Latest News

August 20, 2013

த.தே.கூ. நவநீதம்பிள்ளையை 30ம் நாள் சந்திக்கும்! விக்னேஸ்வரனும் பங்கேற்பார்!
by admin - 0

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை வரும் 30ம் நாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்துப் பேசவுள்ளது.
இதன்போது. வடக்கில் படைக்குறைப்புக்கு அழுத்தம் கொடுக்குமாறும், தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் தலையிட்டு அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.
மேலும் இந்தச் சந்திப்பில் மனிதஉரிமை விவகாரங்கள் குறித்தும், வடக்கு மாகாணசபைத் தேர்தல் குறித்தும் கலந்துரையாடப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
“ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை எதிர்பார்க்கும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை.
கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேர்ரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், பல்வேறு விவகாரங்களில் திருப்திகரமான எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
வடக்கு,கிழக்கு இராணுவ மயப்படுத்தல் விவகாரம் பிரதானமானது.
வடக்கு மாகாணசபைத் தேர்தலின் போது, சிறிலங்காப் படையினர் முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டும் என்றும், வடக்கில் படைகளைக் குறைக்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.
நவநீதம்பிள்ளையுடனான சந்திப்பின் போது, வடக்கில் படைக்குறைப்பு செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவோம்.
சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 800இற்கும் அதிகமான தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, போர்க்குற்றங்கள், காணாமற்போனவர்கள் போன்ற விவகாரங்கள் குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நவநீதம்பிள்ளையுடன் கலந்துரையாடப்படும்.“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நவநீதம்பிள்ளையுடன் நடக்கவுள்ள சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், வடக்கு மாகாண முதன்மை வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரனும் பங்கேற்கவுள்ளார்.
மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நவநீதம்பிள்ளையுடனான சந்திப்பில் பங்கேற்கவுள்ளதாக, சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments