Latest News

August 09, 2013

பொதுநலவாய மாநாடு சமகால இலங்கையின் உண்மை நிலையை நேரில் கண்டறிவதற்கான அரியதோர் வாய்ப்பு - கிறிஸ் நோனிஸ்
by admin - 0

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடானது சமகால இலங்கையின் உண்மை நிலையை அனைத்து அரச தலைவர்கள்,வெளிநாட்டமைச்சர்கள் அவர்களின் தூதுக்குழுவினர் மற்றும் உலக நாடுகளைச் சேர்ந்த ஊடகங்களை நேரில் கண்டறிவதற்கானதோர் அரிய சந்தர்ப்பமாகும்
என பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கலாநிதி கிறிஸ் நோனிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டுக்கு முன்னர் கொழும்பில் நவம்பர் 12 - 14 காலப்பகுதியில் நடத்தப்படவுள்ள பொதுநலவாய வர்த்தக மாநாடு குறித்து இலண்டனில் அமைந்துள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற ஊக்குவிப்பு நிகழ்வொன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், இலங்கை சமகால பொதுநலவாயத்தின் மிகச்சிறிய நாடாகவும், நவீன பொதுநலவாய எட்டு தாபக உறுப்புநாடுகளுள் ஒன்றாகவும் விளங்குகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை அமைதி நிலையை எட்டியுள்ளதுடன் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய உச்சி மாநாடானது சம கால இலங்கையின் யதார்த்தபூர்வமான நிலையை அனைத்து அரச தலைவர்கள்,வெளிநாட்டமைச்சர்கள் அவர்களின் தூதுக்குழுவினர் மற்றும் உலகளாவிய ஊடகங்கள் நேரில் கண்டறிவதற்கானதோர் அரிய வாய்ப்பாக அமைந்துள்ளதென்றார்.

பொது நலவாய செயலக ஆளுநர் சபையில் அங்கம் வகித்து தன்னுடன் கூடவே அமர்ந்து மக்பரோ மாளிகையில் பொதுநலவாய விவகாரங்கள் குறித்து கிரமமான கலந்துரையாடலை நடாத்தி வரும் லண்டனை தளமாகக் கொண்டு செயற்பட்டு வரும் பொது நலவாய உயர் ஸ்தானிகர்களுக்கு அவர் நன்றி நவின்றார்.அத்துடன் அனைத்து பொதுநலவாய நாடுகள் மாறுபட்ட அபிவிருத்தி கட்டங்களில் உள்ள யதார்த்த நிலையை அவர்கள் ஆழமாகப் புரிந்துள்ளதாலேயே அவர்கள் எப்போதும் ஐக்கியம் மற்றும் நட்புறவு மனப்பான்மையுடன் ஒன்றுபட்டு பணியாற்றி வருகின்றனரெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பொதுநலவாய வர்த்தக மாநாடு குறித்த தெளிவுரையொன்றை பொதுநலவாய வர்த்தக மாநாட்டின் பணிப்பாளர் நாயகம் பீட்டர் கலாகன் நிகழ்த்தியதுடன் பொது நலவாய அரச தலைவர்கள் மாநாட்டிலான தங்களின் பிரசன்னத்திற்கு மேலதிகமாக, 1000இற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்வரென எதிர்பார்க்கப்படும் மேற்படி வர்த்தக மாநாட்டில் தாம் கலந்து கொண்டு உரை நிகழ்த்தவுள்ளதனை கணிசமான அளவிலான பொதுநலவாய அரச தலைவர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் எடுத்துரைத்தார்.

கொழும்பில் பொதுநலவாய வர்த்தக மாநாடு நடைபெறவுள்ளதை அடுத்த ஏற்பட போகும் பொருளாதாரப் பெறுமானம் பற்றியும் ஆபிரிக்க, கரிபியன் நாடுகள் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இதற்கு முன்னர் நடைபெற்றிருந்த பொது நலவாய வர்த்தக மாநாடுகளின் பெறுபேறாக மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளின் பங்கு குறித்தும் அவர் பிரஸ்தாபித்தார். அத்துடன் இலங்கையில் கிடைக்கக்கூடிய முதலீட்டிற்கான முன்மொழிவுகள் மற்றும் அனைத்துத் துறைகள் மற்றும் பொது நலவாய வர்த்தகம் சம்பந்தமான அனைத்திற்குமான நிகழ்தகவு குறித்தும் அவர் தெளிவுபடுத்தினார்

« PREV
NEXT »

No comments