Latest News

July 30, 2013

வடமாகாணசபைத் தேர்தலுக்கு இந்தியாவின் அழுத்தமே காரணம் : விஜித ஹேரத்
by admin - 0

வடமாகாணசபைத் தேர்தல் வடக்கு மக்களின் ஜனநாயகத்தை நிலைநிறுத்த இடம்பெறவில்லை. மாறாக இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே வடக்குத் தேர்தல் இடம்பெறுகின்றது என ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

பெலவத்தையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஜனநாயகம் நிலவுவதாக பல்வேறு கதைகளைக் கூறும் அரசாங்கம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனநாயத்தை சீரழிக்கின்றது. இடம்பெறவுள்ள மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் நாட்டின் அபிவிருத்திக்கோ அல்லது ஜனநாயகத்திற்கோ உட்பட்டதல்ல. இதில் அடக்குமுறையே தலைதூக்கும்.

இந்நிலையில் வடக்கு மாகாண சபைத் தேர்தலானது இந்தியாவின் அழுத்தத்தாலும் பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தவுமே இடம்பெறுகின்றது.

வடக்குத் தேர்தலானது சுயாதீன தேர்தலாக இடம்பெறாதென்பது தெளிவாக தெரிகின்றது. பொலிஸ் ஆணைக்குழுவோ அல்லது சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவோ நியமிக்கப்படவில்லை. அங்கு சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்படவில்லை. இராணுவ நிர்வாகமே இடம்பெறுகின்றது.

சர்வாதிகார குடும்ப ஆட்சியே இங்கு இடம்பெறுகின்றது. தேர்தல் வேட்பாளர்களாக அமைச்சர்களின் மகன்மாரும் அவர்களது உறவினர்களுமே போட்டியிடுகின்றனர். எனவே மக்கள் தமது வாக்குகளை சரியான வகையில் பயன்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

« PREV
NEXT »

No comments