தமிழ்நாடு கடல்பகுதியில், சிறிலங்காவின் துணையுடன் சீனர்கள் ஊடுருவலாம் என்ற சந்தேகம் இந்தியாவுக்கு எழுந்துள்ளது.
இதனால், தமிழ்நாட்டின் இராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த மீனவர்களிடம், சீனர்களின் நடமாட்டம் தென்பட்டால் அது குறித்து தகவல் தரும்படி இந்தியக் கடலோரக் காவல்படை அறிவுறுத்தியுள்ளது.
இந்தியக் கடல் எல்லைக்குள் அந்நியர்கள் குறிப்பாக, சீனர்களின் நடமாட்டம் தென்பட்டால், உடனடியாக 04573-241238, 04573-242020 என்ற தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் தமிழ்நாடு மீனவர்களை இந்தியக் கடலோரக் காவல்படை கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து கடலோர காவல்படை அதிகாரி ஒருவர் கருத்து வெளியிடுகையில், இராமேஸ்வரம் அருகேயுள்ள ஐந்தாம் திட்டு தொடக்கம், கோடியக்கரை வரையான கடற்பகுதியில் முன்னரை விடவும் கண்காணிப்பையும் தீவிரப்படுத்தி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்நியர்கள் ஊடுருவலை தடுக்க, மீனவர்கள் உதவ வேண்டும் என்றும், அவர் கோரியுள்ளார்.
இந்தியாவின் வடக்கு எல்லையில் அண்மைக்காலமாக சீனப் படையினரின் ஊடுருவல் அதிகரித்துள்ள நிலையிலேயே, தெற்கில் தமிழ்நாட்டின் வழியாகவும் சீன ஊடுருவல் நிகழலாம் என்றும் இந்தியா கருதுகிறது.
இதற்கிடையே, அனைத்துலக கடல் எல்லையை தாண்டும் தமிழ்நாட்டு மீனவர்களை செய்மதிகளின் துணையுடன் படம்பிடிக்கும், சிறிலங்கா கடற்படையின் நடவடிக்கைகள் குறித்து இந்தியப் புலனாய்வுத்துறை விசாரணைகளை நடத்தி வருகிறது.
மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் இதுகுறித்து விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments
Post a Comment