அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புகலிடக் கோரிக்கையாளர் குறித்த புதிய கொள்கைகள் பாதக விளைவுகளை அதிகம் உண்டு பண்ணும் என அந்நாட்டு முன்னாள் பாதுகாப்புப்படைத் தளபதி கிறிஸ் பாரீ தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய கடற் பரப்பிற்குள் பிரவேசிக்கும் படகுகளை திருப்பி அனுப்பி வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. திருப்பி அனுப்பி வைக்கக் கூடிய சூழ்நிலையில் காணப்படும் சகல படகுகளும் திருப்பி அனுப்பி வைக்கப்படும் என புதிய பிரதமர் டோனி அப்போட் அரசாங்கம் அறிவித்துள்ளது.
எனினும், இந்த நடவடிக்கையானது பல்வேறு பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என பாரீ சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக இந்தக் கொள்கை புகலிடக் கோரிக்கையாளர்களையும் அமெரிக்கக் கடற்படையினரையும் அதிகளவில் பாதிக்கும் என அட்மிரல் கிறிஸ் பாரீ தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் படகுகளை வேண்டுமென்றே பழுதடையச் செய்யக் கூடுமென எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது சேதமடைந்து தத்தளிக்கும் படகுப் பயணிகளை அவுஸ்திரேலய கடற்படையினர் மீட்பார்கள் என்ற காரணத்தினால் இவ்வாறு படகுகள் வேண்டுமென்றே சேதப்படுத்தப்படக் கூடிய அபாயம் நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதனால் படகுப் பயணிகள் அதிகளவு உயிர் அச்சுறுத்தல்களை எதிர்நோக்க நேரிடலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அப்போட் அரசாங்கத்தின் புதிய புகலிடக் கோரிக்கையாளர் கொள்கைகள் சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களை பெரிதளவு பாதிக்குமா என்பது கேள்விக்குறியே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மெய்யான புகலிடக் கோரிக்கையாளர்கள் பாதுகாப்பாக அவுஸ்திரேலியா வந்தடைய ஏதேனும் வழிமுறைகளை அறிமுகம் செய்வதன் மூலம் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment