Latest News

September 13, 2013

போரில் இராணுவத்தினரிடம் எவரும் சரணடையவில்லை??? - நீதிமன்றில் அரசு அறிக்கை
by Unknown - 0

இறுதிக் கட்டப் போரின் போது இராணுவத்தினரிடம் எவரும் சரணடையவில்லை என்று வவுனியா மேல் நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது இலங்கை அரசு. யாரையும் எவரிடமிருந்தும் இராணுவம் பொறுப்பேற்கவில்லை என்றும் அரசு கூறியுள்ளது.

விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான எழிலன் உட்பட இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட முன்னாள் புலிகளை நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு கோரும் ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணை நேற்று வவுனியா மேல் நீதி மன்றில் இடம்பெற்றது.

2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி எழிலன் உள்ளிட்ட 50 புலிகள் வண. பிதா ஒருவருடன் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர் என்று உறவினர்கள் நல்லிணக்க ஆணைக் குழுவின் முன்பாக சாட்சிய மளித்திருந்தனர். அரசின் பாதுகாப்பு உறுதி மொழியை ஏற்று இராணுவத்தினரிடம் இவர்கள் அனைவரும் சரணடைந்தனர் என்று அவர்களது உறவினர்கள் கூறுகின்றனர்.

சரணடைந்தவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர் என்பதை இராணுவமோ அரசோ இதுவரை தெரியப்படுத்த வில்லை,  அவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர் என விசாரணை செய்வதுடன் நீதிமன்றில் முற்படுத்தி அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று கோரி எழிலன் உட்பட 5 பேர் சார்பில் வவுனியா மேல் நீதி மன்றில் இந்த ஆள்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் இராணுவத் தினரிடம் தமது உறவினர்களைத் தாம் கையளித்தனர் எனவும் இராணுவத்தினர் அவர்களைப் பொறுப்பேற்று பஸ்களில் ஏற்றிச்சென்றனர் என்றும் இன்று வரை இவர்கள் தொடர்பில் எந்தத் தகவலும் தெரிவியவில்லை எனவும் மனுதாரர்கள் தமது மனுவில் சுட்டிக் காட்டி இருந்தனர்.

இதன் பிரதிவாதிகளாக இராணுவத் தளபதியும் முல்லைத்தீவு மாவட்ட 58ஆவது டிவிசன் தளபதியும் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இந்த மனுக்கள் தொடர்பில் மிக நீண்ட காலத்தின் பின்னர் இராணுவத்தின் சார்பில் நேற்று நீதுமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் தங்களிடம் எவரும் சரணடையவில்லை என்றும் தாங்கள் யாரையும் எவரிடமிருந்தும் இராணுவம் பொறுப்பேற்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.இதனையடுத்து, ஆட்கொணர்வு மனுக்களில் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாம் நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்தனர் என்று மனுதாரர் சார்பில் மன்றில் முன்னிலையாகி இருந்த மூத்த சட்டத்தரணி கே.எஸ். ரட்ணவேல் தெரிவித்தார்.

இதனையடுத்து  மனுதாரர் எதிர்மனுதாரர் ஆகிய இரு தரப்பினரிடமும் ஆரம்ப கட்ட விசாரணைகளை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்குமாறு வவுனியா மேல் நீதிமன்றம் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

இலங்கை அரசமைப்பின் 149ஆம் பிரிவின் கீழ், சம்பவம் எந்த இடத்தில் இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகின்றதோ அந்தப் பகுதி நியாயாதிக்க எல்லைக்குள் உள்ள நீதிமன்றில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது. இதில் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் தமது சார்பில் சாட்சிகளை முற்படுத்த முடியும். இந்த விசாரணை முடிவில் அறிக்கையை நீதிவான் மன்று வவுனியா மேல்நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கும்.

இந்த விசாரணைகளை ஒக்ரோபர் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பித்து முடிந்த விரைவில் அறிக்கை சமர்பிக்குமாறு வவுனியா மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மற்றுமொரு தொகுதியாக மேலும் 7 பேர் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான இராணுவத் தரப்புக் கருத்துக்களை வரும் ஒக்ரோபர் மாதம் 23ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments