Latest News

August 14, 2013

இனப்படுகொலையை மூடிமறைக்கும் மூன்று பேர்! அதில் முதலாமவன் யார்? - புகழேந்தி தங்கராஜா
by admin - 0

தமிழ்நாட்டில் மட்டுமே சுமார் ஏழரை லட்சம் தமிழர்கள் இருக்கிறோம். இதுமட்டுமின்றி, இலங்கையில் நாம் பூர்வ குடியினர்.
35 லட்சத்துக்கு மேல் இருக்கும் அங்குள்ள தமிழரின் எண்ணிக்கை. இதுபோதாதென்று இந்தியாவெங்கும், உலகமெங்கும் சிதறிக் கிடக்கிறோம். ஆகப் பெரிய எண்ணிக்கை இது. அப்படியிருந்தும், ருவாண்டா என்கிற குட்டி நாட்டில் நடந்த இனப்படுகொலைக்குக் கிடைத்த நீதி, ஈழத்தில் நடந்த தமிழினப் படுகொலைக்காக இன்னும் கிடைத்த பாடில்லை.

இதற்குக் காரணம் 3 பேர். இந்த மூவரில் முதலிடத்தில் இருப்பது யார் என்பதைப் பிறகு சொல்கிறேன். இரண்டாமிடத்தில் இருப்பது - இந்தியா. மூன்றாமிடத்தில் இருப்பது, சர்வதேசம் மற்றும் சர்வதேச அமைப்புகள்.

நடப்பது இனப்படுகொலை என்பதைச்  சில நாடுகள் காலதாமதமாகத் தான் தெரிந்துகொண்டன. இந்தியா அதை ஆரம்பத்திலிருந்தே அறிந்திருந்தது. மரண வளையத்துக்குள் சிக்கிக் கொண்டவர்களில் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேர் அப்பாவித் தமிழ் மக்கள்தான் என்று இந்தியாவுக்குக் கண்டிப்பாகத் தெரியும். தோராயமாக எத்தனை ஆயிரம் பேர் கொல்லப்படுவார்கள் - என்கிற கணக்கும் தெரியும். அதுகூட தெரியாத மரமண்டைகளா இங்கே அதிகாரிகளாக இருக்கிறார்கள்....  இவர்களது மண்டை முழுக்க மூளையால் ஆனது. இதயம் தான் பிரச்சினை... அனேகமாக அது இரும்பினால் ஆனது.  அதிலும் கேரளத்து இரும்பு. கேட்க வேண்டுமா?

நோயாளிகள் நிறைந்து வழியும் மருத்துவமனைகளைத் தாக்குவது சர்வதேச விதிகளின் படி குற்றம் என்பது இந்தியாவுக்குத் தெரியும். மருத்துவமனைகளைக் கூட இலங்கை விட்டுவைக்காமல் தாக்கியதும் தெரியும். இலக்கு தெரியாத தொலைவில் இருந்து தாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் மல்டி பேரல் ராக்கெட் லாஞ்சர்கள் மூலம், மருத்துவ மனைகளை மிகக் குறுகிய தொலைவிலிருந்து தாக்கியதும், விமானங்களிலிருந்து மருத்துவமனைகள் மீது குண்டுவீசித் தகர்த்ததும் தெரியும். இவ்வளவு தெரிந்த பிறகும் இந்தியா தனது கடமையைச் செய்திருக்க வேண்டாமா என்று கேட்டீர்களென்றால், உங்களுக்கு விவரம் தெரியவில்லை என்று அர்த்தம்.

உண்மையில், மூன்று கடமைகளைக் கச்சிதமாகச் செய்தது இந்தியா. ஒன்று - தமிழ் மக்கள் மீதான தாக்குதல் நின்று விடாதபடி பார்த்துக்கொண்டது. இன்னொன்று - அங்கே என்ன நடக்கிறதென்பது வெளித் தெரியாதபடி பார்த்துக் கொண்டது. மற்றொன்று - அப்படியே தப்பித் தவறி சர்வதேச சமூகத்திலிருந்து யாராவது முணுமுணுத்தால் அவர்களை சமத்காரமாக சமாதானப்படுத்தியது, தமிழ்நாட்டிலிருந்து யாராவது குரல்கொடுத்தால் அவர்களை ஒடுக்கியது.

