வெலிவேரிய பிரதேசத்தில் குடிநீர் கோரி ஆர்ப்பாட்டம் செய்த பொது மக்கள் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 90 துப்பாக்கிகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு கைப்பற்றியுள்ளது.
ரீ. 56 ரக துப்பாக்கிகளே வெலிவேரிய சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ளும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி டீ. ஆர். எல். ரணவீர தலைமையிலான பொலிஸ் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளன.
இரசாயன பகுப்பாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவே குறித்த ஆயுதங்கள் இவ்வாறு மீட்கப்பட்டு குற்றத்தடுப்புப் பிரிவின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கேசரிக்கு தகவல் தருகையில், வெலிவேரிய துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் காயமடைந்தவர்களிடம் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாகவும் அதனடிப்படையில் விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவித்தது.
அத்துடன் சம்பவ தினம் குறித்த பிரதேசத்தில் கடமையில் ஈடுப்பட்டிருந்த இராணுவத்தினரின் துப்பாக்கிகள் அனைத்தையும் இரசாயன பகுப்பாய்வு பரிசோதனைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பேற்றுள்ளதாக சுட்டிக் காட்டிய பொலிஸ் ஊடகப் பிரிவு, இதுவரை இராணுவத் தரப்பில் எவரிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது
No comments
Post a Comment