Latest News

August 09, 2013

வெலிவெரிய தேவாலயத்தினுள் துப்பாக்கிச் சூடு! அருட்சகோதரிக்கு மிரட்டல்!
by admin - 0

வெலிவெரியவில் சுத்தமான குடிநீருக்காக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது கடந்த வியாழக்கிழமை சிறிலங்காப் படையினர் தாக்குதல் நடத்திய போது, அங்குள்ள அந்தோனியார் தேவாலயத்தினுள் நுழைந்தும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக, ஆலய பங்குத் தந்தை தெரிவித்துள்ளார்.
தேவாலயத்தின் கொங்கிறீட் தூண் ஒன்றிலும், தேவாலய சுவரிலும் துப்பாக்கி ரவை துழைத்த அடையாளங்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேவாலயத்துக்குள் ஓடிச்சென்று அடைக்கலம் தேடிய பொதுமக்களை சிறிலங்காப் படையினர் தாக்கியதுடன், பிடித்துச் சென்றதாக, வெளியான தகவல்களை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் நிராகரித்திருந்தார்.
இந்தநிலையில், நேற்றுமுன்தினம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சினி பெர்னான்டோ புள்ளே, தாக்கப்பட்ட தேவாலயத்துக்கு சென்று உண்மையில் என்ன நடந்தது என்று பங்குத்தந்தை வண.லக்பிரிய நொனிசிடம் விசாரித்தார்.
அவரிடம்தான, தேவாலயத்துக்குள்ளேயும், அதன் சுற்றாடலிலும் அடைக்கலம் தேடி வந்த பொதுமக்கள் எவ்வாறு தாக்கப்பட்டனர் என்று விபரித்ததாக பங்குத் தந்தை தெரிவித்துள்ளார்.
“உண்மையான ரவைகளால் பொதுமக்கள் சுடப்பட்டனர். பொல்லுகளால் தாக்கப்பட்டனர்.
அந்தச் சம்பவம் நடந்த போது, அங்கிருந்த சிறிலங்காப் படையினர், உதவிப் பங்குத் தந்தையும், வேறு 5 குருமாரையும் மோசமான வார்த்தைகளால் அவமதித்தது, அவர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
சுமார் 15 சிறிலங்காப் படையினர் துப்பாக்கிகள் மற்றும் பொல்லுகளுடன் தேவாலயத்துக்குள் நுழைந்து, அங்கு அடைக்கலம் தேடி ஒளிந்து கொண்ட பொதுமக்களை தாக்கினர்.
பொதுமக்களைப் பாதுகாக்க முயன்ற ஒரு அருட்சகோதரி துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டார்.
பொதுமக்களைத் தாக்கி, இழிவான வார்த்தைகளால் மதகுருமாரை திட்டி அவமதித்த இராணுவத்தினரின் செயலுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.
« PREV
NEXT »

No comments