நடப்பது இனப்படுகொலை என்பதும், ஆயிரமாயிரமாய் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள் என்பதும், தமிழ்ச் சகோதரிகள் திட்டமிட்ட பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதும் தாய்த் தமிழகத்துக்குத் தெரியவந்தால், விளைவு விபரீதமாக இருக்கும் என்று நினைத்தது இந்தியா. அதனால்தான், அங்கே என்ன நடக்கிறது என்பது ஊடகங்களில் முழுமையாக வெளிவராதபடி பார்த்துக் கொண்டது. ஏழரைக் கோடி பேர் இருக்கும் தாய்த் தமிழகம் தெருவுக்கு வந்துநின்றால், அங்கே இனப்படுகொலையை நிறுத்தியாகவேண்டிய கட்டாயம் ஏற்படுமே! அதனால்தான் அதிர்ச்சியை அளிக்கும் செய்தி எதுவும் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைக்காதபடி பார்த்துக்கொண்டது. (நீடூழி வாழ்க ஊடக சுதந்திரம்!)

அங்கே என்ன நடக்கிறது என்பதை மட்டுமல்ல, இங்கே மிக முக்கியத் திருப்புமுனையாக அமைந்த முத்துக்குமாரைக் கூட இருட்டடிப்பு செய்யத் தயங்கவில்லை நமது பாசத்துக்குரிய பத்திரிகையாளர்களில் பலரும்! நித்யானந்தா விவகாரம் என்றால் மட்டும், படுக்கையறை வரை படையெடுக்கும் மாவீரர்கள், தங்களது சொந்தங்கள் உறவுகள் கொல்லப்பட்டபோது எங்கே போனார்கள்? பாரதியார், கல்கி, திரு.வி.க., புதுமைப்பித்தன்  போன்றவர்களெல்லாம் பத்திரிகையாளர்களாக இருந்த மண், இந்தத் தமிழ் மண் என்பதை எண்ணிப் பெருமூச்சு விடவேண்டிய நிலை.

அன்று, இனப்படுகொலை நடந்தே தீரவேண்டும் என்பதில் அக்கறை காட்டிய அதே அளவுக்கு, அது வெளியே தெரிந்துவிடாதபடி பார்த்துக் கொள்வதிலும் அக்கறை காட்டியது இந்தியா.  இன்று - நடந்த  இனப்படுகொலையை மூடிமறைப்பதில், இலங்கை காட்டும் அக்கறையைக் காட்டிலும், அதிக அக்கறையைக் காட்டுகிறது.

திகில் திரைப்படங்களில், கள்ளக் காதலியோடு சேர்ந்து அவளது  கணவனைக் கொன்றவன், அந்த உடலை காரில் வைத்துக்கொண்டு, யாராலும் கண்டுபிடிக்க முடியாத ஒரு இடத்தில் அதைப் புதைத்துவிட அவளோடு சேர்ந்து அலைவான் பாருங்கள்... அதே பதற்றத்துடன் ஜெனிவா, லண்டன் என்று பதறி அடித்துக்கொண்டு திரிகிறது இந்தியா. இலங்கைக்கு எதிராக, அங்கே நடந்த இனப்படுகொலைக்கு எதிராக,  எங்கேயாவது யாராவது மனசாட்சியுடன் ஒரு தீர்மானம் கொண்டுவந்தால், அதை நீர்த்துப் போகவைத்து இலங்கையைக் காப்பாற்ற அனைத்து வழிகளிலும் மெனக்கெடுகிறது.  காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தியே ஆகவேண்டும் என்பதற்காக, லண்டனில் அதுதொடர்பாக நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் சம்மனே இல்லாமல் வாலை நீட்டுகிறது.

இனப்படுகொலை நடந்தது இலங்கையில். ஆனால், ஒன்றரை லட்சம் பேரைக் கொன்று குவித்தது அம்பலமாகி விடுமோ - என்கிற பதற்றம் இந்தியா அளவுக்கு இலங்கையிடம் இல்லை.  சர்வதேசத்தைப் பற்றிய கவலையேயின்றி, இனப்படுகொலை நடவடிக்கைகளை இப்போதும் தொடர்கிறது. பாலியல் பலாத்காரம், நிலப்பறிப்பு, ஆள்கடத்தல், சிங்கள மயமாக்கல், பௌத்த மயமாக்கல் - என்று அதன் வழக்கமான அராஜகங்கள் இன்றும் தொடர்கின்றன. ஐ.நா.வின் குழுவையே உள்ளே விடமாட்டோம் - என்று இலங்கை முரண்டு பிடிக்கிறதென்றால், அந்த அளவுக்கு  இந்தியா முட்டுக் கொடுக்கிறது என்றுதான் அர்த்தம்.

