2009 நாடாளுமன்றத் தேர்தலில் புயலைக் கிளப்பிய ஈழ விவகாரம்தான் இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கப் போகிறது. இலங்கையில் போர் உக்கிரமாக வெடித்து தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட நேரத்தில் இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் வேலைகள் ஜரூராக நடந்தன.
இவ்வாறு தமிழக சஞ்சிகையான ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ள மிஸ்டர் கழுகு பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் போர் முடிவுக்கு வந்தபோது தமிழகத்தில் தேர்தல் நெருங்கி விட்டது. அந்த முள்ளிவாய்க்காலை மீண்டும் முன்னிலைப்படுத்துவதற்கான வேலைகள் ஆரம்பமாகிவிட்டன.
பெரிய அரசியல் முடிச்சு போடுகிறீரே...
ஈழத்தில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டதை நினைவுபடுத்தும் வகையில் 'முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்’ என்ற பெயரில் நினைவு மண்டபத்தை அமைத்திருக்கின்றனர் தமிழ் அமைப்புகள்.
முள்ளிவாய்க்காலில் தமிழர்களை இலங்கை இராணுவத்தினர் சுட்டுக்கொல்லும் காட்சிகள் சிற்பங்களாக இங்கே வைக்கப்பட்டு இருக்கின்றன.
மாமல்லபுரத்தில் இருக்கும் ஒரேகல்லில் செதுக்கப்பட்ட அர்ஜுனன் தபசு சிற்பங்களைப் போல ஒரே கல்லில் முள்ளிவாய்க்கால் காட்சிகளை செதுக்கி உள்ளனர்.
தமிழ் அறிஞர்கள், தமிழ் மொழிக்காக உயிர் நீத்த தியாகிகள், ஈழத்துக்காக தீக்குளித்தவர்களின் படங்களும் சிலைகளும் இந்த நினைவு மண்டபத்தில் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
தஞ்சாவூர் பக்கமுள்ள விலார் கிராமத்துக்கு அருகே இந்த நினைவு மண்டபம் கட்டப்பட்டு பணிகள் முடிந்து திறப்பு விழாவுக்காகத் தயாராக இருக்கிறது.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை திறந்துவைக்க யாரை எல்லாம் அழைக்கலாம். விழாவை எப்படி நடத்தலாம் என்பது பற்றிய ஆலோசனைக் கூட்டத்தை, தஞ்சையில் நடத்தியிருக்கிறார் பழ.நெடுமாறன்.
250-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் அரசியல் கட்சிப் பிரமுகர்கள், ஈழ ஆதரவாளர்கள், தமிழ் அமைப்புகள் என பல்வேறு தரப்பினரிடமும் ஆலோசனை கேட்டார்களாம்!
“ம்“ பலரும் பலவிதமான கருத்துகளைச் சொல்லி இருக்கின்றனர். அதில் ஒருவர்,
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தால் நன்றாக இருக்கும். பொருத்தமாகவும் இருக்கும் என்று தன் விருப்பத்தைச் சொன்னாராம். ஈழப் பிரச்னைக்காக ஜெயலலிதா பல வகைகளில் குரல்கொடுத்துள்ளார்.
ராஜபக்சவை போர்க் குற்றவாளியாக அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத்தர வேண்டும். இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்க வேண்டும் என்று சட்டமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றியவர் ஜெயலலிதா.
இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா-வில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரப்பட்ட நேரத்தில் அந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என, தன்னுடைய கருத்தை அழுத்தம் திருத்தமாகப் பதிவுசெய்தவர் ஜெயலலிதா.
20-வது ஆசிய தடகளப் போட்டியை சென்னையில் நடத்த முடிவுசெய்த நிலையில் இலங்கை வீரர்கள் அந்தப் போட்டியில் கலந்துகொள்வதால் தமிழகத்தில் அந்தப் போட்டியை நடத்த தடைவிதிக்க வேண்டும் என்று சொன்னதோடு அந்தப் போட்டியை சென்னையில் நடத்த அனுமதி தரவும் மறுத்தார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்பதை அனு மதிக்கக் கூடாது என்று பிரதமருக்குக் கடிதம் எழுதினார்.
இலங்கை வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று உறுதி அளித்தால் மட்டுமே சென்னையில் போட்டியை நடத்த தமிழக அரசு அனுமதிக்கும் என தைரியமாகச் சொன்னார்.
தமிழர் தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் கருணாநிதியைவிட ஜெயலலிதாவின் நிலைப்பாடுதான் உறுதியாக இருந்தது.
ராஜபக்சவுக்கு சிலர் செருப்பாக இருந்தபோதும் ஜெயலலிதா மட்டுமே நெருப்பாக இருந்தார்.
அதனால் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை ஜெயலலிதா திறந்து வைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்’ என்று அதற்கான காரணங்களையும் சொல்லி இருக்கிறார் அவர்.''
''ஓஹோ!'' தமிழ் அமைப்புகள் சார்பாக முதல்வருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. முள்ளிவாய்க்கால் முற்றத்தை திறந்து வைக்க வேண்டும் என்று தேதி கேட்டு முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்தக் கடிதத்துக்கு இதுவரை பதில் வரவில்லை. பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
''ஜெயலலிதாவின் ரியாக்சன் என்னவாம்''
விழாவுக்கு முதல்வரின் தேதி கேட்டு வரும் கடிதங்களுக்கு உடனே பதில் அனுப்பிவிடுவார்கள். ஆனால், இந்தக் கடிதத்துக்கு மட்டும் இன்னும் பதில் அனுப்பாமல் வைத்திருக்கிறார்கள்.
அடுத்த ஆண்டு மே மாதத்துக்கு முன், நாடாளுமன்றத் தேர்தல் நடக்கப் போகிறது. அந்த நேரத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை திறந்துவைத்தால் அது ஈழ உணர்வாளர்கள் மத்தியில் தன் அரசியல் இமேஜை உயர்த்தும் என்று நினைக்கிறாராம் முதல்வர்.
ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உலகில் எங்குமே நினைவு மண்டபம் இல்லை. தமிழகத்தில்தான் முதன்முறையாக அமைக்கப்பட்டு இருக்கிறது.
இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் கருணாநிதி மீது ஈழ உணர்வாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். அதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் உதவலாம் என்று நினைக்கிறாராம் முதல்வர்.
''அப்படின்னா வருவாங்கன்னு சொல்லும்!''
முதல்வரை விழாவுக்கு அழைத்து வர நெடுமாறன் தரப்பு தொடர்ந்து முயன்று வருகிறது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளையையும் விழாவுக்கு அழைக்க முடிவு எடுத்திருக்கிறார்கள்.
ஜெயலலிதா பங்கெடுத்தால் ஈழ ஆதரவு கூட்டணிக்கு அச்சாரம் போட்டதாக அமையும் என்று பேச்சுக்கள் கிளம்ப ஆரம்பித்துவிட்டன என்று சொல்லிவிட்டு எழுந்தார் கழுகார்.
No comments
Post a Comment