Latest News

November 01, 2013

லண்டனில் மீண்டுமொரு மாபெரும் பேரணி !
by Unknown - 0

இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டிற்கு பிரிட்டனின் பிரதமர்  செல்வதைக் கண்டித்து லண்டனில்  மாபெரும் பேரணி ஒன்றை பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை (02.11.2012) மாலை 4 மணிக்கு Embankment நிலக்கீழ் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் ஆரம்பித்து 10 Downing Street   முன்பாக இப்பேரணி நிறைவடையும்.

பிரித்தானிய பிரதமரின் இலங்கை பயணத்தை நிறுத்த வேண்டும்  பொதுநலவாய நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் இலங்கையில் தமிழ் மக்கள் மீதான இனவழிப்புக்கு நீதி வேண்டும் என்ற கோஷங்க‌ளை மையப்படுத்தி ஒரு மாபெரும் பேரணிக்கான அழைப்பை பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்துள்ளது.

லண்டன் பேரணிகள்

புலம் பெயர் போராட்டங்களில் லண்டன் பேரணிகள் ஒரு மைல் கல்லாகவே அமைந்து வருகின்றன. 2009ல் லண்டன் தெருக்களில் லட்சக்கணக்கில் தமிழர்கள் திரண்டு மாபெரும் பேரணிகளை நடாத்தியமை தமிழர் தொடர்பான பிரித்தானிய கொள்கைகளில் ஓரளவு கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுவரை காலமும் இலங்கை அரசின் பொய்யான பிரச்சாரங்களை மட்டுமே நம்பி வந்த பிரித்தானிய அரசு லண்டன் பேரணிகளின் பின்னர் தான் தமிழர்களின் நியாயங்களை உணர ஆரம்பித்தது. பிரித்தானிய ஊடகங்களுக்கும்  லண்டன் பேரணிகள் பல செய்திகளை சொன்னது.

உலகெங்கும் எதிர்ப்பு

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டிற்கு உலகத் தலைவர்கள் செல்லவதை பூமிப்பந்ந்தில் வாழும் அனைத்துத் தமிழர்களும் ஒரே குரலோடு எதிர்க்க வேண்டும். அங்கிங்கெனாதபடி தமிழர்கள் அனைவரும் தமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். மாபெரும் அடக்கு முறைக்குள் தினமும் வாடும் எமது உறவுகள் தாயக மண்ணில் தமது உணர்வுகளை வெளிப்படுத்த துணிந்து வரும் நிலையில் அவர்களது வெளிப்பாடுகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் பிரித்தானிய தமிழர்கள் அலை அலையாக இப்பேரணியில் கலந்து கொள்வது காலத்தின் கடமையாகின்றது.

ஏலவே கடந்த காலத்தில் லண்டனில் தேம்ஸ் நதியோரம் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நடாத்திய மாபெரும் பேரணிகள் உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் ஒரு நம்பிக்கை கீற்றை கொடுத்தது.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட  இழைக்கப்படுகின்ற அநீதிகளை வெளிக்கொன்டு வருவதில் பிரித்தானிய பத்திரிகைகள் பெருமளவில் பங்கெடுக்கின்றன. அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் லட்சக்கணக்கிலானோர் பங்கெடுக்கும் ஒரு பேரணி நடைபெற்றால் அது நிட்சயமாக அனைத்து பத்திரிகைகளையும் கவரும்  அது பிரதமருக்கு அழுத்தத்தை கொடுக்கும்.

கனேடியப் பிரதமர் தனது வரலாற்று சிறப்பு மிக்க முடிவினை அறிவித்து விட்ட நிலையில் அவ்வாறான முடிவினை பிரித்தானிய பிரதமரும் பக்கிங்காம் அரண்மனையும் எடுக்க வேண்டும் என நிர்ப்பந்திக்கும் மாபெரும் பொறுப்பு பிரித்தானிய தமிழர்களின் கைகளில் உள்ளது.

இலங்கை அரசு இந்த மாநாட்டின் மூலம் தமது கரங்களில் உள்ள இரத்தக் கறையை பூசி மொழுகத் திட்டம் போட்டு செயல்ப்படுகின்றது. ஆனால் அதே மாநாட்டினை பயன்படுத்தி நாம் இலங்கையின் உண்மையான முகத்தினை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறான ஒரு போராட்டத்துக்கு லண்டன் பேரணி ஒரு உந்து சக்தியாக இருக்க வேண்டும்.

பொதுவாகவே கார்த்திகை மாதம் தமிழர்களுக்கு ஒரு தனித்துவமான மாதம். எமது போராட்டத்திற்கு ஆன்ம பலத்தை சேர்க்கும் மாதம். அவ்வாறான ஒரு மாதத்தின் தொடக்கதில் நாம் ஒரு பேரணியாக சென்று நீதி கேட்கப் போகின்றோம்.

பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்புக்கள்

இதேவேளை பிரித்தானியா பூராகவும் உள்ள பாராளுமன்ற‌ உறுப்பினர்களை சந்தித்து பிரித்தானிய பிரதமரின் இலங்கை விஜயத்தை ரத்து செய்யக் கோருமாறும் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி கேட்டுக் குரல் எழுப்புமாறும் வேண்டுகோள் விடப்படுகின்றது. பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த சந்திப்புக்களில் மக்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். அதேவேளை பிரித்தானியாவில் வாழும் அனைத்து தமிழ் மக்களும் தமது பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை பிரதமர் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்துமாறும்  பேரவை இத்தருணத்தில் உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றது.
இரத்தம் தோய்ந்த கரங்களோடு  ஒரு இனவழிப்பை செய்து முடித்து விட்டு அதற்காக பெருமிதம் கொள்ளும் அரசின் அழைப்பை ஏற்று பிரித்தானிய பிரதமர் இலங்கை செல்வது பிரித்தானிய வரலாற்றில் ஒரு கறையாகவே இருக்கப் போகின்றது.
« PREV
NEXT »

No comments