Latest News

July 07, 2013

தமிழீழம் என்ற ஒற்றைக் கோரிக்கையில் இறுதி வரை உறுதியாக இருந்தது பிரபாகரன் மட்டுமே
by admin - 0

ஈழப் படுகொலைகள் நடந்து முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், காலத்தாலும் அது கொடுத்த படிப்பினைகளாலும் சத்தியசீலன் முக்கியத்துவம் பெறுகிறார். 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஈழத்தில்
அனைத்து ஆயுதக் குழுக்களும் உருவாக அஸ்திவாரமாக இருந்த 'தமிழ் மாணவர் பேரவை’ அமைப்பை நிறுவிய
சத்தியசீலன், சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அவரைச் சந்தித்தபோது... ''இலங்கையில் சிறுபான்மை   தமிழ்ச் சமூகம் அரசுத் துறைகளில் செல்வாக்குச் செலுத்தியது,
ஒரு பொறாமையாக சிங்களர்களிடையே உருவானது. இதனால், தமிழர்களைக் கட்டுப்படுத்த வேண்டும்
என்று அடுத்தடுத்து தமிழர் விரோதச் சட்டங்களைக் கொண்டுவந்தனர். இந்த அதிருப்திக்குள் மாணவர்கள்
அழைத்து வரப்படக் காரணமாக இருந்ததுதான், 1970-ல் கொண்டுவரப்பட்ட தரப்படுத்துதல் சட்டம்.
அப்போது நான், அரியரட்ணம், முதல் தற்கொலைப் போராளியான சிவக்குமாரன், முத்துக்குமாரசாமி,
வில்வராஜா, இலங்கை மன்னன் என இன்னும் பலரும் இணைந்து 'தமிழ் மாணவர் பேரவை’ என்ற அமைப்பை உருவாக்கினோம். அடுத்த சில நாட்களில் அனைத்து பள்ளிக் கல்லூரி மாணவர்களையும்
ஒருங்கிணைத்து ஊர்வலம் ஒன்றை நடத்தினோம். ஆனால், அது போலீஸாரால் கடுமையாக ஒடுக்கப்  பட்டது. சே குவேராவின் சிந்தனையும் கம்யூனிசமும் தமிழ் இளைஞர்களிடையே செல்வாக்குச் செலுத்த... அதன்
போக்கில் ஆயுதப் போராட்டமாக உருமாற்றம் அடைந்தது. ஆயுதம் வாங்க, அமைப்பைக் கட்டமைக்கப் பணம்
தேவைப்பட்டது. இந்த எண்ணம் வேர் விட்டபோது பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறையைச் சார்ந்தவர்களின்
உதவியும் ஆதரவும் முதன்முதலாக எங்களுக்குக் கிடைத்தது. கொஞ்சம் டைனமைட் வாங்கவும், ஈழத்துக்கான
தேசிய கீதம் பண்ணவும் நான் சென்னை வந்தேன். பிரபாகரன், அவரது அண்ணன்மனோகரன், ஜோதிலிங்கம்,
ஜெகன், குட்டிமணி, தங்கதுரை அனைவரும் ஒருங்கிணைந்தோம். அதில் மிகவும் இளையவர் தம்பி பிரபாகரன். அப்போது ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் 'பர்னிங்’ என்றொரு கட்டுரை வந்தது. அதில்
மொலாக்கோ என்பவர் கண்டுபிடித்த 'மொலாக்கோ காக்டெயில்’ என்ற
குண்டை எப்படித் தயாரிப்பது என்ற கட்டுரை வந்தது.
அதைவைத்து குண்டு செய்தோம். ஓர் அறையில்
வைத்து குண்டு தயாரித்தபோது பிரபாகரனின் கால் பட்டு அந்தக்
குண்டு வெடித்தது. அதில் ஒருவர் படுகாயமடைந்தார். பிரபாகரனுக்கு அதிலிருந்துதான் கரிகாலன் என்ற பெயர் வந்தது. 1972-க்கு முன்னரே இலங்கை அமைச்சர் சோம வீர சந்திரசிறி, யாழ் மேயரும் மக்கள்
விரோதியுமான ஆல்பிரட் துரையப்பா போன் றோரைக் கொல்லத் திட்டம்
