Latest News

August 22, 2013

நிபுணர்களுடன் முள்ளிவாய்க்காலுக்குச் செல்லுங்கள் ! எழிலனையும் சந்தியுங்கள் !! நவி பிள்ளை அலுவலகத்தில் நேரடியாக மனுக்கையளிப்பு: - TGTE
by admin - 0

ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் நவநீதம் பிள்ளை அம்மையார் அவர்கள் இலங்கைத்தீவுக்கான பயணத்தினை மேற்கொள்ள இருக்கின்ற நிலையில் , அப்பயணத்தின் போது நிபுணர்களையும் அழைத்துச் சென்று முள்ளிவாய்க்கால் பகுதியினை ஆய்வு செய்வதோடு, சிறிலங்கா படைகளிடம் சரணடைந்த அரசியல் தலைவர் எழிலனையும் சந்திக்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது. ஈழத்தமிழர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறையின் ஒர் அங்கமாக தமிழர் தாயகப் பிரதேசங்களில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பாளர்களை நிலை கொள்ள வைப்பதுடன், சிறிலங்கா படைகளினது பாலியல் அத்துமீறல்கள் அச்சுறுத்தல்கள் ஆகியனவற்றில் இருந்து போரினால் விதவைகளாக்கப்பட்ட 90,000க்கு மேலான தமிழ்ப் பெண்களையும், அவர்களின் பெண்பிள்ளைகளையும் பாதுகாப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கும்படியும் ஐ.நா ஆணையாளரிடம் கோரப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைச்சபை விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி சுகிந்தன் அவர்கள் இக்கோரிக்கை அடங்கிய மனுவினை ஆணையாளரின் அலுவலத்தில் நேரடியாக கையளித்துள்ளார். ஐ.நா மனித உரிமைச்சபையின் உயராணையாளர் என்ற முறையில், இலங்கையில் வாழும் ஈழத்தமிழரின் மனித உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்து, தொடர்ந்து பேணக்கூடிய பாதுகாப்புக்கு வேண்டிய அர்ப்பணத்தை செய்ய சிறிலங்கா அரசை தூண்டக்கூடிய நெம்புசக்தியும், உயர் அந்தஸ்த்தும் தங்களிடம் இருக்கின்றது என ஆணைணயாளர் நவி பிள்ளை அவர்களுக்கு அனுப்பியிருந்த கடித்தத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் ஏலவே சுட்டிக்காட்டியிருந்தார். இந்நிலையில் கையளிக்கப்பட்ட மனுவில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களாக : 1. ஆட்கடத்தல், காணாமல் போதல், சித்திரவதை, சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள் , பாலியல் வன்முறைகள் உள்ளடங்கலாக எண்ணிலடங்காத மனித உரிமை மீறல்கள் தீவின் வடக்கு-கிழக்கு பாகங்களிலுள்ள ஈழத்தமிழ் மக்கள்மீது சிறிலங்கா படையினரால் நிறைவேற்றுப்பட்டு வருகிறது. தமிழ் பிரதேசங்களிலுள்ள சிறிலங்கா படையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையிலானன விகிதாசாரம் உலகெங்குமில்லாதவாறு உயர்வானதாக இருப்தாக நம்பப்படுகிறது. (இது அண்ணளவாக ஐந்து பொதுமக்களுக்கு ஒரு இராணுவம்.) ஒட்டுமொத்த சட்ட விதிவிலக்குடன், சிறிலங்காவின் படையினர் இந்த அத்துமீறல்களை செய்து வருகிறார்கள். ஈழத்தமிழ் மக்களை பாதுகாக்கக்கூடிய ஒருவழியானது, தீவின் வடக்கு-கிழக்கு பகுதிகளில் ஐ.நாவின் மனித உரிமைகள் கண்காணிப்பாளர்களை நிறுத்த தேவையான அனுமதியை தர சிறிலங்கா அரசை இசைய செய்வதுடன், அவர்களை அங்கே நிறுத்துவதுமாகும். 2. இறுதிப் போரின் போது சிறிலங்கா படைகளிடம் சரணடைந்த எழிலன் , பாலகுமாரன் போன்ற அரசியற் தலைவர்களையும், வண.பிதா பிரான்சிஸ் யோசெப்பு அடிகளாரையும், மற்றும் சரணடைந்த பொது மக்களையும் சந்திக்கும்படியும் தங்களை ஊக்குவிக்கிறோம். இவர்கள் சிறிலங்கா படைகளிடம் சரணடைந்ததை நேரடியாகக் கண்ட பல சாட்சிகள் உள்ளன. இதுவரை இவர்களை சந்திப்பதற்கான அனுமதியினை சிறிலங்கா அரசு வழங்காத நிலையில், ஐ.நா மனித உரிமைச்சபையின் உயராணையாளர் என்ற முறையில், தங்களுக்கான உயர்நிலையினை பிரயோகித்து சரணடைந்தவர்களை சந்தியுங்கள். 3. போரினால் விதவைகளாக்கப்பட்டுள்ள 90,000க்கு மேலான தமிழ் பெண்கள் மற்றும் அவர்களது பெண் பிள்ளைகள் சந்திக்கின்ற நெருக்கடிகளை அறிந்து கொள்ள அவர்களை சிலரையாவது தாங்களை சந்திக்குமாறு நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம். இப்பெண்களின் நலங்களை கவனிப்பதற்கு திடமான நிகழ்ச்சி திட்டங்களை வகுக்குமாறும், அவர்களின் பாதுகாப்புக்காக அவர்களின் பகுதிகளில் ஐ.நா மனித உரிமைகள் பெண் கண்காணிப்பாளர்களை நிலை நிறுத்தும்படியும் ஊக்குவிக்கிறோம். அவ்வாறான தொடர்சியான கண்காணிப்பின் ஊடாகவே சிறிலங்கா படைகளிடம் இருந்து இப்பெண்களது அனைத்துவிதமான பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியும். சிறிலங்காவும் பொஸ்னியா, பர்மா, மற்றும் சில நாடுகள் போல் பாலியல் வன்முறைகளை போர் தந்திரங்களாக உபயோக்கிக்கும் ஒரு நாடாகும் என அமெரிக்க இராஜாங்க அமைச்சின் முன்னாள் செயலர்கில்லாரி கிளிண்டன் அம்மையார் அவர்கள் ஏலவே சுட்டிக்காட்டியிருக்கின்றார். ஆகவே தங்கள் காரியாலயத்தை பயன்படுத்தி தமிழ் பெண்கள் தங்கள் காவலுடனும், கௌரவத்துடனும் வாழத்தக்க செயல் திட்டங்களை வகுக்குமாறும் ஊக்கப்படுத்துகிறோம். 4 சிறிலங்கா அரசால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் முழுமையான பட்டியல் ஒன்றை சிறிலங்கா அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறும், அந்த கைதிகளுக்கு அவர்களினது குடும்ப அங்கத்தவர்களையும், வழக்கறிஞர்களையும் சந்திக்க முழு அனுமதியையும் பெற்றுக்கொடுக்கும்படியும் தங்களை ஊக்குவிக்கிறோம். இந்த கைதிகள் மீது வழக்குகள் நீதமன்றங்களில் கொண்டுவரப்பட்டால், அனைத்துலக கண்காணிப்பளர்கள் அங்கு சென்று இந்த வழக்குகளை அவதானிக்க அனுமதிக்கும் உறுதிமொழியை சிறிலங்கா அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள். 5 போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட இடமான முள்ளிவாய்க்காலுக்கும் பயணிக்குமாறு தங்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம். அப்பகுதியின் மண்,நீர் போன்றவற்றின் மாதிரிகளை எடுத்து அவற்றில் இராசயன ஆயுதங்களை பாவித்து பொது மக்களை கொன்றதற்கான தடயங்கள் இருக்கா என்று கண்டறிய, தொழில்த்துறை நிபுணர்களை, தங்களுடன் அழைத்துச் செல்லவும். அங்கு பாரிய மனிதப் புதைகுழிகள் இருப்பதை சோதித்து கண்டறியவும் தேவையான நிபுணர்களையும் அழைத்து செல்லவும். இரசாயன ஆயுதங்களுடன், குண்டு வீச்சு, எறிகணைகள், துப்பாக்கி சுடு போன்றவையைப் பாவித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு மனிதப் புதைகுழிகளில் புதைக்கப்பட்டிருப்பதாக, பல்வேறு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. 6. இந்திய தமிழ்நாட்டு தமிழ்மீனவர்களையும் தாக்கி, அச்சுறுத்தி சிறையில் அடைப்பதை சிறிலங்காவின் கடற்படை வழமையாகக் கொண்டிருக்கிறது சிறிலங்காவின் சிறை வைக்கப்பட்டிருக்கும் இந்திய தமிழ்நாட்டு தமிழ்மீனவர்களின் விடுதலையையும் பெற்றுக்கொடுக்கும் படி தங்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம். இவ்வாறு கையளிக்கப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
« PREV
NEXT »

No comments