Latest News

October 02, 2013

சென்றால் சென்னை கோட்டை அல்லது சிறைச்சாலை: உதயகுமார் அறிவிப்பு!
by admin - 0

நெல்லை: இடிந்தகரையை விட்டு வெளியேறி,   தமிழகமெங்கும்
சென்று மக்களை  சந்திக்கப்போவதாக கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான
போராட்டக்குழு தலைவர் உதயகுமார் அறிவித்துள்ளார். அணுஉலைக்கு எதிராக இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்
முழக்க போராட்டம் நடந்தது. புதுச்சேரியிலும் இதன் கூட்டமைப்பு சார்பில்
போராட்டங்கள் நடந்தது. இந்நிலையில்,  இடிந்தகரை மக்கள் போராட்டத்தின் 779 வது நாளான இன்று,
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் தங்கள் அடுத்தக்கட்ட
பணிகளை பற்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இடிந்தகரை போராட்ட பந்தலில் மக்களிடையே பேசிய
சுப.உதயகுமார், "இன்று காலை நமது போராட்டதின் வலிமையான
ஒரு கிராமமாக இருந்த கூத்தங்குளிக்குள் காவல்துறை தாது மணல்
கொள்ளையர்களுக்கு ஆதரவாக புகுந்துள்ளது.இது கூத்தங்குளிக்கான பின்னடைவு மட்டுமல்ல ஒட்டுமொத்த கடலோர சமுதாயத்துக்கான பின்னடைவு. ஆதலால் நம்முடைய போராட்டத்தை பற்றி முக்கியமான முடிவெடுக்க வேண்டியுள்ளது.
அணு உலைக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம். கூடங்குளம் மட்டுமல்ல இந்தியாவில்
இனி எங்குமே அணு உலை என்பதை வரக்கூடாது. மக்கள் அடர்த்தியாக உள்ள இந்தியாவில்
அணுசக்தி என்பது அபாயமானது. இனி இடிந்தகரையை விட்டு தமிழகமெங்கும் சென்று மக்களை  சந்திக்கிறோம்.
முதல் கட்டமாக மீனவர் மக்களுக்கு  எல்லாம் மிகப்பெரிய வெகுமதிகளை அளிக்கின்ற மீனவ மக்கள்
கொல்லப்படுவதை சிறைப்பிடிக்கப்படுவதை பற்றி கடிதம் எழுதுகின்ற தமிழக முதல்வரை நேரில்
சந்திக்கிறோம். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் முதல்வரைதான்
சந்தித்து நமது குறைகளை சொல்ல முடியும், நம்மை காக்க வேண்டியது அவரது கடமை. இதனால் என்ன நடந்தாலும் சரி அதை சந்திக்க தயாராக இருக்கிறோம். சென்றால்
சென்னை கோட்டை அல்லது சிறைச்சாலை. நமக்கு துரோகம் செய்கிறவர்களின் பாவத்துக்கு எல்லாம்
சேர்த்து தான் நாம் போராடுகிறோம்; நாம் போராட்டத்தை கைவிடவில்லை மாற்றி அமைக்கிறோம்" என்க,
மக்களிடையே பெரும் சலசலப்பு. இதை தொடர்ந்து மற்ற முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என போராட்டக்குழு அறிவித்துள்ளது.
« PREV
NEXT »

No comments