Latest News

August 18, 2013

வெலிவேரிய சம்பவம் - ஊடகவியலாளர்கள் சாட்சியமளிக்க அழைப்பு: 7 ஊடக அமைப்புக்கள் கண்டனம்
by admin - 0

வெலிவேரிய சம்பவம் தொடர்பாக இராணுவம் நீதிமன்றம் நடத்தும் விசாரணைகளில் சாட்சியமளிக்க வருமாறு ஊடகவியலாளர்களுக்கு விடுத்துள்ள அழைப்புக்கு 7 ஊடக அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

கடந்த முதலாம் திகதி சுத்தமான குடிநீரை வழங்குமாறு கோரி வெலிவேரிய – ரத்துபஸ்வல பிரதேசத்தில் நடத்தப்பட்ட மக்களின் ஆர்ப்பாட்டத்தின் மீதும் அது தொடர்பான செய்திகளை சேரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது இராணுவம் மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தியது.

இராணுவத்தால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட மூன்று நிராயுதபாணிகள் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் அரசாங்கமும் இராணுவமும் சம்பவத்தில் மூன்றாம் தரப்பு சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறி மக்கள் சமூகத்தை தவறாக வழிநடத்தி வருகிறது என 7 ஊடக அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளன.

7 ஊடக அமைப்புகளின் ஒன்றியத்தின் சார்பில் ஊடகவியலாளர் தர்மசிறி லங்காபோலி வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வெலிவேரிய சம்பவம் தொடர்பில் அரசாங்கம் எவ்விதமான பொறுப்புக் கூறக்கூடிய நியாயமான விசாரணைகளை நடத்தாது காலத்தை வீணடித்து வரும் வேளையில், சம்பவம் தொடர்பாக இராணுவத்திற்குள் விசாரணைகளை நடத்தும் இராணுவ நீதிமன்றம் சாட்சியமளிக்க வருமாறு ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இராணுவ விசாரணை நீதிமன்றத்திற்கு ஊடகவியலாளர்களை சாட்சியமளிக்க அழைப்பது இலங்கையின் மக்கள் சமூகத்தை இராணுவமயப்படுத்தும் மற்றுமொரு பாரதூரமான சட்டவிரோத மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கையாகும்.

என்.ஜே.சி. டயஸ் என்ற மேஜர் ஜெனரலின் கையெழுத்தில் சாட்சியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அழைப்பாணை என்ற பெயரிலான இந்தக் கடிதம் மூலம் சிவில் பிரஜைகளான ஊடகவியலாளர்களை இராணுவத்தின் உள் விசாரணை நீதிமன்றத்திற்கு அழைப்பதை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம்.

எந்தச் சட்டத்தின்படி ஊடவியலாளர்கள் இராணுவ நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நாம் கேள்வி எழுப்புகிறோம்.

இந்தநிலையில் நாட்டு மக்களை தவறாக வழிநடத்த பொய் நாடகங்களை அரங்கேற்றாமல், உடனடியாக இந்த சம்பவம் தொடர்பில் நியாயமான சர்வதேச விசாரணைகளை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம், ஊடக சேவை ஊழியர் சங்க சம்மேளனம், தமிழ் ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பு, இலங்கை முஸ்லிம் ஊடகவியலாளர்களின் ஒன்றியம், தெற்காசிய சுதந்திர ஊடக சங்கத்தின் இலங்கை பிரிவு, சுதந்திர ஊடக அமைப்பு, ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு என்பன இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.
« PREV
NEXT »

No comments