Latest News

August 16, 2013

மஹிந்த ராஜபக்ஷவை யுத்தக் குற்றவாளியாக சித்தரிக்கவே நவநீதம்பிள்ளை இலங்கை வருகிறார் - விமல் வீரவன்ச
by admin - 0

நாட்டில் இறுதி யுத்தத்தின் போது இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த குற்றங்களுக்கு மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்பேற்க வேண்டும் என்ற அறிக்கையை தயாரிக்கவே நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வருகை தரவுள்ளார் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நாட்டில் வாழும் மதங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தி, கலவரங்களை உருவாக்கி, நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க அமெரிக்கா உட்பட மேலைத்தேய நாடுகள் திட்டம்தீட்டி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய மாகாணசபைத் தேர்தலை முன்னிட்டு மாத்தளை மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,
யுத்தம் நிறைவடைந்து நான்கு வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் சிங்கள - முஸ்லிம்களுக்கிடையிலே கலவரங்களை உருவாக்கி முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் செயல்களுக்கு அரசு எவ்விதத்திலும் நடவடிக்கை எடுப்பதில்லையெனக் கூறவைத்து முஸ்லிம் வாக்குகளை இவ்வரசாங்கத்துக்கு கிடைக்காமல் செய்வதே அமெரிக்காவின் திட்டமாகும்.

அதேபோன்று தமிழ் - முஸ்லிம்களின் உறவின் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்தி கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒற்றுமையுடன் கூடிய மாகாண சபையை ஸ்தாபித்து வடக்கையும் கிழக்கையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதே அமெரிக்காவின் முக்கிய சூழ்ச்சியாகும்.

அத்துடன் யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் மறுபடியும் இனவாதத்தை தூண்டி மறுபடியும் யுத்தத்தை ஏற்படுத்த கடுமையான திட்டம் தீட்டப்படுகின்றது.
நாட்டினை பிளவுபடுத்துவதும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை கவிழ்ப்பதுவுமே இத்திட்டத்தின் நோக்கம். அதன்பின்பு பலவீனமான தலைவரான ரணிலில் ஆட்சியை ஏற்படுத்தி மத கலவரத்தை ஏற்படுத்துவதும், பொருளாதாரத்தை சீரழிப்பதுவுமே அமெரிக்காவின் பிரதான நோக்கமாகும்.

அத்துடன் நாட்டில் இடம்பெறும் கலவரங்களுக்கு கவலை உணர்வுடன் கூடிய அறிக்கை வெளியிடுவதனூடாக இலங்கையின் நட்பு நாடாக நடித்து இலங்கை திருநாட்டை படுகுழிக்குள் தள்ளிவிட அமெரிக்கா பார்க்கிறது. இதுகுறித்து மக்கள் சிந்திக்க வேண்டும்.

« PREV
NEXT »

No comments