இலங்கை நடத்திய படுகொலைகளைப் பற்றி விசாரிக்க ஐ.நா.வும் சர்வதேசமும் தேவையில்லை, இலங்கையே விசாரித்துக் கொள்ளும் - என்று ஈவிரக்கமின்றி இந்தியா வாய்தா வாங்கிக் கொடுக்கிறது. அந்த அவகாசத்தில், முள்ளிவாய்க்கால் வரை,  தமிழரின் பூர்விகத் தாயகமெங்கிலும், கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் பேரை உழுது புதைத்துவிட்டு, ரசாயனக் கலவைகளைத் தெளித்துவிட்டு, மேனி மீது அடிக்கிற பிணநாற்றம் தெரியாமலிருக்க பன்னீரைத் தெளித்துக்கொண்டு காமன்வெல்த் மாநாட்டுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது கொழும்பு.

இந்தியாவின் அனுசரணையுடன், நடந்த இனப்படுகொலைக்கு தடயமே இல்லாமல் செய்துவிட்டதாக நினைத்தது இலங்கை. சேனல் 4 - ஆதாரங்கள் வெளியே வந்தபோது, இலங்கையோடு சேர்ந்து இந்தியாவும் நடுங்கியது. நடந்தது பயங்கரவாதத்துக்கு எதிரான போரல்ல, திட்டமிட்ட இன அழிப்பு - என்பது ஒரு சர்வதேச ஊடகத்திடமிருந்து ஆதாரங்களுடன் வெளியாகும் என்று இரண்டு பேருமே எதிர்பார்க்கவில்லை.  சாட்சியமே இல்லை - என்கிற திமிரோடு திரிந்த அவர்களுக்கு, "நோ எவிடென்ஸ், நோ கிரைம்" என்பதன் தாத்பர்யம் அப்போதுதான் புரிந்தது.

இப்போது ஆதாரங்களும் வெளியாகின்ற நிலையில்,  ஜனத்தொகையில் பெரிய நாடு என்கிற முறையில்  சர்வதேசத்திடம் தனக்கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி, இலங்கைக்கு சர்வதேச நெருக்கடி ஏற்பட்டுவிடாதபடி பார்த்துக் கொள்ள மெனக்கெடுகிறது இந்தியா. பேயை அணைப்பானேன்... தீயைச் சுமப்பானேன்!

இலங்கைப் பிரச்சினை - என்பது அன்னை இந்திரா காந்தியின் காலத்தில் இந்தியாவின் ராஜதந்திர வெற்றிக்கு அடையாளமாக இருந்தது. ராஜீவ்காந்தியின் காலத்தில் அந்த அடையாளம் தகர்க்கப்பட்டது. அன்னை சோனியாகாந்தியின் காலத்திலோ, இந்தியாவின் ராஜதந்திரத் தோல்விக்கு அடையாளமாகி விட்டது.

ஈழத் தமிழர்களின் உரிமைப் போருக்கு ஆதரவாக இருந்ததன் மூலம், இந்தியாவின் புவிசார் பாதுகாப்பையும் உறுதி செய்துகொண்டவர் இந்திரா. 'இனப்படுகொலை செய்யாதே' என்று இலங்கையை எச்சரிக்கும் துணிவும் தெளிவும் இந்திராவுக்கு இருந்தது. கூடவே, அந்த எச்சரிக்கை இந்திய நலனுக்குத் தேவையானது - என்கிற தீர்க்க தரிசனமும் இருந்தது. இந்த மூன்றில் ஒன்றுகூட ராஜீவிடம் இல்லாமல் போனது தமிழினத்தின் துரதிர்ஷ்டம்.

ராஜதந்திரமில்லாமலோ இந்தியாவின் நலனைக் கருதாமலோ ஈழ விடுதலைப் போரை தன்னுடைய தாயார் ஆதரித்திருப்பாரா - என்று யோசித்துப் பார்க்க முடியவில்லை ராஜீவால். இந்திராகாந்தி, ராஜதந்திர நுணுக்கம் தெரிந்தவர்,  பன்னாட்டு அரசியல் அறிந்தவர். அதனால், இலங்கையின் ஏஜென்டுகளால் அவரை அணுகவே  முடியவில்லை. ராஜீவை அவர்கள் எளிதாக அணுகினர். அவர்களை அவர் முழுமையாக நம்பினார். (போபர்ஸ் ஏஜெண்டுகளையே நம்பியவராயிற்றே அவர்!)  ஜெயவர்தனே தான் நம்பகமானவர் - என்று அவர்கள் சொன்னதையும் நம்பினார். முதலுக்கே மோசம் - என்பதுமாதிரி, இந்திரா மூலம் உருவாகியிருந்த இலங்கை குறித்த தெளிவான பார்வை, ராஜீவின் ஆலோசகர்களால் குழப்பமடைந்தது. அந்தக் குழம்பிய குட்டையில்தான் மீன் பிடித்தார் ஜெயவர்தனே.

