தமிழருக்கெதிரான போர்க்குற்றங்களை விசாரிக்க சர்வதேச விசாரணையை புலம்பெயர் தமிழ் மக்கள் கோரி வருகின்றனர். ஆனால், தற்போது வெலிவேரிய சிங்கள மக்களும் இராணுவத்தினருக்கெதிராக சர்வதேச விசாரணை தேவை எனக் குரல் எழுப்பி வருகின்றனர். காலக் கண்ணாடி சுழலும் தன்மை கொண்டது....!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் எங்ஙனம் அமைய வேண்டும் என்பதில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் ஆர்வம் கொண்டுள்ளன. தமிழரின் நியாயமான உரிமைக் குரல் அதில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவை குறிப்பிட்டுள்ளன.
ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க எந்த ஒரு புலம்பெயர் அமைப்பும் விரும்பவில்லை. அதேநேரத்தில் தாயகத் தமிழர்கள் படும் இன்னல்களையும், அவர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் இலங்கை அரசினால் நடத்தப்படுவதையும் உரத்துக் கூற வேண்டிய நேரம் இது.
வடமாகாண சபை தேர்தல் மூலம் தமிழருக்கு எவ்வித தீர்வும் கிடைக்காது என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால் அந்தத் தேர்தலை சர்வதேசம் உற்று நோக்க ஆரம்பித்துள்ளது. எனவே, தமிழர்கள் தமது நிலைப்பாட்டினை தெளிவாகத் தெரிவிக்கும் கட்டாயம் எழுந்துள்ளது. அதனால்தான் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இங்கு முக்கியத்துவம்
பெறுவதாக புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சுட்டிக் காட்டியுள்ளன.
குறிப்பாக பிரித்தானிய தமிழர் பேரவை நான்கு முக்கிய விடயங்களை தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுள்ளது. அதன் மூலம் தாயகத் தமிழ் மக்களின் விருப்பத்தினை கூட்டமைப்பு சர்வதேசத்தின் முன் வைக்க முடியும்.
1. தாயகத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். தம்மைத் தாமே தமது தாயக மண்ணில் நிர்வகித்துக் கொள்ளும் உரிமம் இவர்களிடமே வழங்க வேண்டும்.
2. மிகப் பெரிய பேரழிவை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திய போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணை அவசியம்.
3. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர் காணிகள் அபகரிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அபகரிக்கப்பட்ட காணிகள் அனைத்தும் திருப்பி வழங்கப்பட வேண்டும்.
4. வடக்கு, கிழக்கு மாகாணம் இணைந்த நிர்வாகக் கட்டமைப்பு போன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அதில் புலம்பெயர் தமிழ் மக்களும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ள இந்நான்கு கோரிக்கைகளும் கூட்டமைப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவை தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இவைபோன்ற கோரிக்கைகளை புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் விடுப்பதற்கும் சில காரணிகள் இருக்கின்றன. சர்வதேசத்தின் அழுத்தம் என்பது இலங்கை அரசின் மீது பிரயோகிக்கப்படுவது போதுமானதாக இல்லை.
முழுமையான அழுத்தம் வருமேயானால் இலங்கை அரசு சர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நிச்சயமாக முன்வரும். குறிப்பாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்கும். எனவே, தமிழ் மக்கள் தரப்பில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் உலகெங்கிலும் ஜனநாயகப் போராட்டங்களை நடத்தி வருகின்றன. உலக நாடுகள் இலங்கை அரசை தட்டிக் கொடுப்பதை விடுத்து
தண்டனை வழங்கி வழிக்குக் கொண்டு வரவேண்டும். புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பிரிந்து நின்றாலும் இணைந்து வெளியிடும்
செயற்பாடுகள் இது. வடமாகாண சபை தேர்தலை ஒரு கருத்துக் கணிப்பாக உலகம் சீர்தூக்கி பார்க்க முற்படுகின்றது.
