Latest News

August 13, 2013

ராஜபக்சேவுக்கு மகுடம் சூட்ட இந்தியா துணை நிற்கின்றது - வைகோ
by admin - 0

இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபட்ச காமன்வெல்த் நாடுகளின் தலைவர் பதவியை ஏற்பதற்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ எதிர்ப்பு தெரிவித்தார்.
திருச்செங்கோட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சியின் தேர்தல் நிதியளிப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியது:

சில நேரங்களில் எதிர்பார்ப்பது நடப்பதில்லை. சில சமயங்களில் எதிர்பாராதது நடந்து விடுகிறது. இவ்வளவு நிதி நான் எதிர்பாராதது. பொதுமக்களிடம் இருந்து திரட்டப்பட்ட இந்த நிதியை நேர்மைக்கும், பொது வாழ்வில் தூய்மைக்கும் நமக்குக் கிடைத்த அங்கீகாரம் என்றே கருதலாம்.

லட்சியத்திற்கு குரல் கொடுத்துவிட்டு தண்டனை என்று வரும்போது மாற்றிப் பேசுவது கிடையாது. இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு இந்தியா துணைபோனது. ரேடார் மற்றும் ஆயுதங்களை இலங்கைக்கு அளித்து, ராணுவ அதிகாரிகளையும் கொடுத்து போரில் துணை நின்றது இந்தியா. இந்த துரோகத்திற்கெல்லாம் உச்சகட்டமாக 54 நாடுகள் கொண்ட காமன்வெல்த் நாடுகளுக்கு தலைவராக ராஜபட்சவை கொண்டு வர முயற்சிகள் நடைபெறுகின்றன. இது இந்தியாவிற்கு நன்கு தெரியும். போர்க் குற்றவாளி ராஜபட்ச தலைவராகி விட்டால் நாம் எங்கே போய் முறையிடுவது. காமன்வெல்த் நாடுகளிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று நாம் குரல் கொடுக்கும் வேளையில், ராஜபச்சேவுக்கு மகுடம் சூட்ட இந்தியா துணை நிற்கிறது.

தமிழ்நாட்டின் அரசியல் இப்படியே போய்விடாது. மாற்று அரசியலைத் தேர்வு செய்யும் நேரம் வரும். அப்போது பரிசீலனைக்கு உரியவராக நாம் இருக்குமாறு பாடுபட வேண்டும். தமிழ்நாடு இலவசப் போதையிலும், மதுவின் போதையிலும் தடுமாறிக் கொண்டுள்ளது. நமது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க நாம் மக்களிடம் சென்று ஆதரவு திரட்டுவோம்.

ஆட்சி அதிகாரப் பதவிகளுக்கு வருவதில் தவறில்லை. ஆனால், அவற்றை மக்களுக்குத் தொண்டாற்ற கிடைக்கும் வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும்.

எனக்கு மிகவும் பிடித்தமான வேலை என்பது நாடாளுமன்றத்தில் நடக்கும் விவாதங்களில் கலந்து கொள்வதுதான். எவ்வளவோ பெரிய தலைவர்கள் இருந்தார்கள். அவர்களுக்குச் சமமாக என்னை நினைக்கவில்லை. அவர்கள் மலை என்றால் நான் சிறு கூழாங்கல். அவர்களது அடிச்சுவட்டைப் பின்பற்றி நடப்பதில் மகிழ்ச்சி காண்பவன் நான் என்றார் வைகோ.

கூட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட மதிமுக செயலர் டி.என். குருசாமி தலைமை வகித்தார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அசோக்குமார் வரவேற்றார்.

ஒன்றியச் செயலர்களின் சார்பில் வெண்ணந்தூர் சுப்பிரமணியம், மாவட்ட துணைச் செயலர் சி.க. செல்லமுத்து, மாநில மகளிர் அணி துணை அமைப்பாளர் நீலாம்பிகை சுப்பையன், மாநில இளைஞர் அணி துணைச் செயலர் சக்திவேல், தேர்தல் பணிக் குழுச் செயலர் வழக்குரைஞர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
« PREV
NEXT »

No comments