பாகிஸ்தானைப் போலவே இலங்கையும் பிரிவதுதான் இந்திய நலனுக்கு உகந்தது - என்கிற இந்திராகாந்தியின் தொலைநோக்குப் பார்வைக்கும், இலங்கை ஒரே நாடாய் இருப்பதுதான் இந்தியாவுக்கு நல்லது - என்கிற ராஜீவ், சோனியா பார்வைக்கும் சம்பந்தமே இல்லை.

ஆயிரமாயிரம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட பிறகு, மனிதநேய அடிப்படையில் இலங்கை தொடர்பான தெளிவான முடிவை எடுத்தார் இந்திரா அம்மையார். அந்த மண்ணின் பூர்விகக் குடிகளான தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமை இருப்பதை இந்தியா மனபூர்வமாக ஏற்கிறது என்பதை அவரது நடவடிக்கைகள் வெளிப்படையாக உணர்த்தின. அவர் ராஜீவ்காந்தியைப் போல், மூடுமந்திரமாகவே இருந்தவர் அல்ல. வெளிப்படையானவர். நல்லதோ கெட்டதோ, ஒளிவு மறைவில்லாமல் பேசியவர், செயல்பட்டவர். அதுதான் இந்திராகாந்தி.

டூன் ஸ்கூல் மற்றும் ஹார்வர்டு மேதாவிகளின் வழிகாட்டுதல் அடிப்படையிலோ என்னவோ, தாயின் நிலைக்கு எதிர்மாறான நிலையை எடுத்தார் ராஜீவ். போராளிகளைக் கூப்பிட்டு மிரட்டினார், ஜெயவர்தனேயைப் பார்த்து மிரண்டார். 13வது திருத்தம்தான் தீர்வு - என்று ஜெயவர்தனேயுடன் தன்னிச்சையாக ஒப்பந்தம் செய்துகொண்டார். அடுத்த நாளே, 13-ஐ எதிர்த்துப் பேசிய ஜெயவர்தனேயிடம் - 'இந்தியாவை முட்டாளாக்கப் பார்க்கிறீரா'  என்று கேட்டிருக்க வேண்டாமா ராஜீவ்? கேட்கவில்லை. மாறாக, ஒப்பந்தத்தை ஏற்கிறாயா இல்லையா - என்று தமிழர்களுக்காக உண்மையாகப் போராடியவர்களை மிரட்டிக் கொண்டிருந்தார்.  நீண்டகாலம் போராடிச்  சுதந்திரம் பெற்ற ஒரு நாட்டின் பிரதமர் என்பதை மறந்து, ஒரு மெய்யான சுதந்திரப் போரை நசுக்க அனைத்து வழிகளிலும் முயன்று தோற்றார்.

தன்னுடைய அரசியல் அறியாமையால் ராஜீவ் மேற்கொண்ட தமிழர் விரோத நடவடிக்கைகளுக்கும், சோனியாவின் தமிழின விரோத நடவடிக்கைகளுக்கும் அடிப்படையில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. பின்னதில், தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் மனப் போக்கும் அரசியல் வக்கிரமும் தூக்கலாக இருக்கின்றன.      லட்சக் கணக்கான தமிழரின் இனப்படுகொலையை விட, தனது கணவரின் படுகொலைதான் தனக்கு முக்கியம் என்கிற சுயம் சார்ந்த நிலையை எடுத்தார் சோனியா. இந்தியாவில் பிறந்த இந்திராவின் புதல்வருக்கே ஈழத்தின் வேதனையையும் வலியையும் புரிந்துகொள்ள முடியாது போன நிலையில், இத்தாலியில் பிறந்த இந்திராவின் மருமகளால் மட்டும் அதைப் புரிந்து கொண்டுவிட முடியுமா?

இந்தியாவின் விருப்பப்படிதான் இனப்படுகொலை நடந்தது - என்பதை முதல் முதலாகச் சொன்னவன் மகிந்த ராஜபக்சே தான். 'இந்தியாவின் போரைத்தான் நாங்கள் நடத்தினோம்' என்று அதிகாரபூர்வமாகவே பேசினான் அவன். அதனால்தான், இனப்படுகொலை என்பது அம்பலமாகிவிட்டால், இலங்கையுடன் சேர்ந்து தானும் உடன்கட்டை ஏறவேண்டியிருக்கும் என்கிற பயத்தில், ஜெனிவாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் துடித்துக் கொண்டிருக்கிறது இந்தியாவின் இதயம். கள்ளப் புருஷன்களின் கதை இப்படித்தான் ஆகும்.

தனி நபராக இருந்தாலும் சரி, ஒரு நாடாக இருந்தாலும் சரி, தவறான நபர்களை நம்புவதாலும் நாசம் வரும், சரியான நண்பர்களைச் சந்தேகிப்பதாலும் நாசம் வரும்.

தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும்

தீரா இடும்பை தரும்

என்று வள்ளுவன் குறிப்பிட்டது இதைத்தான்.

இப்போது அந்த நிலையில்தான் இருக்கிறது இந்தியா. உண்மையான நண்பர்களாகவும் இந்தியாவுக்குப் பாதுகாப்பாகவும் இருந்திருக்கக்கூடிய ஈழப் போராளிகளைப் பகைத்துக் கொண்டது. தனக்கு முந்தானை விரித்தபடியே, சீனாவுக்கும் பாய் விரிக்கும்  இலங்கையை நண்பனாக ஏற்றதன் பலனை இப்போது அனுபவிக்கிறது. இந்தியாவின் வாலில் வந்து சீனாவை உட்கார வைத்திருக்கிறது இலங்கை. நல்ல நட்பு, நல்ல ராஜதந்திரம்!

இந்தியா அளவுக்கு இல்லாவிட்டாலும், இலங்கையில் நடந்த இனப்படுகொலையை மூடி மறைப்பதில் அதில் பாதி அளவுக்காவது சர்வதேசம் பங்கெடுத்துக் கொள்கிறது. சர்வதேசம் என்பதில், ஐ.நா.வும் உலக நாடுகளும் அடக்கம். அவற்றில் பல நாடுகள், இலங்கை என்கிற இனப்படுகொலைக் குற்றவாளிக்கு ஆயுதம் கொடுத்தவை. அங்கே நடந்த விடுதலைப் போரை - 'பயங்கரவாதம்' என்று இலங்கையும் இந்தியாவும் கயிறு திரித்தபோது கண்டிக்காதவை. அங்கே போர் தான் நடக்கிறது - என்கிற பொய்ப் பிரச்சாரத்தை நம்பியவை.

ஐக்கிய நாடுகள் சபை, கொல்லப்படுவோரின் - கற்பழிக்கப் படுவோரின் எண்ணிக்கையை அது நிகழ்ந்தபோதே அம்பலப் படுத்தியிருந்தால், சர்வதேசத்தில் பெரும் சலசலப்பு எழுந்திருக்கும். அதனாலாவது, இலங்கை தனது திட்டமிட்ட இன அழிப்பை நிறுத்த வேண்டியிருந்திருக்கும். கொலைகார இலங்கைக்குத் துணை நிற்பதில், இந்தியாவுக்கு இணையாக நின்றது ஐ.நா. உரிய நேரத்தில் தகவல் எதையும் வெளியிடவேயில்லை. அங்கே என்ன நடக்கிறது என்பதை அறிந்தும், வாயைத் திறக்கவேயில்லை.   ஐ.நா. என்கிற அமைப்பு சர்வதேசத்தின் மீதும் நிகழ்த்திய நம்பிக்கை மோசடி அது.

சர்வதேசம் எப்படி மௌனம் சாதித்தது என்பதையும், நடந்த படுகொலைகளைத் தடுக்கும் பொறுப்பை எப்படித் தட்டிக் கழித்தது என்பதையும், அண்மையில் அமெரிக்கக் குழு ஒன்று அமெரிக்க அரசுக்குத் தெரிவித்துள்ளது. அந்த 2 உறுப்பினர் குழுவில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மேடலின் ஆல்பிரைட்டும் ஒருவர்.