அதனால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமும் தாக்கமிக்கதாக இருக்க வேண்டும் என அவை எதிர்பார்க்கின்றன.
வடமாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றாலும் தமிழர் பிரச்சினையை தமிழர் தேசியக்கூட்டமைப்பினால் தீர்த்து வைக்க முடியாது. ஆனால், தமிழர் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த ஒரு தூண்டுதலை ஏற்படுத்த முடியும். ஏனைய மாகாண சபை தேர்தல்களில் தேர்தல் விதி முறைகள் மீறப்பட்டிருக்கலாம். இருப்பினும், வடமாகாண சபைத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டால் அது
உடனடியாகவே சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்படும்.
வடமாகாண சபைத் தேர்தலை கண்காணிக்க சர்வதேச கண்காணிப்புக்குழு அவசியமில்லை என இலங்கை அரசு ஆரம்பம் முதலே கூறி
வருகின்றது. அது ஓர் உள்ளூராட்சி மன்ற தேர்தல் என அரசு குறிப்பிடுகின்றது. ஆனால் பொதுநலவாய அமைப்பு பிரதிநிதிகள் குழு,
அவ்வாறான கண்காணிப்புக்குழு அவசியம் என பரிந்துரைத்துள்ளது. எனவே, வடமாகாண சபை தேர்தலைக் கண்காணிக்க சர்வதேசக் குழுவை அழைக்க வேண்டிய நிலை இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தை நாம் கண்காணிப்புக்குழுவாக அழைக்க முடியாது என அரசு தற்போது தெரிவித்து வரு கின்றது. இருப்பினும் தேர்தலை கண்காணிக்க சர்வதேச கண்காணிப்புக்குழுவுக்கு அனுமதியளிக்க வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது என்பதை இங்கு
குறிப்பிட்டாக வேண்டும். கடந்த சில நாட்களாக பொதுநலவாய அமைப்பு நாடுகளின் பிரதிநிதிகள் குழுவொன்று வடமாகாணத்தில் பல ஆய்வுகளைச் செய்து வந்தது. அதனடிப்படையிலேயே அவர்களின் பரிந்துரை அமைந்தது.
பொதுநலவாய அமைப்பு மாநாட்டின் தலைவராகப் போகும் ஜனாதிபதியினால் அதனைத் தட்டிக் கழிக்க முடியவில்லை. தேர்தல் விதிகளை மீறி அரசின் உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் கூட அரசுக்கு ஆதரவாக பரப்புரைகள் மேற்கொள்ளப்படுவதாக புகாரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தாம் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் அச்சுறுத்தப்பட்டதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வேட்பாளர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
இம்முறைப்பாடு சாவகச்சேரி நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. இது குறித்து காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என சாவகச்சேரி நீதிவான் உத்தரவிட்டுள்ளதும் இங்கு குறிப்பிடக்கூடிய விடயமாகும்.
இதேபோன்று சிங்கள ஜாதிக்க பெரமுன என்ற அமைப்பும் வடமாகாண சபை தேர்தலை நிராகரிக்கக் கோரி மனுவொன்றைத் தாக்கல்
செய்திருந்தது. அந்த அமைப்பின் தலைவர் விஜித ரோஹண விஜயமுனி முன் னாள் கடற்படை வீரர். ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன இருந்த போது முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு இராணுவ மரியாதையை வழங்கினார். அப்போது துப்பாக்கிப் பிடியினால் அவரைத் தாக்கியவர் தான் விஜயமுனி. அப்போது அவருக்கு மனநிலை குன்றியவர் எனக் காரணம் காட்டி, அவரை கண்டிக்காமல் மனநோயாளிகள் மருத்துவ விடுதிக்கு அனுப்பினார் அன்றைய ஜனாதிபதி அவர் இப்போது அரசியல் கட்சிக்கு தலைவராகப் பதவி வகிக்கிறார்.
