Latest News

August 04, 2013

தலைவர் பிரபாகரன் மனைவி சேலத்தில் பதுங்கி இருப்பதாக சி.பி.ஐ.க்கு எஸ்.எம்.எஸ். : துறையூர் என்ஜினீயர் கைது
by admin - 0

 திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் கே.துரைராஜ் (வயது 32). என்ஜினீயர். இவருக்கும், சேலம் கிச்சிப்பாளையம் வ.உ.சி.நகரை சேர்ந்த செல்வராணி (வயது 30) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. துரைராஜ் முதலில் தஞ்சையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி நின்று விட்டார். பின்னர் வேறு கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து வேலை தேடி வந்தார். இந்த நிலையில் துரைராஜ், தனது மனைவியுடன் சேலம் வந்து தனது மாமனார் வீட்டுக்கு அருகில் வீடு வாடகைக்கு எடுத்து தனியே வசித்து வந்தார். இங்கு வந்து வேலை தேடி வந்த துரைராஜ், கரூரில் உள்ள தனியார் கல்லூரிக்கு வேலைக்கேட்டு விண்ணப்பித்து இருந்தார். இதனால் இந்த கல்லூரி நிர்வாகம் வேலைக்கு வந்து சேர சில நாட்களுக்கு முன்பு துரைராஜூக்கு கடிதம் அனுப்பி இருந்தது. துரைராஜ் தனது முகவரியை மாமனார் வீட்டு விலாசத்தில் கொடுத்து இருந்தார். இங்கு கடிதம் வந்து பல நாட்கள் ஆகியும் இந்த தபாலை துரைராஜிடம் தரவில்லை. இதனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதை அறிந்த துரைராஜ் அதிர்ச்சி அடைந்தார். பல மாதம் போராடி வேலையில் சேர கடிதம் வந்தும் தன்னால் வேலையில் சேர முடியவில்லையே என்று வருத்தப்பட்ட அவர், தனது மனைவியிடம் தகராறு செய்தார். இதனால் செல்வராணி கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். அவரை பலமுறை துரைராஜ் அழைத்தும் அவர் மறுத்து விட்டார். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் வாழ்க்கையை வெறுத்த துரைராஜ், தனது மாமனார் குடும்பத்தை பழிவாங்க முடிவு செய்தார். இதற்காக அவர் டெல்லி மற்றும் சென்னையில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகள், சிலருக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பி வைத்தார். இதில், சேலம் கிச்சிப்பாளையம் வ.உ.சி. நகரில் வசிக்கும் பட்டறைக்காரர் மணி, பாப்பாத்தி, தர்மலிங்கம், கார்த்தி ஆகியோருடன் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி தங்கி உள்ளார் என்றும், இவர்கள் அனைவரும் சேலத்தில் இருந்து தப்பி செல்ல முயற்சிக்கிறார்கள். எனவே, எச்சரிக்கையாக இருங்கள் என்றும் தெரிவித்து இருந்தார். இதனால் உஷாரான டெல்லி போலீசார் தமிழக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விசாரிக்க உத்தரவிட்டனர். பின்னர் சென்னை போலீசார், சேலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் சேலம் மாநகர நுண்ணறிவு பிரிவு போலீசாரும், கியூ பிரிவு போலீசாரும் கடந்த இரண்டு நாட்களாக கிச்சிப்பாளையம் பகுதியில் விசாரித்தனர். பிறகு துரைராஜின் மாமனார் மணியின் வீட்டில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அப்போது அங்கு விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்றும், விடுதலைப் புலி தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனியும் இல்லை என்றும் தெரியவந்தது. பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் துரைராஜ் தனது மாமனார் குடும்பத்தை பழிவாங்க இப்படி எஸ்.எம்.எஸ் தகவல் அனுப்பியது தெரியவந்தது. போலீசார் துரைராஜை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் உண்மையை ஒப்புக் கொண்டார். போலீசாரிடம் அவர், ’’எனது மாமனார் மணி (வயது 67), மாமியார் பாப்பாத்தி (வயது 57), மைத்துனர்கள் தர்மலிங்கம் (வயது 42), கார்த்தி (வயது 27) ஆகியோர் எனக்கு வேலை கிடைக்காமல் செய்ததோடு எனது மனைவியையும் பிரித்து சென்று விட்டனர். இதனால் அவர்களை போலீசில் சிக்க வைக்க டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு விடுதலைப் புலிகள் சேலத்தில் பதுங்கி உள்ளனர் என்று எஸ்.எம்.எஸ்சை அனுப்பி வைத்தேன்’’என்று கூறினார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது தவறான தகவலை தெரிவித்து தவறான சூழ்நிலையை உருவாக்கியது, பொய் தகவல்களை பரப்பியது ஆகிய பிரிவுகளின் கீழ் கிச்சிபாளையம் போலீ சார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிய செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் வேறு வழக்குகளில் ஏதும் சிக்கி உள்ளாரா? என்றும் உயர் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
« PREV
NEXT »

No comments