Latest News

September 24, 2013

யாழ். வைத்தியர்கள் 88 பேருக்கு திடீர் இடமாற்றம்
by admin - 0

யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் 88 பேர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த 4 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றிவரும்  88  வைத்தியர்களுக்கான இடமாற்றத்தை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அந்த நிலையில், குறித்த 88 வைத்தியர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமைக்குள் வட மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கு செல்லுமாறு அரச வைத்தியர் சங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், அரச வைத்திய சங்கத்தின் யாழ். போதனா வைத்தியசாலை சங்க தலைவர் நிமலன் பாரபட்சம் காட்டுவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

யாழ். போதனா வைத்தியசாலைக்கு 130 வைத்தியர்கள் பற்றாக்குறையாக இருக்கும் சந்தர்ப்பத்தில், தற்போது கடமையில் உள்ள 88 வைத்தியர்களை திடீர் இடமாற்றம் செய்வதற்கு எதிராக அவர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று வைத்தியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வைத்தியர்கள் மீதான தனிப்பட்ட கோபதாபங்களில் பழிவாங்கும் நோக்கத்துடனேயே வைத்தியர் சங்க தலைவர் செயற்படுகின்றார் என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

வைத்தியர்களை வேறு மாகாண வைத்தியசாலைகளில் கடமையாற்ற செல்லுமாறு வற்புறுத்துகின்றாறே தவிர வைத்தியசாலை நிர்வாகத்துடன் கலந்துரையாடி இடமாற்றத்தினை ரத்துச் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என்றும் வைத்தியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில், 8 சத்திர சிகிச்சைப் பிரிவில் 4 சத்திர சிகிச்சை  நிபுணர்கள் கடமையாற்றி வருகின்றார்கள். அதேவேளை, 16 சத்திரசிகிச்சை வைத்தியர்களில் 13 பேருக்கு இடமாற்றமும், சத்திரசிகிச்சைக் கூடங்களில் பணிபுரியும் 24 வைத்தியர்களில் 17 பேருக்கும் திடீர் இடமாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையில் நிறைவான வைத்திய சேவையை செயலிழக்கச் செய்யும் நோக்கத்துடன், இவ்வாறான திடீர் இடமாற்றங்கள் சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதை அரச வைத்திய சங்கம்  ஆதரித்து வருகின்றது. 
இவ்வாறான செயற்பாடுகளில் யாழ். போதனா வைத்தியசாலையின் நிறைவான வைத்திய சேவை பாதிக்கப்படுவதுடன், நோயாளர்களும் பாதிக்கப்படவுள்ளதாக வைத்தியர்கள் கூறினர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களில் 219 வைத்தியர்கள் கையொப்பமிட்டு நம்பிக்கையில்லா பிரேரணை அறிக்கை வைத்தியசாலை பணிப்பாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கையின் பிரகாரம், உடனடியாக வைத்தியர்களின் இடமாற்றத்தினை ரத்து செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர்கள் மேலும் கூறினர்.
« PREV
NEXT »

No comments