அவர் எப்போது மனநோயாளியானார், எப்போது குணமானார் என்பதும் அந்த ஜனாதிபதிக்கே தெரியும்....!
அப்படிப்பட்ட விஜித ரோஹண விஜய முனி மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதியரசர்கள் நிராகரித்து விட்டனர். அவரின் கட்சி ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படவில்லை என தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டதினால் மனு நிராகரிக்கப்படுவதாக தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடமாகாண சபைத் தேர்தலில் வேறு மாகாணங்களில் இல்லாத அளவு 14 அரசியல் கட்சிகளும், 16 சுயேச்சை குழுக்களும் களமிறங்கியுள்ளன. ஆனால் போட்டி என்று எடுத்துக் கொண்டால் இரண்டு கட்சிகளுக்கிடையே மாத்திரமே உள்ளதாக பலரும் குறிப்பிடுகின்றார்கள். ஏனையவை தமிழர் வாக்குகளைப் பிரிப்பதற்காக களம் இறக்கப்பட்டிருக்கலாம் என சில ஆய்வாளர்கள்
தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போருக்குப் பின் இணைந்துள்ள இரு அரசியல் கட்சிகள் குறித்து புலம்பெயர் தமிழர் மத்தியில் பலத்த சந்தேகம்
தெரிவிக்கப்பட்டு வருகிறது. அக்கட்சியினர் போருக்கு முன் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக அரசுடன் சேர்ந்து இயங்கியவர்கள் என்பது தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரியும்.
அதனால் அவர்களும் தேர்தலில் போட்டியிடுவதை குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதை புலம்பெயர்ந்த தமிழ் மக்களில் பலரும் விரும்பவில்லை. புலம்பெயர் ஊடகங்க ளில் இடம்பெறும் உரையாடல்கள் மூலம் இக்கருத்தை அவர்கள் வெளியிட்டு வருகின்றனர். அவ்விரு கட்சியினரும் தமது தவறை உணர்ந்து தமிழ்த்தேசியத்தை ஆதரித்து தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் தொண்டாற்றுவதன் மூலமே இந்தக் கருத்தை மாற்ற முடியும். அதற்கு முன்பாக பதவிகளில் அமர்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என ஆய்வாளர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தாயகத்திலிருந்து புலம்பெயர் ஊடகங்களுக்கு வரும் கருத்துக்களும் இதனையே வலியுறுத்தி நிற்கின்றன. சர்வதேசத்திற்கு தமது நிலைமையை எடுத்துக்காட்டுவதற்காக தமிழ் மக்கள் அளிக்கும் வாக்குகள் தமக்குள்ள ஆதரவிற்காகவே கிடைத்ததாக இவர்கள் கருதி விடக்கூடாது
என்பதனையும் அவர்கள் தெரிவித்து வருகின்றார்கள்.
மக்கள் படும் அவலம் பலருக்கும் வெளிப்படுத்தப்படுவதில்லை. புலம்பெயர் தமிழ் மக்கள் யாழ்ப்பாண நகருக்குச் சென்று விட்டு எல்லோரும் அங்கு மகிழ்ச்சியுடன் இருப்பதாகவே தென்படுகின்றார்கள் எனக் குறிப்பிடுகின்றார்கள். ஆனால் உண்மை நிலைமை அவர்களும்
அறிந்துள்ளார்கள்.
சிங்கள சேருவில மாவட்டம்!
கிழக்கு மாகாணத்தில் மேலும் ஒரு சிங்கள மாவட்டம் ஏற்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் இனங்களுக்கிடையேயான நல்லிணக்க முயற்சிக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில் 1949 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 14 சிங்கள வாக்காளர்களே வாக்களித்துள்ளனர். அங்கு ஏற்படுத்தப்பட்ட சிங்கள குடியேற்றங்கள் பல தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகளில் ஏற்படுத்தப்பட்டன.
இரண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப் பினரும் தெரிவாகும் திருமலை மாவட்டத்தில் தற்போது இரண்டு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களும் தலா ஒவ்வொரு தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரும் தெரிவாகியுள்ளனர்.
இந்நிலையில் திருகோணமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து சேருவில மாவட்டம் ஒன்றை ஏற்படுத்த அரசு பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இதற்கென இறக்கக்கண்டி முதல் குச்சவெளிவரை 500 ஏக்கர் காணிகளையும் மூதூர் முதல் கிண்ணியா வரையிலான 300 ஏக்கர் காணிகளையும் அரசு சுவீகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இவை தமிழ், முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமானவை என் றும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்காகவே இவ்வாறு சேருவில மாவட்டம் உருவாக்கப்படவுள்ளதாக தமிழர் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டம் மாத்திரமே சிங்கள மாவட்டமாக உள்ள நிலையில் இரண்டாவது சிங்கள மாவட்டமாக சேருவில உருவாக்கப்படவுள்ளது.
இதனால் திருகோணமலை மாவட்டத்தி லுள்ள தமிழர்களும் முஸ்லிம்களும் பெரி தும் பாதிப்படையவுள்ளனர் என்றும் குறிப்பிடப்படுகின்றது. புலம்பெயர் தமிழர் மத்தியில் இச் செய்தி கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்கள் போரின்போது கொல்லப்பட்டது தொடர்பாக சர்வதேச விசாரணை தேவையென புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்ச்சியாகக்கோரி
வருகின்றனர்.
அதற்கு எதிராக கடந்த காலங்களில் சிங்கள மக்கள் ஊர்வலமாக சென்று ஐ.நா. கொழும்பு பணிமனையில் மனுக்களைச் சமர்ப்பித்தனர்.
அவ்வாறு ஊர்வலமாகச் சென்றவர்களில் வெலிவேரிய பகுதி சிங்கள மக்களும் அடங்குவர். ஆனால் இன்று இராணுவ வன்முறைக்கெதிராக
சர்வதேச விசாரணை தேவையென அவர்களும் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.
இதனை ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தகுந்த ஆதாரங்க ளுடன் சுட்டிக் காட்டி வருகின்றார். புலம் பெயர் தமிழ் ஊடகங்கள் அனைத்தும் இன்று அவரின் உரையை வெளியிட்டு வருகின்றன.
முள்ளிவாய்க்கால் அவலம் நடந்தபோது அங்குள்ள மக்களைக் காப்பாற்றுமாறு நாம் குரல் எழுப்பினோம். அப்போது எங்கள் மீது எல்லோரும் புலி முத்திரை குத்தினார்கள். இராணுவத்தின் அட்டூழியத்தினால் பல தமி ழர்கள் அங்கு கொல்லப்பட்டதாக நாம் கூறினோம்.
எவரும் நம்பவில்லை. முள்ளிவாய்க்கால் படுகொலைகளை விசாரிக்க சர்வதேச விசாரணைக்குழு தேவை எனக் கூறினோம். ஆனால் வெலிவேரியவில் இப்போது நடந் துள்ளதும் இராணுவ அட்டூழியமே. எனவே அதற்கும் சர்வதேச விசாரணை தேவை. இதற்கும் சர்வதேச
விசாரணை தேவையென நாம் இப்போதும் தெரிவிக்கின்றோம்.
இவ்வாறு மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளது சிங்களவர் மத்தியில் விழிப்பை ஏற்படுத்தி வருவதாக சில ஆய்வுக் குறிப்புகளில் தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தலைமை யில் இராணுவ விசாரணைக் குழு வொன்று வெலிவேரிய அசம்பாவிதம் குறித்து விசாரித்து வருகின்றது.
ஆனால், இராணுவத்திற்கு எதிரான புகாரை இராணுவத்தினரே விசாரணை செய்ய முடியாது என சர்வதேச மன்னிப்புச் சபை கண்டித்துள்ளது. இச்சம்பவத்திற்கென பொது விசாரணை அவசியம் என அது கேட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment