Latest News

July 26, 2013

கொமன்வெல்த் மாநாட்டில் சிறிலங்காவுக்கு அழுத்தம் – பிரித்தானியா அறிவிப்பு
by admin - 0

கொழும்பில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டை, மனிதஉரிமைகள் தொடர்பான கவலைகள் குறித்து சிறிலங்காவுக்கு அழுத்தங்களைக் கொடுப்பதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளப் போவதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பிரித்தானியாவின் சமூகங்கள், உள்ளூராட்சி, வெளிவிவகார, கொமன்வெல்த் விவகாரப் பணியகத்துக்கான மூத்த அமைச்சர் பரோனெஸ் சயீடா வர்சி, “பிரதமர் டேவிட் கமரொனும், வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக்கும், களநிலவரத்தை கவனத்தில் கொண்டு வரும் நொவம்பரில் கொமன்வெல்த் உச்சி மாநாட்டை, சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வர்.” என்று தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பிரபுக்கள் சபையில்,நேற்று முன்தினம் வில்லிஸ் பிரபு எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கொமன்வெல்த் உச்சி மாநாட்டின் போது சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து, பிரித்தானிய அரசாங்கம் சிறிலங்கா அரசாங்கத்துடன் எவ்வாறு நடந்த கொள்ளப்போகிறது என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
“போருக்குப் பிந்திய நல்லிணக்கத்திலோ பொறுப்புக்கூறலிலோ முன்னேற்றம் ஏற்படாதது குறித்தும், சிறிலங்காவின் தற்போதைய மனிதஉரிமைகள் நிலை குறித்தும், சிறிலங்கா அரசாங்கத்திடம் பிரித்தானிய அரசாங்கம் தொடர்ச்சியாக கவலை வெளியிட்டு வருகிறது.
கருத்து மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரம், நீதித்துறைச் சுதந்திரம் உள்ளிட்ட சிறிலங்காவின் தற்போதைய மனிதஉரிமைகள் நிலை குறித்தும் நாம் கவலை கொண்டுள்ளோம்.
மனிதஉரிமைகள் நிலையில் உறுதியான முன்னேற்றம், நல்லிணக்கம், வடக்கு மாகாணசபைக்கு நீதியான, நியாயமான, அமைதியான தேர்தல், ஊடகங்கள் மற்றும் சமூக அமைப்புகள் கொமன்வெல்த் மாநாட்டில் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்பனவற்றை பிரித்தானியா எதிர்பார்க்கிறது என்பதை நாம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம்.” என்றும் அவர் கூறியுள்ளார்.
« PREV
NEXT »

No comments