"படுகொலைகளைத் தடுத்து நிறுத்தும் பொறுப்பைப் பற்றிக் கவலைப்படாமல், வெறுமனே கவலை தெரிவித்ததோடு நின்றுவிட்டது சர்வதேச சமூகம். சரியான நேரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டார்கள். அந்தக் காலக்கட்டத்தில் (இனப்படுகொலை நடந்துகொண்டிருந்த சமயத்தில்), அதுகுறித்து விவாதிக்க  ஐ.நா. பாதுகாப்பு சபையோ, பேரவையோ, மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டமோ கூட்டப்படவேயில்லை" என்று அந்தக் குழுவின் அறிக்கை, ஒன்றரை லட்சம் பேர் கொன்று குவிக்கப்பட்டு 4 ஆண்டு முடிவடைந்தபிறகு குற்றஞ் சாட்டுகிறது.

இதன் பின்னணியிலும் இந்தியாவும் இலங்கையும் தான் இருந்திருக்க வேண்டும் என்பது உறுதியாகத் தெரிகிறது.  ஏனென்றால், ஐ.நா.வின் இந்த மூடிமறைப்பு வேலைகளுக்கான முழுப் பொறுப்பும், அதன் அதிகாரி விஜய் நம்பியாரைச் சேரும். விஜய் என்கிற அந்த மனிதன், கேரளத்து வித்து. சுந்தர வித்தி. பார்ப்பதற்கு யோக்கியன் மாதிரியே இருக்கிற இனப்படுகொலைக் கூட்டாளி. இலங்கை ராணுவத்தின் ஆலோசகராக, அந்தச் சமயத்தில் இருந்தவன் விஜயின் சகோதரன் சதீஷ் நம்பியார். இந்த அபூர்வ சகோதர்களுக்குப் பின் இந்தியா அரூபமாக நின்றிருக்காதா என்ன!

இந்த மூடி மறைப்பு வேலைகளுக்காக சதீஷ் மூலம் விஜய்க்கு இலங்கை கோடி கோடியாய்க் கொட்டிக் கொடுத்திருக்கவேண்டும். விழுகிற ஒவ்வொரு பிணத்துக்கும் இத்தனை டாலர் - என்று பேரம் பேசிக் கூட வாங்கியிருக்கக்கூடும் ஈவிரக்கமற்ற நம்பியார்கள். இது போகிற போக்கில் நான் தெரிவிக்கிற குற்றச்சாட்டு அல்ல! 2008 - 2009ல் ஐ.நா.வின் கள்ள மௌனத்துக்கு இதைக்காட்டிலும் வேறு காரணம் இருந்திருக்க வாய்ப்பேயில்லை என்பதால், அழுத்தந் திருத்தமாகக் கூறுகிறேன் இதை! விஜய் நம்பியார் ஒருவனுக்குத் தான், களத்திலிருந்த ஐ.நா. பணியாளர்கள் மூலம், ஈழத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது உடனுக்குடன் தெரிந்திருக்கும். வேறு எதற்காக அவன் அதை மூடி மறைத்திருப்பானென்று நினைக்கிறீர்கள்?

ஒரு விடுதலை இயக்கத்தை நசுக்குவதற்காக எத்தனை லட்சம் மக்கள் செத்தாலும் பரவாயில்லை - என்கிற முடிவோடுதான்,   தமிழின அழிப்பைத் தொடங்கியது இலங்கை. அதன் பின்னணியில் இந்தியா தான் இருந்தது என்பது திட்டவட்டமான உண்மை. இனப்படுகொலை நடப்பது வெளியே தெரிந்துவிட்டால் அதை நிறுத்த நேரும் என்பதால், அதை மூடி மறைக்கும் வேலை விஜய் நம்பியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. சர்வதேசத்தின் முகத்திலும் அவன் கரிபூசிக் கொண்டிருந்தான். ஒன்றரை லட்சம் உயிர்களுக்கு உலைவைத்தது இந்த நாசகாரக் கூட்டணி அன்றி வேறெது?  இன்றைக்கு, நடந்தது இனப்படுகொலை என்பது அம்பலமாகிவிட்டால், ராஜபக்சேவுடன் சேர்ந்து கூண்டில் நிற்க வேண்டியிருக்கும் என்கிற அச்சத்தில், அதை மூடி மறைக்கும் வேலையில் முழுமூச்சாக இறங்கியிருக்கிறார்கள் இவர்கள்.

இனப்படுகொலையை மூடி மறைக்க முயலும் மூவரில், கடைசி இருவரைப் பற்றிப் பேசியாகி விட்டது. அந்த முதல் குற்றவாளி யார்?
« PREV
NEXT »

No comments