Latest News

August 14, 2013

கூட்டமைப்பின் மூன்று பெண் வேட்பாளர்களையும் வெற்றியடையச் செய்வதிலேயே அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய முடியும்
by admin - 0

கூட்டமைப்பின் சார்பில் வடமாகாணசபை தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்குமான ஒருநாள் கருத்தரங்கு கிளிநொச்சியில் கடந்த 11.08.2013 அன்று நடைபெற்றது. இங்கு கருத்துரை வழங்கையிலேயே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை.சேனாதிராசா மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், கூட்டமைப்பின் சார்பில் வடமாகாணசபை தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ள 51 வேட்பாளர்களில் 48 ஆண்களும், 3 பெண்களும் உள்ளடங்குகின்றனர். மிகக்குறைந்தளவிலேயே பெண்களுக்கான ஆசன ஒதுக்கீடுகள் அமைந்திருப்பது துரதிஸ்டமானது. அரசியலில் பெண்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தி பெண்கள் தமது ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வடக்கிலுள்ள பெண்கள் அனைவரும் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுகின்ற இந்த மூன்று பெண்களையும் முன்னிலைப்படுத்தி வாக்களித்து வெற்றியடையச்செய்ய வேண்டும்.


இறுதி யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு முள்ளிவாய்க்கால் வரை சென்று பேரவலத்தை சந்தித்த ஆயிரம் ஆயிரம் பெண்களில் இந்த மூன்று பெண்களும் உள்ளடங்குகின்றனர். ஆகையால் இந்த மூவரால் மட்டுமே ஒட்டுமொத்த பெண்களினுடைய வலியையும், அரசியல் அபிலாசைகளையும் உணர்ந்து பெண்கள் உரிமை சார்ந்த பணிகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்துச்செல்ல முடியும். இந்த மூன்று பெண்களும் தமது தொழில்களை துறந்து பெண்களின் ஜனநாயக ரீதியான உரிமைகளை குறைந்தபட்சம் மாகாண மட்டத்திலாவது வென்றாக வேண்டும் எனும் உயரிய நோக்கோடு தான் தேர்தலில் நிற்கிறார்கள்.

கூட்டமைப்பானது வடமாகாணசபையை வெற்றி கொண்டு ஆட்சியமைக்கும் பட்சத்தில், வடமாகாணசபையில் பெண்கள் விவகாரங்களை இந்த மூன்று பெண்களும் தான் முன்னெடுத்துச்செல்ல வேண்டும். இவர்களை வெற்றியடையச்செய்யாவிட்டால் வடமாகாணசபையில் பெண்களின் பிரதிநிதித்துவம் முற்றுமுழுதாகவே இல்லாமல் போய்விடும். 

எனவே வடக்கிலுள்ள அனைத்து பெண்களும் இந்த ஜதார்த்த நிலையை விளங்கிக்கொண்டு உங்களை பிரதிநிதித்துவப்படுத்தி உங்கள் வீட்டில் ஒருத்திகளாக தேர்தலில் நிற்கும் இந்த மூன்று பெண்களையும் முன்னிலைப்படுத்தி வாக்களித்து வெற்றியடையச்செய்து, அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்து அரசியல் உரிமையுடன் கூடிய வாழ்வியல் மேம்பாடுகளை பெண்கள் அடைய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
« PREV
NEXT »

No comments