகாண சபை உறுப்பினர் கிரிஷாந்த புஷ்பகுமார அதில் காயமடைந்தார். மேலும் 7 பேரும் மோதலில் காயமடைந்தனர்.
ரணில் எதிர்ப்பு ஊர்வலத்தை நடத்திய தென்மாகாண சபை உறுப்பினரான மைத்திரி குணரத்னவின் தந்தை ஹேர்மன் குணரத்ன துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இரு தரப்பிலிருந்தும் மேலும் 20க்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ளனர்.
எதிர்க்கட்சியைப் பலவீனப்படுத்த அரசாங்கமே சூழ்ச்சி செய்து இந்த மோதலை ஏற்படுத்தியதாக பிபிசியிடம் கூறினார் ரணில் ஆதரவு பேரணிக்கு தலைமை தாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர.

'துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் ஜனாதிபதியின் ஆலோசகர்'

ஜனாதிபதியின் ஆலோசகராக செயற்படுகின்றவரும் என்றும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் புகழ்கூறும் நூலொன்றை அண்மையில் வெளியிட்டு வைத்தவருமான ஹேர்மன் குணரத்னவே ரணில் எதிர்ப்பு பேரணிக்கு தலைமை தாங்கியதாகவும் பகிரங்கமாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட படியாலேயே அவரை கைதுசெய்ய அரசுக்கு நேர்ந்துள்ளதாகவும் மங்கள சமரவீர கூறுகிறார்.
மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் மகன் சஜித் பிரேமதாஸவை தலைவராக்க வேண்டும் என்று தான் ரணில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசமிட்டிருந்தனர்.
ஆனால் நேற்றைய ஆர்ப்பாட்டத்துடன் தனக்கு தொடர்பு ஏதும் இல்லை என்று சஜித் பிரேமதாஸவும் பிபிசியிடம் கூறினார்.
ரணிலுக்குப் பதிலாக தலைமை ஏற்கும்படி தனது பேரை மட்டுமன்றி கரு ஜயசூரிய உள்ளிட்ட மற்றபல தலைவர்களின் பெயர்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரேரித்ததாக கூறிய சஜித், நேற்றைய பேரணியின் பின்னணியில் தனது ஏற்பாடுகள் எதுவும் இல்லை என்றும் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சி கிட்டத்தட்ட கடந்த 10 ஆண்டுகளாக மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான சுதந்திரக் கட்சி கூட்டணிக்கு முன்னால் தொடர் தோல்வியைக் கண்டுவருகிறது.
அந்தக் கட்சிக்குள்ளிருந்து பலரும் அரசாங்கப் பக்கம் சென்றுவிட்டார்கள்.
அந்தக் கட்சிக்குள் மறுசீரமைப்பு அவசியம் என்று தொடர்ச்சியான கோரிக்கைகள் இருந்துவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments