Latest News

August 14, 2013

விரிவுரைகளை மீள ஆரம்பிக்கக் கோரி யாழ்.பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
by admin - 0

யாழ்.பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைக் கழக சித்திரமும் வடிவமைப்பு துறையினைச் சேர்ந்த 2ம், 3ம், 4ம் வருட மாணவர்கள் எந்தவிதமான அறிவுறுத்தலும் வழங்கப்படாமல் காலவரையறையின்றி நிறுத்தப்பட்டிருக்கும் விரிவுரைகளை ஆரம்பிக்கக் கோரி நேற்று அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நண்பகல் 1.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வடையாளப் போராட்டமானது மலை 4.30 மணிவரைக்கும் தொடர்ச்சியாக இடம்பெற்றது. எனினும் யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் நடைபெற்ற இம்மாணவர்கள் போராட்டத்தினை யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் கண்டுகொள்ளவே இல்லை. எனினும் தமக்கான நீதி வழங்கப்படும் வரைக்கும் போராட்டம் தொடர்ச்சியா மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர்.


இதுமட்டுமல்லாமல், 20 நாட்களுக்கும் அதிகமாக கைவிடப்பட்ட எமது கல்வியின் நிலை என்ன?, எதிர்கால கனவை கலைக்காதே, புதுமுக மாணவர்களாகிய எமது நிலை என்ன?, பிரித்தாளும் தந்திரம் கல்விமான்களுக்கு அல்ல, சிறப்பான முறையில் இயங்கிய துறை கலக்கத்தில்' என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை கைகளில் ஏந்திய வண்ணம் அமைதியான முறையில் மாணவர்கள் தமது போராட்டத்தினை நடாத்தியிருந்தனர். இவ்விடயம் தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது, கலைப்பீட வகுப்புக்கள் அனைத்தும் கடந்த 23ம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. ஆயினும், கடந்த 21 நாட்களாக விரிவுரையாளர்கள் எவரும் வருகை தருவது இல்லை. அலுவலகமும் மூடப்பட்டுள்ளது. இதனால் எமக்காக வகுப்புக்கள் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. இதனையடுத்து எமது இணைப்பாளரும் பதவி விலகிச்சென்றுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக நிர்வாகத்திடம் பலதடவை முறைப்பாடுகள் செய்துள்ளளோம். ஆனாலும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. விரிவுரைகள் மீள ஆரம்பிப்பதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. இதனால் மாணவர்கள் அனைவரும் உளவியல் ரீதியில் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர். விரிவுரைகள் மீள ஆரம்பிக்கப்படாதது ஏன்? எமது துறை சார்ந்த பொருத்தமானதொரு இணைப்ப்hளரை வழங்குமாறு கேட்டுக்கொள்வதோடு, எமக்கான நல்லதோர் தீர்வை நியாயமான முறையில் பெற்றுத்தர வேண்டும். எதிர்வரும் காலத்திலும் எதுவித பிரச்சினைகள் இன்றியும் கற்றல் செயற்பாடுகளை தொடர்வதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.




« PREV
NEXT »

No comments