தீட்டினோம். அது தோல்வியில் முடிந்தாலும்கூட, அது உருவாக்கிய மன
எழுச்சி, பெரும் அரசியல் நெருப்பாக உருவானது. அந்த வேட்கையை 1975-ல்
ஆல்பிரட் துரையப்பாவைக் கொன்று நிறைவேற்றினார் பிரபாகரன்.
அடுத்தடுத்து பல வங்கிக் கொள்ளைகள் நடந்தன. தேடப் படும் குற்றவாளியான நான், 1973-ல் கைது செய்யப்பட்டேன். கோப்பாய் வங்கிக் கொள்ளை யில்
ஈடுபட்டு சிவக்குமாரன், முதல் சயனைட் போராளி ஆனார். நான்
கைதுசெய்யப்பட்டதோடு 'தமிழ் மாணவர் பேரவை’யின் வரலாறு முடிந்தாலும், புதிய போராளிக் குழுக்களின்
தொடக்கமாக அது இருந்தது!'' - பெருமூச்சோடு வரலாற்றை நினைவுகூர்கிறார் சத்தியசீலன். ''உங்களுக்கு அப்போது உலகம் முழுக்க ஆதரவு இருந்ததுதானே?'' ''ஆமாம்... 'சோஷலிசத் தமிழீழம்’ என்னும் கோஷமே இருந்தது. அதுவரை அரசியல் செய்த தமிழரசுக் கட்சியின்
கொள்கைகளில் மாற்றம் தேவை என்ற எண்ணம் எல்லோரிடமும் இருந்தது. அதுதான் 'சோஷலிசத்
தமிழீழத்தை நோக்கி’ என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதிய ஆன்டன் பாலசிங்கத்தை பிரபாகரனிடம்
கொண்டுபோய்ச் சேர்த்தது. தமிழகம் நோக்கி வந்த எங்கள் இளைஞர்கள் பாலஸ்தீனம் வரை சென்று ஆயுதப்
பயிற்சி பெற்றார்கள். 2,000 ரூபாய்க்கு டைனமைட் வாங்க அலைந்த காலம் மாறி, கற்பனைக்கு அப்பாற்பட்ட
ஆயுதங்கள் எங்கள் கைகளுக்கு வந்துசேர்ந்தன!'' '' 'தமிழீழம் மலர்ந்தால், அதை ஆதரிப்பவர்கள்கூட அந்த தேசத்தில் வாழ முடியாது’ என அமெரிக்கத் தூதர் 1987-ல்
செய்தி அனுப்பியதாக 'விக்கிலீக்ஸ்’ கூறுகிறதே?'' ''அதிநவீன ஆயுதங்கள் எங்களுக்குக் கிடைத்தன. மக்கள் நடமாடும் வீதிகளிலும், சந்தைப் பகுதிகளிலும் உடல்
முழுக்க ஆயுதங்களைச்சுற்றிக் கொண்டு இளைஞர்கள் வலம் வந்தார்கள். அது மக்களிடம் பொடியள்
(போராளி இளைஞர்கள்) பற்றிய பெரிய கவர்ச்சியை உருவாக்கியது. அதன் ஆபத்தை அப்போது மக்கள்
உணரவில்லை. 1985-ம் ஆண்டிலேயே சகோதரப் படுகொலைகள் தொடங்கிவிட்டன. சகிப்புத்
தன்மை இல்லாமல் போய் சின்னச் சின்னக் கருத்து முரண்களைக்கூட ஆயுதங்களால் தீர்த் துக்கொண்டார்கள்.
எல்லா இயக்கங்களும் இணைய வேண்டும் என்று பலரும் விரும்பினார் கள். ஆனால், நிலைமை கை மீறிச் சென்றுவிட்டது. ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் வகைதொகை இல்லாமல் இளைஞர்களும், முக்கியச்
சிறப்பு வாய்ந்த தலைவர்களும் கொல்லப்பட்டார்கள். அப்போதே எங்களுடைய தோல்வி தொடங்கிவிட்டது!'' ''மற்ற போராளித் தலைவர்களுக்கும் பிரபாகரனுக்கும் உள்ள வித்தியாசம்?'' ''வயதில் சிறியவராக இருந்தாலும் பக்குவப்பட்டவராக அவர் இருந்தார். தான் நம்பிய விஷயங்களில்
தன்னோடு இருப்பவர்களும் உண்மையாக இருக்க வேண்டும் என்று முன்மாதிரியாக இருந்தார். பல அரசியல்
ராஜதந்திர நகர்வுகளில் அவர் இசைந்துபோனாலும்கூட, தமிழீழம் என்ற ஒற்றைக் கோரிக்கையில்
