Latest News

July 26, 2013

பிசுபிசுத்துப்போன மகிந்தவின் துறைமுகக் கனவு – கோப் அறிக்கையில் அம்பலம்
by admin - 0



அம்பாந்தோட்டையில் சுமார் 500 மில்லியன் டொலர் செலவில் சீனா அமைத்துக் கொடுத்த, மாகம்புர மகிந்த ராஜபக்ச துறைமுகத்துக்கு, 2011-12 காலப்பகுதியில் 24 கப்பல்கள் மட்டுமே வந்துள்ளதாக, பொதுநிறுவனங்கள் தொடர்பான குழுவின் (கோப்) ஆண்டறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
சீனாவின் நிதியுதவியுடன் மாகம்புர துறைமுகத்தின் முதலாவது கட்ட கட்டுமானப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, கடந்த 2010 நொவம்பரில் திறந்து வைக்கப்பட்டது.
இந்திய, சிங்கப்பூர் துறைமுகங்களுக்கு சவாலானது என்று கூறப்பட்ட இந்தத் துறைமுகத்துக்கு 2011ம் ஆண்டில் 6 கப்பல்கள் மட்டும் வந்துள்ளன. 2012ம் ஆண்டில் 18 கப்பல்கள் தான் வந்துள்ளன.
இதனால், கப்பல்கள் வருவதை நிர்ப்பந்திப்பதற்காக, கனரக வாகனங்கள் அல்லாத மோட்டார் வாகனங்களை ஏற்றிய கப்பல்கள், மாகம்புர துறைமுகத்துக்கே செல்ல வேண்டும் என்று சிறிலங்கா துறைமுக அதிகார சபை கடந்த ஆண்டு அறிவித்திருந்தது.
மாகம்புர துறைமுகத்தின் முதற்கட்டத் திட்டத்துக்கு 361 மில்லியன் டொலர் செலவாகும் என்று சிறிலங்கா துறைமுக அதிகாரசபை மதிப்பிட்டிருந்தது.
இதில், 85 சதவீதம் சீனாவின் எக்சிம் வங்கியால் முதலிடப்பட்டது.
எனினும், 2011 ஓகஸ்ட் மாதம், பாரம்தூக்கிகள் உள்ளிட்ட கருவிகளைப் பொருத்தவும், துறைமுக அமைப்புக்கான செலவு அதிகரிப்புக்கும், துறைமுகத்தை ஆழப்படுத்தவும், நுழைவாயில் அமைக்கவும் மேலும் 148 மில்லியன் டொலர் தேவைப்படுவதாக சிறிலங்கா துறைமுக அதிகாரசபை தெரிவித்தது.
மாகம்புர துறைமுகத்தை அமைப்பதற்காக சீனாவிடம் பெறப்பட்ட கடனுக்கு, சிறிலங்கா துறைமுக அதிகாரசபை, 2012இல் 2208 மில்லியன் ரூபாவையும், 2013இல் 2479 மில்லியன் ரூபாவையும், 2014இல் 2233 மில்லியன் ரூபாவையும், 2015இல் 1987 மில்லியன் ரூபாவையும், 2016இல் 1742 மில்லியன் ரூபாவையும் வட்டியாகச் செலுத்த வேண்டும் என்றும் கோப் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாகாம்புர துறைமுகத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கு, உள்ளூர், வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைத்து துறைமுகத்துக்கு அருகில் வர்த்தகத்தை ஆரம்பிக்க ஆர்வம் காட்டுவதாக துறைமுக அதிகாரி சபை கூறியுள்ளது.
முதற்கட்டமாக 7 முதலீட்டுத் திட்டங்களுக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இரண்டு தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பது தொடர்பான உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
இரண்டாவது கட்டமாக 1105 மில்லியன் டொலரை முதலீடு செய்வது தொடர்பாக, ஒன்பது முதலீட்டாளர்கள் ஆலோசித்து வருவதாக கோப் பிடம் சிறிலங்கா துறைமுக அதகாரசபை தெரிவித்துள்ளது.
« PREV
NEXT »

No comments