முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள துணுக்காய் பிரதேசத்தில் மல்லாவிக்குளம் அலைகரையிலிருந்து அணிஞ்சியன்குளம் பிற்பகுதி வரையான சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பினை தெங்கு உற்பத்திக்கு பயன்படுத்தவுள்ளதால் தமது மேய்ச்சல் தரை நிலங்கள் பறிபோகக் கூடிய அபாயம் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் கால்நடை வளர்ப்போர் விசனம் தெரிவிக்கின்றனர்.
கடந்த 1998, 1999 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இதனை மேய்ச்சல் தரவைக்காக ஒதுக்கீடு செய்யுமாறு அப்பிரதேச கால்நடை வளர்ப்போர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அப்போது இடம்பெற்ற யுத்த சூழ்நிலைகளால் இதனை மேய்ச்சல் தரவைக்காக ஒதுக்க முடியாமல் இருந்துள்ளது. அதன் பின்னர் மீள்குடியமர்ந்த மக்கள் தொடர்ச்சியாகவே இதனை தமது கால்நடைகளின் மேய்ச்சல் தரையாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
வன்னிப் பிரதேசத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான பால் மற்றும் எரு என்பன பிற இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் கால்நடைகளுக்கான உணவு போதியளவு கிடைக்கவில்லையாயின் கால்நடைகளின் உற்பத்தியும் பாதிக்கப்படலாம் என இப்பகுதிகளில் கால்நடை வளர்ப்போர் தெரிவிக்கின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன. இதில் துணுக்காய் பிரதேசத்தில் சுமார் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன. ஒரு மாட்டிற்கு மேய்ச்சல் தரையாக சுமார் அரை ஏக்கர் நிலம் தேவைப்படுகின்றது. இந் நிலையில் வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இவ் இடத்தைப் பயன்படுத்துவது எமக்கு வேதனையளிக்கின்றது எனவும் அப் பகுதிகளில் கால்நடை வளர்ப்போர் விசனம் வெளியிடுகின்றனர்.
இதனை விட இப் பகுதியில் தெங்குப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு துப்புரவு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ் விடயம் தொடர்பாக மக்களுக்கு எதுவித அறிவித்தலும் வழங்கப்படவில்லை. எமது பிரதேசத்தில் எமது தேவைகளைக் கருத்திற்கொள்ளாமல் எமக்குப் பாதிப்புக்கள் ஏற்படக்கூடிய வகையிலேயே அபிவிருத்தி நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. இது எவ்வகையில் நியாயமானதாக அமையும் எனவும் இப் பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆயிரம் ஏக்கரில் ஏற்கனவே சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பு அரசாங்க கால்நடை பண்ணைக்கும், சேவாலங்கா கால்நடை இனவிருத்தி நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளன.
எமது பகுதிக்குள் சில அபிவிருத்தித் திட்டங்கள் உருவாக்கப் போகின்றோம் என உள் நுழைந்த தென்பகுதியினர் இங்கு குடியேறுகின்றார்களா என்ற அச்சமும் தமக்கு எழுந்தள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனைக் கருத்திற்கொண்டு இப்பகுதியில் கால்நடைவளர்ப்போரின் தேவைகளை உணர்ந்தவர்களாக மேய்ச்சற் தரைவைக்காக ஒதுக்கிய நிலப்பகுதியை வேறுதேவைகளுக்குப் பயன்படுத்தாது தடைசெய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments
Post a Comment