Latest News

August 20, 2013

நவநீதம்பிள்ளை இலங்கையில் எங்கும் சென்று நேரடியாக உண்மைகளை அறிந்து கொள்ளலாம் - அரசாங்கம்
by admin - 0

இலங்கை வரும் ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல, ரத்துபஸ்வலவும் சென்று நேரடியாக உண்மைகளை அறிந்து கொள்ளலாம். இதற்கு தடையில்லை. அவரை அன்புடன் வரவேற்கின்றோம் எனத் தெரிவிக்கும் அரசாங்கம் யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆணையாளர் நாயகம் கொழும்பில் நடத்தும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்றும் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்தது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாகாண சபை தேர்தல்கள் தொடர்பிலான விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றது.
இதன் போது நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அரச தரப்பில் பதிலளிக்கும் போதே அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை இலங்கை விஜயத்தை அரசாங்கம் ஆதரிப்பதோடு அன்புடனும் வரவேற்கின்றோம்.
அவர் இலங்கை வருவது நல்லது. ஏனென்றால், வடக்கிற்கு நேரடியாக சென்று உண்மை நிலைமைகளை தெரிந்துகொள்ள முடியும்.
மக்களின் மீள்குடியேற்றம், வாழ்வாதாரங்கள் மற்றும் வடக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்திகள் தொடர்பாக ஆணையாளர் நாயகம் நேரில் பார்த்து உண்மைகளை தெரிந்து கொள்வார்.
அது மட்டுமல்ல, எமது அழைப்பை ஏற்றே அவர் இலங்கை வருகிறார். எனவே, இலங்கையில் எங்கும் செல்லலாம். அதற்கு தடையில்லை. முள்ளிவாய்க்கால் அல்ல ரத்துபஸ்வல வேண்டுமானாலும் நேரில் சென்று பார்வையிடலாம்.
நாம் ஐ.நா.வின் உறுப்புரிமை பெற்ற நாடு. எனவே,அதன் கடப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும்.
ஐ.நா.வின் விசேட பிரதிநிதி லூயிஸ் ஹார்பர் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.அதன் பின்னர் அவர் கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டின்போது நேரடியாக அவர் கண்டதைத் தெரிவித்தார்.
ரத்துபஸ்வலவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இராணுவம் உள்ளக விசாரணைகளை மட்டுமே மேற்கொண்டு வருவதோடு, தகவல்களை கேட்டறிகின்றது. அதைவிடுத்து சிவில் விசாரணைகளை நடத்தவில்லை.
பொலிஸாரும் மனித உரிமை அமைப்புகளைச் சார்ந்தோரே மக்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சுயாதீனமாக விசாரணைகள் நடைபெறுகின்றன. எனவே, சர்வதேச விசாரணைகள் அவசியமில்லை.
இவ் விசாரணைகளில் சுயாதீனம் இல்லாவிட்டால் தான் சர்வதேச விசாரணை தேவைப்படும். ஐ.தே.கட்சி ஆட்சிக்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றது. அதன்போது அவர்கள் எப்படி நடந்து கொண்டார்களென்பதை நாடே அறியும்.
இம்முறை இடம்பெறவுள்ள இளம் பாராளுமன்ற கூட்டத் தொடரையும் இலங்கை வரும் நவநீதம்பிள்ளை ஆரம்பித்து சிறப்புரையாற்றவுள்ளார் என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments