Latest News

September 14, 2013

படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம்? - சுரேஸ்
by Unknown - 0

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் நிறைவடைந்த பின்னர் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல்போன விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் சமகாலத்தில் மேலும் வலுப்படுத்தியிருப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற சமகால அரசியல் நிலைமைகள் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, காணாமல்போனோர் பிரச்சினை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல்போனவர்களின் உறவினர்கள் வவுனியா உயர்நீதிமன்றில் தொடுத்திருந்த வழக்கில் சாட்சியமளித்த படையினரும், முன்னாள் படைத்தளபதி சரத் பொன்சேகாவும் புலிகளின் முக்கிய தளபதிகள் படையினிரிடம் சரணடையவில்லை என தெரிவித்திருக்கும் மோசடியான புதிய கருத்துக்களே எமது சந்தேகங்கள் வலுப்பெற்றதற்கான காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
2009ம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் படையினரிடம் தங்களால் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள், கணவன்மார், காணாமல்போயிருப்பதாக நல்லிணக்க ஆணைக்குழு முன்னாலும், அண்மையில் ஜ.நா.மனிதவுரிமைகள் ஆணை யாளர் நவனீதம்பிள்ளை அம்மையாருக்கு முன்னாலும் பல ஆயிரக் நூற்றுக்கணக்கான மக்கள் சாட்சியமளித்தார்கள்.
இந்நிலையில் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல்போனவர்களின் உறவினர்கள் வவுனியா உயர் நீதிமன்றில் தொடுத்திருந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அதில் ஆஜரான படையினர் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் எவரும் தம்மிடம் சரணடையவில்லை, அவர்கள் எவரும் படையினரிடம் ஒப்படைக்கப்படவில்லை என கூறியிருக்கின்றனர்.
இந்நிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் 23ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றுக்கு மாற்றப்பட்டு அங்கு விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் கேட்கப்பட்டிருக்கின்றது.
இதேவேளை, அண்மையில் யாழ்.மாவட்டத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த முன்னாள் படைத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருக்கின்றார். முக்கிய தளபதிகள் எவரும் சரணடையவில்லை என்றும் அவ்வாறு சரணடைந்திருந்தால் அவர்கள் சரணடைந்தமைக்கான ஆவணங்கள் எழுத்தில் வழங்கப்பட்டிருக்கும் என்றும் கூறியிருக்கின்றார்.
ஆனால் அவ்வாறு உண்மையில் நடக்கவில்லை, புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என தாங்கள் ஒப்படைத்தபோது அவர்கள் இழுத்துச் செல்லப்பட்டார்கள் என்றே அவர்களின் உறவினர்கள் கூறியிருக்கின்றார்கள். எனவே தம்மிடம் ஒப்படைக்கப்படவில்லை என இவர்கள் கூறுவது பொய்.
இதேபோன்று காணாமல்போன பலர் இரகசிய தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுவந்த நிலையில் படையினரதும், படைகளின் முன்னாள் தளபதியினதும் கூற்றுக்கள் ஒப்படைக்கப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பார்களோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியிருக்கின்றது. இந்நிலையில் இந்த அரசாங்கம் எல்லாவற்றுக்கும் சேர்த்து விரைவில் பதில் சொல்ல வேண்டிய நேரம் வரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments