விடுதலைப்புலிகளையும் தமிழர்களையும் அழித்து பொதுபலசேனா போன்ற சிங்கள இனவாத அமைப்புக்களை அல்லாவா உருவாக்கினார் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் , விடுதலைப்புலிகளை அல்லாவே அழித்தார் என கடந்த 26ம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அரியநேந்திரன் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்.
விடுதலைப்புலிகளை அல்லாவே அழித்தார் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் அவர்கள் கூறியிருப்பது அவமானமாகவுள்ளது.
ஏனெனில் விடுதலைப்புலிகள் யார் அவர்கள் எந்த இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதை நன்றாக தெரிந்தும் விடுதலைப்புலிகளை அல்லாதான் அழித்தார் என்று கூறுவது தமிழ் மக்களை காயப்படுத்தும் விடயம் என்பதுடன் தமிழ் முஸ்லீம் மக்களிடையே விரிசலை ஏற்படுத்தும் கருத்தாகவே அவரது கருத்து உள்ளது.
விடுதலைப்புலிகளை அல்லாதான் அழித்தார் என்றால் அதே அல்லாவா விடுதலைப்புலிகளை அழித்து முஸ்லீம்களுக்கு எதிரான பொதுபல சேனா போன்ற அமைப்புகளை உருவாக்கினார் என நான் கேள்வி எழுப்புகிறேன்.
பொதுபல சேனாவின் ஊடாக அல்லாவா பள்ளிவாசல்களை உடைக்கச் செய்தார் பர்தா என்ற முஸ்லீம் கலாசார உடைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தச் செய்தார் என்ற கேள்விகளுக்கு ஹூனைஸ் பாருக் அவர்களால் பதிலளிக்க முடியுமா?
என்னைப் பொறுத்தமட்டில் விடுதலைப்புலிகளை அல்லாதான் அழித்தார் என்றால் இலங்கையில் முஸ்லீம்களுக்கு நடந்துகொண்டிருக்கும் அநீதிகளையும் அல்லாதான் உருவாக்கினார் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
எனவே அல்லாவின் பெயரில் அரசியல் நடத்துவதை முதலில் முஸ்லீம் தலைவர்கள் கைவிடவேண்டும்.
எந்தக்கடவுளும் யாரையும் அழித்து மனிதர்களுக்கு தீங்குசெய்வதில்லை அது அல்லாவாக இருந்தாலும் சரி புத்தர் , யேசு , இந்துக் கடவுள்களாக இருந்தாலும் சரி மனிதர்களுக்கு கடவுள் நன்மையையே செய்வார் எனவே இறைவனை வைத்து அரசியல் செய்வதை இவர்கள் கைவிட வேண்டும்.
அரசாங்கத்தின் வாய்ப்பாட்டை வைத்து அரசியல் செய்பவர்கள் இப்படித்தான் பேசுவார்கள் என்பது எங்களுக்கு தெரியும்.
ஆனால் இவர்கள் இன்னும் தமது அரசியல் இலாபத்திற்காக தனது இனத்தையே காட்டிக்கொடுத்து வாழ்கின்றார்கள் என்பதை முஸ்லீம் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
No comments
Post a Comment