அமெரிக்கா செல்லவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனேடியக் கிளை நாளை ஒழுங்கு செய்துள்ள ஒன்றுகூடலில், இரா.சம்பந்தன் மற்றும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
இதையடுத்து அவர்கள் வரும் 12ம் நாள் அமெரிக்கா செல்லவுள்ளனர்.
வொசிங்டனில் அவர்கள், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளை சந்தித்து வடக்கு மாகாணசபைத் தேர்தல் குறித்து விளக்கமளிக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
எனினும், இதுதொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
அத்துடன், வொசிங்டனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் யாரைச் சந்திக்கவுள்ளார் என்பது குறித்தும் தகவல் இல்லை.
அமெரிக்க இராஜாங்கச்செயலராக கடந்த பெப்ரவரி மாதம், ஜோன் கெரி பதவியேற்ற பின்னர், இராஜாங்கத் திணைக்களத்தில் பல மாற்றங்கள் இடம்பெற்றுள்ள சூழலிலேயே இவர்கள் வொசிங்டன் செல்லவுள்ளனர்.
No comments
Post a Comment