இறுதி வரை உறுதியாக இருந்தது பிரபாகரன் மட்டுமே. மற்றவர்கள் இலங்கை அரசோடு சமரசமாக செல்லத்
தயாராகவே இருந்தனர்!'' ''உலகிலேயே செல்வத்திலும் செல்வாக்கிலும் வசதியான
அமைப்பு புலிகள் இயக்கம். இன்று அவர்களுடைய
சொத்துகள் என்னவாகின?'' ''ஐரோப்பிய நாடுகள் முழுக்க மக்கள் இந்தக் கேள்வியைக்
கேட்கிறார்கள். அமைப்பில் நிதிப் பொறுப்பாளராக இருந்த
காஸ்ட்ரோ இன்று இல்லாத நிலையில், பல மில்லியன் டாலர்
மதிப்பிலான அசையும், அசையாச்
சொத்துகளை வைத்திருந்தவர்கள்,
இன்று பொறுப்பு ஏற்கவில்லை. ஒவ்வொரு நாட்டிலும் ஒரு பொறுப்பாளர் இருந்தார். போர் ஆரம்பித்த பின்பு,
அவசர கால நிதி என்று திரட்டினார்கள். உணர்ச்சிவசப்பட்ட
மக்கள் வங்கிகளில் கடன் வாங்கி பல பத்தாயிரம்
பவுண்ட்ஸ்களையும், யூரோக்களையும், டாலர்களையும்
கொட்டிக் கொடுத்தார்கள். வீடுகளை அடகுவைத்துக்
கொடுத்தவர்கள் எல்லாம் இப்போது வட்டி கட்டிக்கொண்டு அலைகிறார்கள். ஆனால், வசூலித்தவர்கள் வசதியாக வாழ்கிறார்கள். ஈழத்தில்
எல்லாவற்றையும் இழந்துவிட்ட மக்களுக்குப் பணத்தைப் பிரித்துக் கொடுத்தால்கூடப் பல நூறு கோடி ரூபாய்
மிச்சம் இருக்கும். அந்த அளவுக்குப் புலிகளுக்குச் சொத்து இருந்தது. ஆனால், பிரபாகரனைப் போல
நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!'' ''ஈழத் தமிழர்களுக்கு இன்று நம்பிக்கை தரும் அமைப்பு எது?'' ''சில அமைப்புகள் சடங்கார்ந்த விழாக்களை நடத்துவதோடு சரி. பிரித்தானிய தமிழர் பேரவை போன்ற சில
அமைப்புகள் அரசியல்ரீதியாகச் செயல்படுகின்றன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், உலகெங்கும் வாழும் ஈழ
மக்களை ஒருங்கிணைக்கும் அமைப்பாக உள்ளது. இதெல்லாம் ஏதோ ஒரு வகையில் தாயகத்துக்கு வெளியில்
செயல்படும் அமைப்புகள். ஈழத்துக்குள் முறையான அரசியல் அமைப்புகள் உருவாகாமல்போனால், அது தமிழ்
மக்களின் எதிர்காலத்தையே கேள்விக்கு உள்ளாக்கிவிடும்!''
 ''பிரபாகரன் மற்றும் ஐந்தாவது ஈழப் போர் தொடர்பாக உங்கள் கருத்து என்ன?'' ''போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன.
இப்போது இலங்கை அரசு நடத்திக்கொண்டிருப்பது உளவியல் போர். அந்தப் போரின் ஓர் அம்சமாக பிரபாகரன்
தொடர்பான சர்ச்சைகளைப் பயன்படுத்திக்கொள்கிறது. 'அவர் விரைவில் வருவார்’ என்கிற பிரசாரத்தின்
வாயிலாக 'அவர் வந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளட்டுமே’ என்கிற தயக்கத்தை உருவாக்கிவருகிறார்கள்.
கசப்பானதாகவே இருந்தாலும், யதார்த்த சூழலை எதிர்கொள்ள வேண்டும். போராட்டத்தைக்
கைவிட்டு யாருக்காகவும் காத்திருந்தால், தமிழர் என்ற ஓர் இனமே அழிந்துவிடும் என்கிற சூழல்தான் இருக்கிறது!'' - 

டி.அருள் எழிலன், படம்: கே.கார்த்திகேயன் (ஆனந்த விகடன் இதழில் இருந்து)
« PREV
NEXT »

No comments