சிறிலங்காவில் மனித உரிமை நிலைப்பாடானது மிகமோசம் – பிரித்தானிய நீதிமன்றம்
சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், மனித உரிமை நிலைப்பாடானது மோசமாகக் காணப்படுவதாக, தற்போது பிரித்தானியாவின் புதிய குடிவரவு நடைமுறை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் புகலிடம் கோரிய ஒருவர் சிறிலங்கா அரசாங்கத்தால் தமிழ்ப் புலி உறுப்பினர் எனச் சந்தேகிக்கப்பட்டிருப்பின் அதுதொடர்பான முழுமையான விசாரணை தேவைப்படுவதாக தற்போது பிரித்தானியாவால் வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தம் தொடர்பான ஆதாரங்களை வழங்கிய தமிழ் புலம்பெயர் ஆர்வலர்கள், தமிழ்ப் புலி உறுப்பினர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் போன்ற பலதரப்பட்டவர்கள் கொழும்பு விமானநிலையத்தில் தடுத்து வைக்கப்படக் கூடிய, கைது செய்யப்படக் கூடிய, அல்லது நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் பலரின் வாழ்வானது தற்போது ஆபத்தில் உள்ளது.
சிறிலங்கா பாதுகாப்பு படையினரால் தடுத்து வைக்கப்படும் எவரும் “உச்ச ஆபத்தான சித்திரவதைகளுக்கு உட்படுவதாகவும் இவர்களுக்கு அனைத்துலக ரீதியான பாதுகாப்பு என்பது தேவைப்படுவதாகவும்” பிரித்தானிய நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், “பிரித்தானிய உச்ச நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் போன்ற அனைத்து நீதிமன்றங்களும் இப்புதிய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்” என குடிவரவுச் சட்டவாளர் அருண் கணநாதன் தெரிவித்துள்ளார். இப்புதிய புகலிடக் கோரிக்கையாளர் தொடர்பான தீர்மானமானது ஏனைய நாடுகளிலும், ஐரோப்பிய ஒன்றியத்திலும் செல்வாக்குச் செலுத்தும் எனவும் சட்டவாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் தஞ்சம் புகுவதற்கு முன்னர் சிறிலங்கா பாதுகாப்பு படையினரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு அல்லது பாலியல் வன்புணர்வுகளுக்கு உட்படுத்தப்பட்ட பலர் சார்பாக வாதாடி வரும் புலம்பெயர் சட்டவாளர்களுக்கு இப்பரீட்சார்த்த தீர்மானமானது வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளது. பிரித்தானியாவிலிருந்து சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்களில் 15 பேர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியாவிலிருந்து திருப்பி அனுப்பப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு விமானநிலையத்தில் தடுத்து வைக்கப்படாது இவர்கள் அவர்களது வீடுகளுக்குச் சென்று சில நாட்களின் பின்னர் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுவதாக, புகலிடம் கோரும் தமிழர்கள் சார்பான வழக்குகள் விசாரணை செய்யப்பட வேண்டிய புதிய வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிலங்காவிலும், வெளிநாடுகளிலும் அரசியல் ரீதியாகச் செயற்படும் பல்வேறு தரப்பட்டவர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரித்தானியா, பிரான்ஸ், நோர்வே, கனடா போன்ற பல்வேறு நாடுகளில் செயற்படும் தமிழ் ஆர்வலர்களை சிறிலங்காப் புலனாய்வு அமைப்புக்கள் இணையம் மற்றும் தொலைபேசிகள் வாயிலாக கண்காணித்து வருவதாக பிரித்தானிய நீதிமன்றால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செயற்படுபவர்கள் தொடர்பாக வடக்கு கிழக்கில் வாழ்கின்றவர்கள் மற்றும் புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த சிறிலங்கா அரசாங்கத்திற்குச் சார்பானவர்கள் தகவல் வழங்குவதுடன், சிறிலங்கா அரசாங்க ஆதரவுடன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் செயற்படுத்தப்படும் திட்டம் ஒன்றின் ஊடாக அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் எடுக்கப்படும் ஒளிப்படங்களில் உள்ளவர்கள் அடையாளங் காட்டப்படுகின்றனர்.
சிறிலங்காவில் 2009ல் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் 40,000 தொடக்கம் 100,000 வரையான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக பிரித்தானிய நீதிமன்றில் மேற்கொள்ளப்பட்ட அண்மைய வழக்கொன்றில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்மக்களைப் பாதுகாப்பதற்காக மனிதாபிமான நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது என்கின்ற சிறிலங்கா அரசாங்கத்தின் அறிவிப்பை பிரித்தானிய நீதிபதிகள் மறுத்துள்ளனர்.
போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட வேளையில், சிறிலங்கா அரசாங்கத்தால் தடுத்து வைக்கப்பட்ட 11,000 வரையான முன்னாள் தமிழ்ப் புலி உறுப்பினர்கள் தொடர்பில் எவ்வாறான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தெளிவற்றதாக உள்ளதாக பிரித்தானிய நீதிமன்றம் அறிவித்துள்ளது. எந்தவொரு நீதிமன்ற விசாரணைகளுமின்றி தொடர்ந்தும் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
சிறிலங்காவின் வடக்கில் தொடர்ந்தும் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதாகவும், இங்கு இராணுவமயமாக்கல் அதிகரித்துள்ளதாகவும் தமிழர் பகுதிகளில் சிங்கள இராணுவத்தினர் குடியேறுவதற்கு பெருமளவான நிதி வழங்கப்படுவதாகவும் பிரித்தானிய நீதிமன்றத் தீர்மானத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் வடக்கில் தமிழ் மக்களின் வர்த்தக நடவடிக்கைகளில் சிங்கள இராணுவத்தினர் தலையிடுவதாகவும், இங்கு இராணுவத்தினர் விடுதிகள், உணவகங்கள், பண்ணைகள், கடைகள், சுற்றுலா மையங்கள் போன்றவற்றை நடாத்துவதாகவும், பிரித்தானிய இராணுவத்தை விட சிங்கள இராணுவத்தினர் எண்ணிக்கையில் அதிகம் காணப்படுவதாகவும் பிரித்தானிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் வடக்கில் வாழும் ஐந்து பொதுமக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்ற நிலை காணப்படுவதாகவும் பிரித்தானிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
“சிறிலங்காவில் ஒவ்வொரு ஆண்டும் காணாமற் போதல் சம்பவங்கள் குறைவதற்குப் பதிலாக அதிகரித்துச் செல்கிறது. குறிப்பாக சிறிலங்காவில் சமாதானம் நிலவும் தற்போதைய நிலையில் மனித உரிமை மீறல்கள் மேலும் அதிகரித்துள்ளன” என பிரித்தானிய நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
“சிறிலங்காவில் ஒவ்வொரு ஆண்டும் காணாமற் போதல் சம்பவங்கள் குறைவதற்குப் பதிலாக அதிகரித்துச் செல்கிறது. குறிப்பாக சிறிலங்காவில் சமாதானம் நிலவும் தற்போதைய நிலையில் மனித உரிமை மீறல்கள் மேலும் அதிகரித்துள்ளன” என பிரித்தானிய நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
No comments
Post a Comment