Latest News

August 25, 2013

நவநீதம்பிள்ளையின் இலங்கை வருகையால் தமிழ் மக்களுக்கு என்ன கிடைக்கும்?
by admin - 0

ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக தென்பகுதி கருதிக் கொள்கிறது.
அதன் காரணமாக நவநீதம்பிள்ளையின் வருகை குறித்து பல்வேறு கருத்துக்களை முன்வைப்பதில் தென்பகுதி அரசியல்வாதிகள் முண்டியடித்த வண்ணம் இருந்தனர்.
எதிர்ப்புக்கள், விமர்சனங்களுக்கு மத்தியில் இலங்கைக்கு வருகின்ற ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் விஜயம் குறித்து தமிழ் மக்களின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கான பதில் மெளனமாகவே இருக்கும்.
2009ஆம் ஆண்டு மே மாதம் வன்னிப் போர் முடிவுற்றதிலிருந்து, ஐ.நா சபையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்த வண்ணமே உள்ளனர்.
இதனிடையே ஜெனிவாவில் இருதடவைகள் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இருந்தும் எந்தப் பிரயோசனமும் தமிழ் மக்களுக்குக் கிடைக்கவில்லை.
தமிழ் மக்கள் எதிர்பார்த்த உரிமைகள், தீர்வுகள், அபிலாசைகள் என அனைத்தும் தவிடுபொடியாகிப் போக வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் மட்டும் சர்வதேசத்தின் கடும் அழுத்தங்களின் மத்தியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏதோ எதிர்பார்க்க ஏதோ கிடைத்தது என்பதைத் தவிர வேறெதனையும் கூற முடியாத அளவில் ஈழத் தமிழ் மக்கள் துன்பத்தின் உச்சத்துக்கு சென்றுள்ளனர்.
அண்டை நாடான இந்தியா மீதான நம்பிக்கை வீண்போய், சர்வதேசம் என்ற நம்பிக்கைகளும் காலாவதியாகி நிற்கின்ற இந்த வேளையில்,
ஐ.நா சபையின் மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை வருகையால் நாம் எதனை எதிர்பார்க்க முடியும்?
தனிநாடு கிடைக்கும் என்பதற்காக எத்தனையோ இழப்புக்களையும் எத்தனையோ நெருக்கடிகளையும் தாங்கிய தமிழ் மக்களுக்கு அவரின் வருகை எந்தவித ஆறுதலையும் தரப்போவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
ஏனெனில் இன்றுவரை தமிழ் மக்களின் வாழ்விடங்களை படையினர் தம்வசம் வைத்திருப்பதும் யுத்தத்தால் அனைத்தையும் இழந்த மக்கள் குடியிருக்க வழியின்றி, வாழ்வதற்கு வசதியின்றி வாடுகின்ற துன்பம் தொடர்கின்ற நிலையில், நவநீதம்பிள்ளை மட்டுமல்ல, அந்த சாட்சாத் ஈஸ்வரன் நேரில் வந்தாலும் அதுபற்றி பொருட்படுத்தும் மனநிலையில் தமிழ் மக்கள் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
இத்தகைய மனநிலை என்பது இந்த நாட்டின் ஆளும் வர்க்கம் கொட்டித் தீர்த்த கொடுமையின் வெளிப்பாடு மட்டுமல்ல, ஐ.நா போன்ற உலக அமைப்புக்கள் உரிய நேரத்தில் தமிழ் மக்களை காப்பாற்றத் தவறிய தன் தாங்கொணா வேதனையும் காரணம் என்பதை ஏற்றுக் கொள்ளுதல் மிகவும் முக்கியமானது.
இந்த புரிதல் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம் அர்த்தமுடையதாக அமையும்.
« PREV
NEXT »

No comments