Latest News

August 15, 2013

வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்மக்களாகிய நாம் புத்திசாதுர்யமாக நடந்துகொள்ள வேண்டும் - த.தே.கூ. வேட்பாளர் சிவகரன்
by admin - 0

மாகாணசபை முறைமை தமிழ் மக்களுக்கு விமோசனமல்ல. அதிகாரமில்லாத மாகாண சபையால் ஆகப்போவது ஒன்றுமில்லை.
எனினும் மக்களின் அடிப்படை நிர்வாகக் கட்டமைப்பை கட்டியெழுப்புவதற்கான ஓர் அடித்தளத்தை உருவாக்கலாமென்பது எனது கருத்தாகும்.
இவ்வாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேசிய இளைஞர் அணிச் செயலாளரும் புதியவன் பத்திரிகை மற்றும் இணையத்தளத்தின் பிரதான ஆசிரியரும் வட மாகாணசபைத் தேர்தலின் மன்னார் மாவட்ட த.தே.கூட்டமைப்பின் வேட்பாளருமான சுப்பிரமணியம் சிவகரன் குறிப்பிட்டார்.
சிவகரன் மேலும் கருத்துரைக்கையில்,
வட மாகாணசபையைக் கைப்பற்றி இந்தியாவுக்கும் சர்வதேசத்திற்கும் காட்டவேண்டிய தார்மீக பொறுப்பு எமக்குள்ளது. எனவே மாகாணசபை என்பது மக்களுக்கு ஓர் இடைக்காலத்தீர்வாகுமே தவிர நிரந்தரத் தீர்வல்ல.
கடந்த 60வருடகாலமாக தமிழன் தன்னைத்தானே ஆளவில்லை! கல்விசுகாதாரம் எந்தத் துறையானாலும் ஆளக்கூடிய வாய்ப்புக்கிடைக்கவில்லை. ஆதலால் தமிழினம் பல்லாண்டுகாலம் பின்னோக்கி போய் விட்டது.
ஜெனிவாத் தீர்மானம் மற்றும் இந்தியாவின் 13வது திருத்தத்தின் கருத்துக்கணிப்பாக இம்மாகாணசபைத் தேர்தல் விளங்கப்போகிறது.
வடக்கு தேர்தல் முடிந்ததும் தமிழர் பிரச்சினை தீர்ந்ததென அரசாங்கம் கூறக்கூடும்: ஒற்றையாட்சியில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியாது சமஸ்டி ஆட்சியில் மட்டுமே தீர்வு காணமுடியும்.
தேசிய அரசியல் என்பது இன விடுதலைக்கான அரசியல் அது வெறுமனே கனவான் அரசியல் அல்ல. இலங்கையில் கனவான் அரசியல் செய்யமுற்பட்டால் கிடைப்பது பூச்சியமே.மக்களை ஏமாற்றியதாகவே முடியும்.
2/3 பெரும்பான்மையின் முக்கியத்துவம்
வட மாகாணசபைத் தேர்தலில் 2/3 பெரும்பான்மை பெற்றால் மட்டுமே எமக்கு விமோசனம். இன்றேல் எட்டோடு ஒன்பதாக முடியும்.
ஆளுநர் விரும்பாதவிடத்து முதலமைச்சர் 13ஜப்பற்றி கதைக்கமுடியாது. அது பற்றி கதைப்பதற்கோ ஆளுநர் தலையீட்டை குறைப்பதற்கோ ஆளுநரை மாற்றச்சொல்லிக் கேட்பதற்கே 2/3 பெரும்பான்மை மிக அவசியம்.
2/3 பெரும்பான்மை ஆசனங்களைப்பெற்றால் எம்மால் உள்ளூர் நியதிச்சட்டங்களை உருவாக்கமுடியும்.சாசனத்தை நடைமுறைப்படுத்தமுடியும்.
எனவே த.தே.கூட்டமைப்பு 2/3 பெரும்பான்மையைப் பெறக்கூடாதென்பதில்; அரசாங்கம் மிகவும் தீவீரமாக செயற்படும்.அதற்காக எதையும் செய்யும். அதனைத் தடுக்க தன்னாலான அத்தனை சக்திகளையும் பிரயோகிக்கும்.
அதற்காக இப்போதிருந்தே பல கோடி ருபாக்களை வாரி இறைத்துக்கொண்டிருக்கிறது.
சுயேச்சைக்குழுக்களால் எமக்கு பாரிய பாதிப்பெதுவுமில்லை. அதையிட்டு அலட்டிக்கொள்ளவேண்டிய தேவையுமில்லை.
வடக்கில் நாம் வெற்றி பெறுவது நிச்சயம்.ஆனால் 2/3 பெரும்பான்மையைப் பெறுவதென்பது மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.
வாக்களிப்பு வீதம் கூட வேண்டும்
கடந்த 60 வருடகாலமாக இனப்பிரச்சினைத்தீர்வில் தமிழ்மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதனால் ஜனநாயகத்தில் நம்பிக்கை இழந்துள்ளனர்.
அதனால் வாக்களிப்பில் போதிய அக்கறை காட்டுவதில்லை. கடந்த கால வரலாறு இது. ஆனால் இம்முறை அப்படி இருந்து விட முடியாது.
யாழ்ப்பாணத்தில் நான்கரை லட்சம் மக்கள் உள்ளனர்.கடந்த காலத்தில் ஆக ஒன்றரை லட்சம் மக்களே வாக்களிப்பது வரலாறு. குறைந்தது மூன்றரை லட்சம் மக்கள் வாக்களித்தால் மட்டுமே 2/3 பெரும்பான்மையைப் பெறமுடியும். சாதனை படைக்கமுடியும்.
உதாரணமாக மன்னார் மாவட்டத்தில் 50ஆயிரம் தமிழ்வாக்காளர்கள் உள்ளனர். 27ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். 05 உறுப்பினர்கள் தெரிவாவர். இங்கு வாக்களிப்பு வீதம் குறைந்தால் என்ன நடக்கும் என்பதை இலகுவாக அறியமுடியும்.
முள்ளிவாய்க்கால் உயிர்த்தியாகங்கள் பற்றி பேசும்நாம் பட்டாசுகளில் கவனம் செலுத்துவதைத் தவிர்க்கவேண்டும். த.தே.கூட்டமைப்பை தேர்தலில் போட்டியிட வைத்ததில் அரசாங்கம் வெற்றிபெற்றிருக்கிறதெனலாம். முன்னர் புலிகளை பலவீனப்படுத்த 13வது சரத்தை அவசர அவசரமாக இந்தியா கொண்டுவந்தது. அதில் தமிழ்த்தேசியம் சார்ந்தோர் தேர்தல் கேட்கவில்லை. எதிர்த்தார்கள். அதாவது மாகாணசபை முறைமையை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. 
இதுவரை ஜெனீவா உடன்படிக்கையே உச்சக்கட்ட தீர்வாகவுள்ளது. இந்நிலையில் மாகாணசபைத் தேர்தலில் இறங்க நிர்ப்பந்திக்கப்பட்டமை அரசிற்கு வெற்றிதான். எனினும் தமிழ்மக்களாகிய நாம் இதுவிடயத்தில் புத்திசாதுர்யமாக நடந்துகொள்ள வேண்டிய தார்மீகப்பொறுப்புள்ளது. எனவே அனைவரும் 100 வீத வாக்களிப்பை உறுதிசெய்யவேண்டும்.
« PREV
NEXT »

No comments