Latest News

October 03, 2013

வட மாகாண ஆளுநர் சந்திரசிறிக்கு சட்ட நுணுக்கங்களை எடுத்துரைத்த விக்கினேஸ்வரன்!
by Unknown - 0


வட மாகாண முதலமைச்சராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள முன்னாள் உயர்நீமன்ற நீதியரசருக்கான நியமனக்கடிதம் வழங்கலுக்கு முன்பதாக ஜனாதிபயின் செயலாளர் லலித் வீரதுங்கவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்குமிடையே செவ்வாய்க்கிழமை நீண்ட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இவ்விருவரது கலந்துரையாடலின் பின்னரே வட மாகாண ஆளுநரால் சி.வி. விக்கினேஸ்வரனுக்கான நியமனக்கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

வட மாகாண சபைக்கு முதலமைச்சராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள சி.வி. விக்கினேஸ்வரன் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தமக்கான நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொள்வதற்கு வட மாகாண ஆளுநரின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் விக்கினேஸ்வரனின் கோரிக்கையின் பிரகாரம் நியமனக்கடிதம் வழங்குவதற்கான வழக்க முறைமை இல்லை என்று தெரிவித்த ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி, முதலமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னரே நியமனக்கடிதத்தை வழங்குவது என்பது சம்பிரதாயமாகும். எனவே, தங்களுக்கான நியமனக் கடிதத்தை வழங்கமுடியாதென திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இதனையடுத்து, இருவருக்குமிடையில் சட்டரீதியிலான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. இதன்போது முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஒருவர் பதவிக்கான நியமனக்கடிதத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னரே சத்தியப்பிரமாணம் செய்யமுடியும் என்பது சட்டத்தில் கூறப்பட்டிருப்பதாக ஆளுநருக்கு எடுத்துரைத்துள்ளார்.

எனினும், விக்கினேஸ்வரனின் வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த ஆளுநர் சந்திரசிறி, உடனடியாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு நிலைமையை விளக்கியுள்ளார். இதனையடுத்து, லலித் வீரதுங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனிடம் தொடர்புகொண்டு விடயத்தை கேட்டறிந்துள்ளார்.

எனினும், விக்கினேஸ்வரனால் முன்வைக்கப்பட்ட வாதத்தினையே லலித் வீரதுங்கவிடமும் சம்பந்தன் எம்.பி. தெளிவுபடுத்தியுள்ளார். இருவருக்குமிடையிலான நீண்ட கலந்துரையாடலின் பின்னர் லலித் வீரதுங்க ஆளுநர் சந்திரசிறியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார். இதனையடுத்தே, வட மாகாண முதலமைச்சருக்கான நியமனக்கடிதம் விக்கினேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வட மாகாண அமைச்சரவையை தேர்ந்தெடுக்கும் வகையில் நேற்று இரவு கொழும்பிலுள்ள கூட்டமைப்பின் தலைமையகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. மீண்டும் நாளை வெள்ளிக்கிழமை இது குறித்து கலந்துபேசுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments