Latest News

August 05, 2013

தமிழீழத்தில் சுதுமலைப் பிரகடனம் தமிழினத்தலைவரால் நிகழ்த்தபட்டது 04.08.1987 ஆகும்
by admin - 0

தமிழினத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் முதன் முதல் தமிழீழ மக்கள் முன்தோன்றி உரையாற்றி இன்றுடன் 28 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

ஓகஸ்ட்4ம் நாள் சுதுமலை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு முன்னர் இவ்வளவு திரளான தமிழீழ மக்கள் ஒரே இடத்தில் திரண்டிருந்ததாக குறிப்புகள் எதுவும் இல்லை. லட்சக்கணக்கான மக்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பிராந்திய பொறுப்பாளர்கள், தளபதிகள் எல்லோரும் பேசினார்கள். எல்லோருடைய பேச்சின் முடிவிலும் அவர்கள் ஒன்றை குறிப்பிட தவறவில்லை. தலைவர் எமது அமைப்பின் முடிவை அறிவிப்பார் என்பதே அதுவாகும். இறுதியாக மேடையில் ஏறினார் தமிழினத்தலைவர் அவர்கள், அங்கு அந்த வரலாற்றுப் புகழ்மிக்க உரை மக்களுக்கு முன்பாக ஆரம்பமாகியது. மிகவும் ஆணித்தரமான குரல், அடிமனதையும் அசைத்துவிடும் உறுதி நிறைந்த குரலில் மிகவும் இலகுவான வார்த்தைகளில் எல்லோருக்கும் புரியும்படியான சொற்களில் அந்த உரை ஆரம்பித்தது.

எனது அன்புக்குரிய தமிழீழமக்களே!
என்று ஆரம்பித்த அந்த உரை மிகத்தெளிவாகவே மக்களுக்குள் உள்நுழைந்து எமது விடுதலையை வேறுஎவரும் எடுத்துத்தரவே போவது இல்லை என்ற உண்மையை உறைக்கச் சொன்னது. அந்த உரை முழுவதும் தமது மக்களின் பாதுகாப்பு, அதற்கான உத்தரவாதம் என்பது பற்றியே திரும்பத் திரும்ப வலியுறுத்தியது.

இந்த ஒப்பந்தம் தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் விதமாகவோ தமிழ் மக்களின் போராட்ட சக்தியின் ஒப்புதலுடனோ செய்யப்படவே இல்லை என்பதை மிகத்தெளிவாக கூறியது. ஒப்பந்தத்தின் உண்மை முகத்தை தோல் உரித்துக் காட்டியது. உரையின் இறுதியில் அவர் தெளிவான தனது குரலில் எந்தவித தடுமாற்றமும் இன்றி அறிவித்தார்.

"இந்த ஒப்பந்தம் தமிழ்மக்களுக்கான நிரந்தர தீர்வு எதையும் தந்துவிட போவதில்லை. சிங்கள பேரியவாத பூதம் இந்த ஒப்பந்தத்தை விழும்காலம் வெகுதொலைவில் இல்லை" என்றார் தமிழினத்தலைவர். அவர் தொடர்ந்து 'ஈழத்தமிழர்களுக்கு நிரந்தரமான ஒரே தீர்வாக சுதந்திர தமிழீழமே என்பதில் நான் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறேன். சுதந்திர தமிழீழ தேசத்தை அடையும் போராட்டத்தில் நான் தொடர்ந்தும் ஈடுபடுவேன் என்று மிகத்தெளிவாக உங்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.' என்று ஆழமான உறுதியுடன் கூறிவிட்டு "போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் போராட்ட இலட்சியம் ஒருபோதும் மாறாது" என்ற வரலாற்று வீரியம் நிறைந்த வசனத்தையும் கூறினார்.

உரையின் மிகமிக இறுதி வசனமாக 'நான் இந்த தேர்தல்களில் போட்டியிடப்போவதோ முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவோ போவதில்லை' என்று கூறியதன் மூலம் தமிழீழத்துக்கான தனது போராட்டம் ஒருபோதும் ஓயாது என்று சுட்டிக்காட்டினார்.

தமிழினத்தலைவரின் உரையில் இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் சிங்கள அரசுக்குமான பதில்கள் இருந்தாலும் உண்மையில் அந்த உரை மக்களை நோக்கியதாகவே இருந்தது.

« PREV
NEXT »

No comments