Latest News

October 26, 2013

வடமாகாண சபைத் தேரை மக்களுக்காக இழுத்துச் செல்வோம்: அனந்தி
by admin - 0

வடமாகாண சபை என்னும் தேரை மக்களுக்காக இழுத்துச் செல்வதற்கு மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இன்று காலையில் நடைபெற்ற வடமாகாண சபையின் கன்னியமர்வு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், வடமாகாண சபைக்கு புத்துயிர் வழங்கி எதையாவது செய்ய வேண்டுமென பரீட்சித்துப்பார்க்க போகின்றோம். அனைவரும் மதிக்கின்ற அமைச்சரவையொன்று இங்கு உருவாக்கப்பட்டுள்ளதுடன் உறுப்பினர்களிற்கும்
துறைகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டவை வெறுமனேவே காகிதத்தில் இருக்காது எதையாவது செய்யக்கூடியதாக இருக்கவேண்டும். நடந்து முடிந்த வடமாகாண சபை தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டமைப்பிற்கு ஏகோபித்த ஆதரவை வழங்கியிருந்தமையானது, தமிழனை தமிழனே ஆளவேண்டும் என்பதற்காகவே ஆகும். அபிவிருத்திகளுக்கு அப்பால் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் உள்ளிட்டன தமிழ் மக்களுக்கு தேவையானது என்பதை மக்கள் மீண்டுமொரு முறை சொல்லியிருக்கிறார்கள். 1987ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவான 13ஆவது திருத்தச்சட்டத்தின் கீழான மாகாணசபை, இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக மாட்டாதென்பது அனைவருக்கும் புரிந்த விடயம். எமது விடுதலைப் போராட்டத்தில் அனைத்தையுமே தீர்மானிக்கின்ற சக்தியாக இருந்த தமிமீழ விடுதலைப் புலிகள், மாகாண சபை முறைமையை நிராகரித்திருந்தனர். இருந்தும் தற்போது நாங்கள் மாகாண சபையினை ஏற்று அதனுடாக என்ன செய்யலாமே அதனை செய்யப் போகின்றோம். யுத்தத்தின் கோர வடுக்களை தாங்கி நிற்கின்ற எமது மக்களது உணர்வுகளை அவர்களுள் ஒருத்தியாக நானும் நன்கு அறிவதோடு, அவர்களிற்கு வெறுமனே இயன்ற வலி நிவாரணங்களை மட்டும் நாம் வழங்கினால் போதாது. எமக்குள் பாகுபாடுகளோ, வேறுபாடுகளோ வேண்டாமென உங்கள் அனைவரதும் சகோதரியாகவும், மூன்று குழந்தைகளின் தாயாகவும், காணாமல் போன தலைவனை தேடுகின்ற குடும்பத் தலைவியாகவும் கேட்கின்றேன். வடமாகாண முதலைமைச்சர் - வடக்கு மாகாணசபையின் ஒட்டுமொத்த கருத்துக்களையும்சமூகத்திற்கு எடுத்துச் செல்கின்றவர். அவ்வகையினில் அனைவரது கருத்துக்களிற்கும் மதிப்பளிக்கப்பட்டு கவனத்திலும் எடுக்கப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments